• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:34:36    
க்ளீட்டஸ்

cri
அன்பினிய நண்பர்களே,

சிற்றலை வானொலி என்ற சீர்மிகு ஊடக உலகில், சீனத்து இசைநயத்தோடு தமிழ் பேசும் பைங்கிளியாய் உங்கள் உள்ளத்து உணர்வுகளை கவர்ந்திழுத்த சீன வானொலி தமிழ்ப்பிரிவில் 2006 ஏப்ரல் திங்களில் நானும் இணைந்தேன்.

பள்ளி, கல்லூரி என கல்விப்பருவம் எல்லாமே தமிழகத்தின் தலைநகரான சிங்காரச் சென்னையில். காட்சித் தொடர்பியலில் இளங்கலையும், சமூக மேம்பாட்டில் முதுகலையும் சென்னை லொயோலா கல்லூரியில். விளம்பரத்துறை சார்ந்த பணியில் ஓராண்டு, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, தொடர்பியல், ஊடகப் பயிற்சி ஆகியவற்றில் 3 ஆண்டுகள், சிற்றலை வானொலி அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக, கடந்த 8 ஆண்டுகள்.

அறிவியலும், தொழில்நுட்பமும் அதி நவீன மாற்றங்களும் நம் வாழ்க்கையை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றன. அதேவேளையில், நமது மொழியும், பண்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்துகொண்டிருக்க, நம்மையே அறியாமல் மொழி, இன அடையாளங்களே இல்லாதவர்களாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம். ஊடகங்கள் இந்த மறைமுக குழப்படியில் பெரும்பங்கு வகிப்பதை, அதை உணர்ந்தவர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள். இருப்பினும் சிற்றலை ஊடகங்கள் மட்டும் எங்கோ தூரத்தில். கிணற்றிலிருந்து கேட்கும் குரலாய் ஒலித்துக்கொண்டிருந்தாலும், கொள்கை பிடிப்பும், கொண்ட லட்சியமும் மாறாமல் விதிவிலக்காய் நமது மொழியின் வளர்ச்சிக்கு பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் செஞ்சீன மண்ணிலிருந்து செழுமையான தமிழில், வளமான தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கும் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தமிழ் மக்களுக்கு ஒரு அரிய நற்கொடை எனலாம்.

பண்பலை வானொலிகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும் அறுசுவை விருந்து படைக்கும் நிலையில், பத்திய உணவு வேண்டும் வெகுளிகளாக சிற்றலை வானொலி நேயர்கள் பல நேரங்களில் பார்க்கப்படுவதுண்டு. ஆனால் பழகியவர்களுக்குத்தானே அதன் மேன்மை புரியும். வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, வாழ்க்கையில் அது ஒரு முக்கிய அம்சம் என்றாகிப்போன சிற்றலை வானொலி நேயர்கள் ஏராளம். திரையரங்கின் இடைவேளையில், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில், பேருந்தில் பயணம் செய்கையில் என எளிதில் சிக்காத சிற்றலை அலைவரிசையை ஒரு வேள்வியாக பாவித்து கேட்கும் அன்பர்களும் உண்டு. சிற்றலை வானொலி மீதான பற்றில் கடிதங்களும், கருத்துக்களும் எழுதி பதிவு செய்துள்ள, கின்னஸ் உலக சாதனைகளுக்கு சவால் விடும் நேயர் நண்பர்களை நான் அறிவேன். அன்பு நண்பர்களே நீங்கள் உள்ளவரை சிற்றலை என்ற ஊடகத்துக்கு எப்போதும் தொய்வில்லை, நிச்சயம் தோல்வியில்லை.

இதோ இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கூட சிற்றலை வானொலியோடு நிச்சயம் ஏதோ விதத்தில் தொடர்புடையவராகத்தான் இருப்பீர்கள். இல்லையெனில் அப்படியென்ன சிற்றலையில் இருக்கிறது என்ற எண்ணம் இப்போது உங்களுக்கு எழக்கூடும். எழுந்தால், இந்த இதழில் காணப்படும் சீன வானொலி தமிழ்ப்பிரிவை கேட்பதற்கு உதவும் தகவல்களை பயன்படுத்தி, முயன்று பாருங்கள். செவியினிக்க, கொஞ்சு தமிழ் பேசும் எமது சீனத்து குயில்கள் உங்களுக்காய் காத்திருக்கும்.

சிற்றலையில் சிறு குரலாய்,

சீன மண்ணிலிருந்து,

உங்கள் நண்பன்,

க்ளீட்டஸ்...