குவோவை வெற்றிக்கொள்ள குறுக்குவழி
cri
சீன மொழியில் jia tu mie guo என்ற ஒரு சொற்றொடர் உண்டு. எல்லா மொழியிலும் பொதுவாக இது போன்ற மொழிவழக்கு, மொழி மரபுத்தொடர்களும், சொற்றொடர்களும் இருப்பதுண்டு. jia tu mie guo என்றால் குவோவை வெற்றிகொள்ள குறுக்குவழியை இரவல் கேட்பது என்று பொருள். அவ்வண்ணமே chun wang chi han என்ற சொற்றொடருக்கு உதடுகளில்லாது போனால் பற்களுக்கு பாதுகாப்பில்லை என்று பொருள். இவ்விரண்டு சொற்றொடர்களும் வழக்கத்தில் வருவதற்கு ஒரு சிறிய கதை ஒன்று உண்டு. கிமு 658ம் ஆண்டில் ச்சின் நாடு யு நாட்டு அரசனுக்கு மிகவும் அழகான விலைமதிப்புள்ள அன்பளிப்புகளை அனுப்பி, குவோ நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்காக யு நாட்டின் வழியே குறுக்குவழியில் செல்ல தமது படைகளை அனுமதிக்குமாறு வேண்டியது. யு நாட்டினூடாக சென்றால் குவோவை எளிதில் சென்றடையலாம். ஆனால் இந்த அன்பளிப்புகளையும் அதற்கு பின்னணியிலான கோரிக்கையையும் கேட்ட யு நாடின் அமைச்சர், அரசனிடம் இந்த கோரிக்கையின் பின்னணியில் அமைந்த ஒரு ஆபத்தை எடுத்துரைத்தான். "அரசே, யுவும் குவோவும் உதடுகளும், பற்களும் போல. உதடுகள் இல்லாது போனால் பற்களுக்கு அரணில்லை, பாதுகாப்பில்லை. குவோவை வென்றழித்த பின் அடுத்த இலக்கு யு தான். நமது நாட்டுக்குத்தான் இது ஆபத்தாக முடியும்" என்று அமைச்சர் எச்சரித்தார். ஆனால் அன்பளிப்புகளில் மனம் லயித்த அரசன், ஜின் நாட்டுக்கு தனது நாட்டினூடாக படைகளை குறுக்குவழியில் அனுப்பி குவோ நாட்டை தாக்குவதற்கு ஒப்புதல் கூறினான். எதிர்பார்த்தபடி குவோவை ஜின் நாட்டு படைகள் வெற்றிகரமாக தாக்கி வாகை சூடின. ஆனால் அத்தோடு ஜின் நாட்டு தாக்குதல் நிற்கவில்லை. அடுத்த இலக்காக, குறுக்குவழியாக பயன்பட்ட யு நாட்டையும் நாடு திரும்பும் வழியில் ஜின் நாட்டு படைகள் தாக்கின. வெற்றியும் கொண்டன. பின்னாளில் ஒருவருக்கு தீங்கிழைக்க மற்றவரை பயன்படுத்திக்கொண்டு பின் அந்த மற்றவருக்கும் தீங்கேற்படுத்துவதை குறிக்க jia tu mie guo, குவோவை வெற்றிகொள்ள குறுக்குவழியை இரவல் கேட்பது என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதேபோல், நெருக்கமான ஒரு தொடர்பின், உறவின் ஒரு பகுதி நீக்கப்பட்டால், அடுத்த பகுதியும் ஆபத்துக்குள்ளாகும் என்பதை குறிக்க, chun wang chi han உதடுகளில்லாது போனால் பற்களுக்கு பாதுகாப்பில்லை என்ற சொற்றொடர் உருவகமாக பயன்படுத்தப்பட்டது.
|
|