• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-06 10:07:19    
வெள்ளோடை மங்கை

cri

ச்சின் என்ற நாட்டை பேரரசர் ஆன் ஆண்ட காலத்தில், ஹோகுவான் என்ற இடத்தில் சியே துவான் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். தாய் த்ந்தை, உரவினர் யாருமில்லாது, அனாதையாய் வளர்ந்த சியே துவானை, அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கொஞ்சம் பரிவோடு பார்த்துக்கொண்டார். 18 வயதாகும்போது அவன் மிகவும் நேர்மையான, அடக்கமான, சட்டத்துக்க கட்டுப்பட்ட ஒரு இளைஞனாக இருந்தான். இளம் வயதில் இத்தகைய நன்மதிப்பீடுகளை கொண்ட இவனை பலருக்கும் பிடித்திருந்தது. ஆக 18 வயதானதும், தனது வீட்டை தானே சொந்தமாக நிர்வகிக்க ஆரம்பித்தான் சியே துவான். இருப்பினும் அவன் திருமணம் செய்துகொள்ளவில்லையே என்பதில் கரிசனை கொண்ட அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவனை விரைவில் ஒரு பெண்ணை பார்த்து மணம் முடித்து மனைவியாக்கும் படி அறிவுறுத்தினர். ஆனால் இதையெல்லாம் சியே துவான் காதில் வாங்கியதாக தெரியவில்லை. அண்டை வீட்டாரின் கரிசனையான வார்த்தைகள் திருமணத்தை பற்றியதாயிருந்தால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டான் சியே துவான்.


ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு புறப்பட்டால் வீடு திரும்பி களைப்பாற அவன் அமர அந்தி சாய்ந்து இரவாகிவிடும். வயலில் பொழுது விடிந்து, பொழுது சாயும் கடுமையாக உழைத்தான் சியே துவான். ஒரு நாள் தனது கிராமத்துக்கு அருகே ஒரு பெரிய நத்தையை கண்டெடுத்தான் சியே துவான். ஒரு குறும்பானையளவு இருந்த அந்த நத்தையை ஆர்வத்துடன் வீட்டுக்கு கொண்டு சென்ற அவன், அதை சில வாரங்கள் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில், ஒரு கண்ணாடிக் குடுவையில் வைத்தான்.
அதற்கு பிறகு அவன் ஒவ்வொரு நாளும் வயலுக்குச் சென்று வீடு திரும்பும்போதும், வீட்டில் சூடான உணவும், சுவையான பானமும், வீட்டில் வெப்பமேற்ற நெருப்பும் ஏற்றப்பட்டு எல்லாம் அவனுக்காக தயாராயிருந்தன. அண்டை வீட்டுக்காரர்தான் தன் மீதான பரிவால் இதையெல்லாம் செய்துள்ளார் என்று நினைத்த சியே துவான், சில நாட்கள் கழித்து, அவரிடம் சென்று, அவர் தனக்காக உணவெல்லாம் தயாரித்து வைத்ததற்கு நன்றி கூறினான். ஆனால் அந்த அண்டை வீட்டுக்காரரோ, அதையெல்லாம் நான் செய்யவில்லை, நீ எனக்கு சொல்லத் தேவையில்லை என்று கூறிவிட்டார். தான் நன்றி கூற வந்ததை அண்டை வீட்டுக்காரர் தவறாக புரிந்துகொண்டார் போல் என்று நினைத்தான் சியே துவான்.


ஆனால் ஒவ்வொரு நாள் வீடு திரும்பும்போதும் அவனது வீட்டில் உணவும், பானமும் தயாராகவே இருந்தன. எனவே மீண்டும் அண்டை வீட்டுக்காரரிடம் சென்று, அவன் என்ன ஐயா உணவெல்லாம் வைத்துவிட்டு செல்கிறீர்கள் ஆனால் அதற்கு நன்றி சொன்னால் நீங்கள் அதை செய்யவில்லை என்று மறுக்கிறீர்கள் என்று கேட்க, அண்டை வீட்டுக்காரரோ, எனக்கு தெரியும், நீ ரகசியமாக ஒரு பெண்ணை மணந்துகொண்டாய், அவள் தான் உனக்கு சமைத்துக்கொடுக்கிறாள். பிறகு எதற்கு எனக்கு நன்றி சொல்கிறாயோ தெரியவில்லை என்றார். இதைக் கேட்ட சியே துவானுக்கு அதிர்ச்சி. என்னடா இந்த மனிதர் கடைசியில் நம் மீதே பழிபோடுகிறார் என்று வியந்த சியே துவான், ஒன்றும் புரியாமல் வீடு திரும்பினான். என்னதான் நடக்கிறது என்று அறிய விரும்பி, ஒரு நாள் சேவல் கூவியது வீட்டை விட்டு புறப்பட்ட சியே துவான், விடிந்து சில மணி நேரம் கழித்து வீடு திரும்பி, வீட்டு வெளியிலிருந்து மறைந்து உள்ளே பார்த்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, நத்தை வைத்த கண்ணாடி குடுவையிலிருந்து ஒரு அழகிய மங்கை கீழே இறங்கினாள். பின் சடுதியில் சமையல் வேலையில் ஈடுபட்டாள். மறைந்திருந்த சியே துவான் இப்போது வீட்டினுள்ளே சத்தமில்லாமல் நுழைந்து கண்ணாடிக் குடுவை காலியாக இருப்பதை கண்டு நேராக சமையலைறக்கு சென்றான். அங்கே நின்றிருந்த மங்கையை கண்டு, என்ன பெண்ணே நீ எங்கிருந்து வருகிறாய்? ஏன் எனக்கு நீ சமையல் செய்கிறாய்? என்றான். திடீரென அவன் வந்ததை கண்டு மிரண்ட அந்த மங்கை, கண்ணாடிக் குடுவை நோக்கி ஓட எத்தனித்தாள். ஆனால் அதற்கு வழியில்லை என்று அறிந்த பின், சியே துவானிடம், தான் வான்வெளியில், பால்வீதியில் உள்ள வெள்ளோடையைச் சேர்ந்த மங்கை என்றும். ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தும் உன்னுடைய தனிமையை கண்ட விண்ணுலக பேரரசர் உன் மீது இரக்கம் கொண்டு, சில காலம் உன் வீட்டை பார்த்துக்கொள்ள என்னை அனுப்பினார். இன்னும் பத்தாண்டு காலத்தில் நீ செல்வந்தனாகிவிடுவாய், அழகான ஒரு மனைவியையும் தேர்ந்துடுப்பாய், அதன் பின் நான் உன்னை விட்டு, உன் வீட்டை விட்டு நான் சென்றிருப்பேன். ஆனால் நீ என்னுடைய உருவத்தை, உண்மையை அறிந்துகொண்டதால், இனி நான் இங்கே இருக்க முடியாது. இருப்பினும் நீ கடினமாக உழைத்து பயிர்செய்கையோடு, மீன்பிடிதொழில், விறகுவெட்டுதல் ஆகியவற்றிலும் ஈடுபட்டால் நீ நல்ல செல்வந்தனாவாய். இதோ இந்த ஓட்டை வைத்துக்கொள், இதில் நீ தானியத்தை வைத்தால் எப்போது தீராமல் இருப்பதை காண்பாய் என்று கூறினாள். சியே துவான் அவளை போகவேண்டாம் என்று மன்றாடியும், அவள் மறுத்து தீடிரென காற்றோடு காற்றாய் மறைந்துபோனாள். அதன் பின் வெள்ளோடை மங்கைக்கென சியே துவான் ஒரு சிறு வழிபாட்டிடத்தை கட்டினான். கடுமையாகஉழைத்து செல்வந்தனானான். அவனது அண்டை வீட்டுக்காரர்கள் அவனுக்கு அழகான பெண்ணை மணம் முடித்து வைத்தனர். பின்னாளில் அவன் நீதிச்சட்டத்துக்கு பொறுப்பான ஒரு பெரிய அதிகாரியானான்.
நம்பிக்கையான நாய்


ஜின் வம்சத்தின் தய் ஹெ காலத்தில் குவாங்லிங் என்ற இடத்தில் யாங் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு நாயை அன்போடு வளர்த்து வந்தான். அந்த நாயிடம் மிகுந்த பற்றும், பாசமும் வைத்திருந்த காரணத்தால் தான் எங்கு சென்றாலும் அதை உடன் அழைத்துச் சென்றான் யாங். ஒரு முறை யாங் நன்றாக குடித்துவிட்டு போதையில் கொஞ்சம் சதுப்பாக இருந்த நிலத்தில் படுத்துக்கிடந்தான். அது குளிர்காலம், காற்றும் வீசிக்கொண்டிருந்தது. அப்போது அந்த சதுப்பு நிலத்திலுள்ள நாணல்களை தீமூட்டி எரிக்க சிலர் வந்தனர். இதைக் கண்ட யாங்கின் நாய் மிரண்டு போய், குரைத்தது. தீ ஒரு பக்கம் எரிந்துகொண்டிருக்க, போதையில் கிடந்த யாங் நாயின் குரைத்தல் ஒலி மண்டையில் ஏறாமல் கிடந்தான். பின் அருகில் இருந்த குட்டையில் நீரை வாயில் எடுத்து, யாங் படுத்திருந்த பகுதியை சுற்றி நீரை தெளித்தது அந்த நாய். இப்படி பல முறை கொஞ்சம் கொஞ்சமாக செய்து, யாங்கை சுற்றி நிலத்திலிருந்த புல்பகுதியை ஈரமாக்கியது. நாணல்களில் மூட்டிய தீ வேகமாக பரவி யாங் போதையில் கிடந்த பகுதியை அடைந்தது ஆனால், கீழே புல்தரையில் சுற்றியும் நீரால் ஈரமாகியிருந்ததால் நெருப்பு யாங்கையும், அவனது நாயையும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் போதையில் கிடந்த யாங்குக்கு போதை தெளிந்து கண்விழிக்கும் வரை நடந்த எதுவும் தெரியாது.
பின்னர் ஒருநாள் இருட்டில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு வெறுமையாய் கிடந்த ஒரு கிணற்றில் விழுந்துவிட்டான் யாங். அவனது நாய் இரவு முழுதும் ஓயாமல் குரலெழுப்பிக்கொண்டிருந்தது. நாயின் குரைத்தலை கேட்ட ஒரு வழிபோக்கன், வெறுமையாய் கிடந்த அந்த பாழுங்கிணற்றில் நாய் குரைக்கும் ஓசையை கேட்டு எட்டிப் பார்த்தபோது அங்கே யாங்கும் கிடந்தான். வழிபோக்கனை கண்ட யாங், ஐயா என்னை மேலெழுப்பி விட்டீர்களெனில் உங்களுக்கு நல்ல சன்மானம் அளிப்பேன் என்று வாக்குறுதியளித்தான். அதற்கு அந்த வழிபோக்கன், சரி, சன்மானமாக இந்த நாயைக் கொடு, உன்னை காப்பாற்றுகிறேன் என்றான். அதற்கு யாங், இந்த நாய் என் உயிரை காப்பாற்றிய நாய். இதை வேண்டாம் வேறு ஏதாவது கேளுங்கள் தருவேன் என்றான். அதற்கு வழிபோக்கன், அப்படியென்றால் நீ கிணற்றிலேயே கிட என்றான். அப்போது நாய் கிணற்றில் இருந்த யாங்கை பார்த்து ஒரு தினுசாக குரைத்தது. நாயின் பார்வையைக் கண்டு பொருள் உணர்ந்துகொண்ட யாங், வழிபோக்கனிடம் சரி, நீங்கள் நாயை எடுத்துக்கொள்ளலாம் என்றான். அதன் பின் யாங்கை கிணற்றிலிருந்து வெளீயே எடுத்த அந்த வழிபோக்கன், பின் யாங்கின் நாயை ஒரு கயிற்றில் கட்டி தன்னோடு கொண்டு சென்றான். ஆனால் மூன்று நாள் கழித்து மறுபடி யாங்கிடமே வந்து சேர்ந்தது அவனது அன்பான, கெட்டிக்கார நாய்.