அன்பான அன்னையார் லேய் யன் பாங்
cri
லேய் யன் பாங் அம்மையார், குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் நன் நிங்கிலுள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகத்தில் சிறப்பு ஆசிரியராக வேலை செய்கிறார். அவரது பக்கத்தில் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர். அவர் "லேய் அன்னை" என அவர்களால் அழைக்கப்படுகிறார். லேய் யன் பாங் அம்மையாரின் கணவர் ஒரு ராணுவத்தினராவார். 2000ஆம் ஆண்டில் அவர் தமது கணவருடன் சேர்ந்து, சொந்த ஊரான ஹு நன் மாநிலத்திலிருந்து குவாங் சிக்குச் சென்று, நான் நிங் நகரின் காப்பகத்தில்
பராமரிப்புப் பணியாளராக பணியாற்றத் தொடங்கினார். தொடக்கத்தில் முதியோரைப் பராமரித்து, அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கும் பணியை அவர் ஏற்றார். நான் நிங்கில் பல இடங்களில் மக்கள் வட்டார மொழியில் பேசுவது வழக்கம். அவர்கள் பேசும் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள லேய் யன் பாங்கிற்கு கடினமாக இருந்தது. அவர்களுடன் உரையாட முடியவில்லை. ஆகவே, தாம் பராமரித்த முதியோர்களின் குடும்பத்தினர் வரும் போதெல்லாம், அவர்களுக்கிடை உரையாடலை புரிந்து கொள்ள அவர் முயற்சி செய்தார். படிப்படியாக, பொதுவான சீன மொழியின் தொனியை சிறிதளவில் மாற்றினால் வட்டார மொழியின் உச்சரிப்பாக மாறும் என அவர் கண்டறிந்தார். அவர்களுடன் உரையாட தன்னால் இயலும் என்பதில் லேய் யன் பாங் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்தக் காப்பகத்தில், சிறப்புப் பள்ளி ஒன்று அமைக்கப்பட்டது. லேய் யன் பாங் அம்மையார், முதல் தொகுதி ஆசிரியர்களில் ஒருவராக மாறினார். இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட 2 முதல் 9 வயதான குழந்தைகள் ஆவர். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இந்தக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, நிர்வாக அலுவல்களைச் சமாளித்து, குழந்தைகளுடன் இணைந்து விளையாடுகிறார். பரப்பரப்பாக இருந்த போதிலும் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். காப்பகத்தில் லேய் யன் பாங்கால் நீண்டகாலத்திற்கு வேலை செய்ய முடியாது என பலர் முன்கூட்டியே கூறினர். ஆனால், அவர் இப்பணியில் 8 ஆண்டுகளாக ஊன்றி நின்றுள்ளார். தனது உறுதியான குணாதிசயம், இப்பணியில் ஊன்றி நிற்க காரணமாகும் என்று அவர் தொகுத்துக் கூறினார். "அனைத்தையும் செவ்வனே செய்ய
விரும்புகின்றேன். தோல்வியை விரும்பவில்லை" என்றார் அவர். முதியோருக்கான பராமரிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால், குழந்தைகளுக்கான பராமரிப்பு மேலும் கடினமானது என்பதை லேய் யன் பாங் ஆழமான முறையில் உணர்ந்துள்ளார். குழந்தைகளின் நுண்ணிய மனம் மேலும் பலவீனமாக இருக்கிறது. ஆசிரியர்களின் பேச்சும் செயல்பாடும் கவனமாக இருக்க வேண்டும். பார்ப்பதற்கு இயல்பான செயல்கள் கூட குழந்தைகளைப் புண்படுத்தக் கூடும். "குழந்தைகள் பலர் 'அன்னை' என என்னை அழைக்கும் போது, ஒரு முறை மட்டும் அவர்களுக்கு பதில் அளித்தால், 'ஏன் அன்னையார் எனக்குப் பதில் அளிக்கவில்லை' என அவர்களில் சிலர் நினைத்திருப்பார்கள்" என்று லேய் யன் பாங் விளக்கிக் கூறினார். இதனால், குழந்தைகளுடன் பழகும் போது, நிகழக் கூடிய பல்வேறு நிலைமைகளை இயன்ற
அளவில் அவர் கருத்தில் கொள்கிறார். காலை 8 மணிக்கு வேலையைத் தொடங்கும் லேய் யன் பாங், இரவு 10 மணிக்கு வீடு திரும்புகிறார். அவரது பணிக்கு வசதி வழங்கும் பொருட்டு, வீட்டை வாங்கிய போது, அவர் வேலை செய்யும் காப்பகத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பை அவரது குடும்பத்தினர் தெரிவு செய்தனர். தாயை விட தந்தை மேலும் அன்பாக இருக்கிறார் என அவரது 6 வயதான மகன் அடிக்கடி கூறுகிறார்.
|
|