வான்மதி என்ற எனது தமிழ் மொழிப் பெயர், நேயர் ஒருவரால் வழங்கப்பட்டது. இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்தது.
பெய்ஜிங் மாநகரில் பிறந்து வளர்ந்த நான், பெய்ஜிங்கில் தான் கல்வி பயின்று, வேலை செய்கின்றேன். இம்மாநகரின் நான்கு பருவங்களில் நான் கோடைக்காலத்தை மிகவும் விரும்புகின்றேன்.
2002ஆம் ஆண்டு சீன நிலவியல் பல்கலைக்கழகத்தின் வர்த்தக நிர்வாகத் துறையிலிருந்து படிப்பை முடிந்து கொண்ட பின், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவில் சேர்ந்து, ஆசிரியர் பி. லூசா அவர்களிடமிருந்து தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். அந்நிய மொழியைக் கற்றுக் கொள்வதன் மீது எப்போதும் பேரார்வம் கொண்ட என்னைப் பொறுத்த வரை, இது ஓர் அரிய வாய்ப்பாகும்.
சுமார் ஒன்றரை ஆண்டுகாலத்துக்குப் பின், அதிகாரப்பூர்வ பணியில் ஈடுபடத் துவங்கினேன். மக்கள் சீனம், நேயர் விருப்பம், இசை நிகழ்ச்சி, சீனச் சமூக வாழ்வு ஆகிய நிகழ்ச்சிகளை மொழிப்பெயர்த்து அறிவிக்கும் பணிக்குப் பொறுப்பேற்றேன். செய்தித் தொகுப்பை அறிவிக்கும் பணிக்கும் பொறுப்பேற்றேன். 2008ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, சக பணியாளர் மீனாவுடன் நேயர் கடிதம் தொடர்பான பணிக்குப் பொறுப்பேற்றுள்ளேன். இந்தப் பணி சுமையாக இருந்த போதிலும், நேயர்களுக்கு பரிச்சயமானவராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அனைத்து நேயர்களுடனும் நண்பர்களாக இருக்க விரும்புகின்றேன்.
ஓய்வு நேரத்தில் பாடல் கேட்டு ரசிக்கவும், நூல் படிக்கவும், திரைப்படம் கண்டு ரசிக்கவும் விரும்புகின்றேன். சில சமயம் சிறப்பு உடற்பயிற்சி மன்றுத்துக் சென்று உடற்பயிற்சி செய்கின்றேன். உடல் நலமாக இருந்தால் மேலும் செவ்வனே வேலை செய்ய முடியும் என்று கருதுகின்றேன்.
இன்பமான குடும்பம் போன்ற தமிழ்ப் பிரிவில் அதிர்ஷ்டவசமாக சேர்ந்த நான், தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வேலை செய்வேன் என்று நம்புகின்றேன்.
|