மதிப்புக்குரிய அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைமைச் செயலாளர் திரு பல்லவி பரமசிவன் அவர்களே,
மதிப்புக்குரிய ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் திரு நாச்சிமுத்து அவர்களே,
விருந்தினர்களே, நண்பர்களே, வணக்கம்.
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு துவங்கியதன் 45வது ஆண்டு நிறைவு நாளாகும். இதை முன்னிட்டு, சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் WANG GENG NIAN அவர்களின் சார்பில், தமிழ் ஒலிபரப்பை துவக்கி வளர்க்கும் அனைத்து பணியாளர்களுக்கும், குறிப்பாக, பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மூத்த தோழர்கள் தோழியருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீண்டலாகமாக, சீன மக்களுக்கும் இந்தியா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த தமிழ் நேயர்களுக்கும் இடையில் பரஸ்பரப் புரிந்துணர்வையும் நட்புறவையும் அதிகரிக்கும் நோக்கத்துடன், நமது தமிழ் ஒலிபரப்பு நாளுக்கு நாள், சீனா மற்றும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த தகவல்களை மிகப்பல நண்பர்களுக்கு அறிவித்து வருகிறது. தெற்காசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும் நட்புப் பாலமாக தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில், தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த தலைமுறை தலைமுறையான பணியாளர்கள் அனைவரும், தமிழ் ஒலிபரப்புப் பணியை செவ்வனே செய்வதில் நிறைந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தமி்ழ் நேயர்களுக்கு வண்ணமயமான நிகழ்ச்சிகளை உருவாக்கி, உணர்வுப்பூர்வமாக தயாரித்து வருகின்றனர். 2004ஆம் ஆண்டில், இணையதள தமிழ் ஒலிபரப்பு துவங்கியது. இதன் மூலம் நமது தமிழ் ஒலிபரப்பின் பரவல் மிகப் பெருமளவில் விரிவாக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கும் மற்றொரு வழிமுறை, மிகப்பல தமிழ் நேயர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேயர்களுடனான நட்புப் பரிமாற்றமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வரை தமிழ் ஒலிபரப்பு பெற்றுள்ள சாதனைகள், நேயர்களின் ஆதரவு மற்றும் உதவியிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. சீன மக்களுடன் நட்பார்ந்த பரிமாற்றத்தை வலுப்படுத்துவதில் தமிழ் நேயர் மன்றங்கள் சிறப்பு பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது. அவற்றின் முயற்சியுடன், சீனா மற்றும் சீன மக்கள் பற்றி நன்றாக அறிந்து கொண்ட நீண்டகால நண்பர்களாக நேயர்கள் பலர் மாறியுள்ளனர். மேலும், சீன வானொலி நிலையத்தில் தமிழ் நேயர்கள் அனுப்பிய கடிதங்களின் எண்ணிக்கை எப்போதும் முன்னணியில் உள்ளது. இதற்காக, முன்னெப்போதும் போல் நமது ஒலிபரப்பைக் கேட்டு, சீன வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வரும் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்கால வளர்ச்சியில், நிகழ்ச்சியின் புத்தாக்கம், பணிக் குழுவின் கட்டுமானம், நேயர்களுடனான தொடர்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றில் தமிழ்ப் பிரிவு புதிய நிலையை உருவாக்கி, புதிய சாதனைகளைப் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன்.
தமிழ் ஒலிபரப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
தமிழ் நேயர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்க வாழ்த்துக்கள்.
நன்றி.
|