• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-18 20:12:41    
திட்டமிடும் குரங்குகள்

cri
மனிதர்கள் மட்டுமே பெற்றிருப்பதாக எண்ணப்படும் சில தனிச்சிறப்பு மிக்க பண்புகள் உண்டு. குறிப்பாக பகுத்தாராயும் பண்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வேறு எல்லா உயிரினங்களை விட மனிதன் வேறுபட்டுள்ளதை தனித்தன்மையான இப்பண்பு காட்டுகின்றது. இதன்மூலம் தான் எல்லாவற்றையும் ஆராய்ந்து, திட்டமிட்டு, செயல்பாடுகளை திறமையாக மேற்கொள்கின்றவன் மனிதன் என்பது நமது எண்ணம். ஆனால் இதற்கு மாறான சில கருத்துக்கள் ஆய்வுகள் மூலம் எண்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. அண்மையில் மனிதர்களை போன்று மனிதக்குரங்குகளும் எதிர்கால நோக்கோடு ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்படுவதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது எதிர்காலத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை கருத்தில் கொண்டு, உடனடியாக பெறக்கூடிய இன்பத்தை தள்ளிப்போட்டு, செயல்படும் தன்மை கொண்டவையாக மனிதக் குரங்குகள் இருக்கின்றன என்பதை ஸ்வீடனின் லுயன்டிலுள்ள புலனியல் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில் ஏற்கெனவே ஒரு சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மனிதக் குரங்குகள் மற்றும் கோழிகள் தங்களது எதிர்கால நோக்கோடு, செயல்படுகின்றன என்று மனிதனுக்கே உரித்தனதாக எண்ணப்படும் திறமைக்கு அறைகூவல் விடுக்கும் விதமான முடிவுகளும் தெரிவிக்கப்பட்டன. இருந்தாலும், எதிர்காலத்திற்குரிய திட்டமிடுதல் என்பது மனிதருக்குரிய தனிச்சிறப்பியல்பாக தான் இன்றுவரை கருதப்பட்டு வருகிறது. ஆனால் மனிதர் அல்லாத உயிரினங்களும் எதிர்காலத்தை பற்றி திட்டமிடுகின்றன என்பதை சான்றுகளோடு எடுத்துக்காட்டிய முதல் ஆய்வு, ஸ்வீடனின் லுயன்டிலுள்ள புலனியல் பல்கலைக்கழக புதிய ஆய்வு என்று அதனை மேற்கொண்ட ஆய்வாளர்களான மத்தியாஸ் மற்றும் ஹெலினா ஓஸ்வாத் ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் விலங்குகளின் புலனறிவு என்ற இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஃபுருவிக் உயிரியல் பூங்காவிலுள்ள லுயன்டு பல்கலைக்கழக ஆய்வு மையத்தில் இரண்டு பெண் மனிதக் குரங்களையும் ஒரு ஆண் மனிதக் குரங்கையும் கொண்டு அவர்கள் இந்த ஆய்வை நடத்தினர்.

"கனியிருப்ப காய்கவர்ந் தற்று" என்பதற்கிணங்க பழம் இருக்கும் போது யாரும் காயை தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இவ்வாறு நாம் தெரிவு செய்வது ஏதோ எதேச்சையாக எழுகின்ற முடிவு என எண்ணிவிட வேண்டாம். உண்பதற்கு மாம்பழம் மற்றும் மாங்காய் ஆகிய இரண்டும் இருப்பதாக வைத்து கொண்டால், அந்த இரண்டில் மாம்பழம் தான் சிறந்தது என்பதை அறிந்து, திட்டமிட்டு, நம்முடைய சுயவிருப்பப்படி தான் அதனை தேர்ந்தெடுத்து உண்கின்றோம். அதனை உண்ணாமல் இருந்தால் சற்றுநேரம் கழிந்து பத்து மாம்பழம் கிடைக்கும் என்று தெரியவந்தால் ஒரு மாம்பழத்தை தொடாமல், பத்து மாம்பழத்திற்காக காத்திருப்போம் தானே.

இதே அடிப்படையில் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. மனிதக் குரங்குகள் விரும்பி உண்கின்ற பழவகைகளை ஒரு பக்கத்திலும், அதனருகில் ஒரு மணிநேரத்திற்கு பிறகு, விருப்பமான அதே பழவகைகளின் அதிகளவு பழச்சாறை வழங்கும் குழாயையும் வைத்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பழவகைகளை குரங்குகள் உண்டால் அவைகளின் உடனடி ஆசை நிறைவு செய்யப்படும். பழச்சாறு கிடைக்காது. ஆனால் குழாயை தேர்ந்தெடுத்தால் உடனடியாக எதுவும் கிடைக்காது. ஒரு மணிநேரத்திற்கு பிறகு அதிகளவு பழச்சாறு கிடைக்கும். இந்த இரண்டில் எதனை மனிதக்குரங்குகள் தேர்ந்தெடுக்கின்றன என்பதை ஆய்வு செய்தனர்.

அத்தகைய சூழ்நிலைகளில் தங்களது விருப்பத்தை உடனடியாக நிறைவுசெய்யக்கூடிய விதமாக வைக்கப்பட்டிருந்த பழவகைகளை குரங்குகள் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு மணிநேரத்திற்கு பிறகு அதிகளவு பழச்சாறை வழங்கிய குழாயை தான் அவை அதிக முறை தேர்ந்தெடுத்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இச்செயல் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய அதிகளவு பயனை கருத்தில் கொண்டு மனிதக் குரங்குகள் திட்டமிட்டு சுயசிந்தனையுடன் செயல்படுகின்றன என்பதை வெளிப்படையாக காட்டியது. அவ்வாறு சிந்தித்து செயல்பட்டதால் தான், உடனடியாக கிடைத்த விருப்பமான பழ வகைகளை அதிகமாக அவை தேர்தெடுக்காமல், ஒரு மணிநேரத்திற்கு பிறகு அதிகளவு பழச்சாறு கிடைக்கச் செய்த குழாயை அதிக முறை தேர்ந்தெடுத்துள்ளன.

இத்தோடு ஆராய்ச்சி நின்றுவிடவில்லை. இரண்டாவது ஆய்வு முயற்சியாக பொருட்களை மாற்றினார்கள். அதாவது பழச்சாறை கொண்டுவரும் குழாய்க்கு பதிலாக புதியதொரு கருவி வழங்கப்பட்டது. அந்த கருவியை தேர்ந்தெடுத்தால் முந்தைய ஆய்வில் கூறப்பட்ட குழாயை போன்று அதிகளவு பழச்சாறு கிடைப்பதாக சூழ்நிலை அமைக்கப்பட்டிருந்தது. அப்புதிய கருவியை தேர்ந்தெடுக்காமல் தவிர்த்து, குரங்குகளின் கவனங்களை சிதறடிக்க, செய்யும் விதமாக, நீலநிற நெகிழ் சிற்றுந்து, கரடி, நெகிழி கை கடிகாரம் போன்ற சில பொம்மை பொருட்களையும் வைத்தனர். புதிய கருவியை தேர்ந்தெடுத்தால் மட்டுமே குரங்குகளுக்கு பழச்சாறு கிடைக்கும். மாறாக வேறு பொம்மைகளை தேர்தெடுத்தால் எதுவுமே கிடைக்காது என்ற நிலை இருந்தது. அதிலும் சுயவுணர்வுடன் ஒரு மணிநேரத்திற்கு பிறகு பழச்சாறை வழங்கும் அந்த புதியக் கருவியை தான் மனிதக்குரங்குகள் அதிக முறை தேர்தெடுத்தன. அந்த புதிய கருவியை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஒரு மணிநேரத்திற்கு பிறகு அதிகளவு பழச்சாறு கிடைக்கும் என்பதை அறிந்துகொண்டு, திட்டமிட்டு தான் மனிதக்குரங்குகள் அதனை அதிக முறை தேர்ந்தெடுத்தன என்று ஓஸ்வத்ஸ் தெரிவித்தார்.

இதன்மூலம் முன்னால் நம்பப்பட்டதை விட மிகவும் முற்காலத்திலேயே மனிதனின் எதிர்காலத்திற்கு திட்டமிடும் திறன் பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளதை அறியலாம். மனிதருடையதாக எண்ணப்படும் மிக முக்கிய பண்புகள் அனைத்தும் நீண்டகாலத்திற்கு முன்பே பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளன என ஆய்வாளர்களும் தெரிவித்தனர். விலங்குகளும் எதிர்கால திட்டமிடும் பண்பு வாய்ந்தவை என்பதை இந்த ஆய்வு தெளிவாக புரியவைக்கிறது.