உடலில் உள்ள செல்கள் எனப்படும் உயிரணுக்கள் வளர்ந்து பிரிந்து, உடலை நலமாக வைத்துக்கொள்ள தேவையான அளவுக்கு பல உயிரணுக்களை உண்டுபண்ணுகிறன. இவ்வாறு உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் சிதைவினை கட்டுப்படுத்தும் வளர்சிதை மாற்றத்தின் போது உடலுக்கு தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதான உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில், சிலவேளை இறக்காமல் இருந்துவிடலாம். இவ்வாறு இறக்காமல் அதிகரிக்கும் உயிரணுக்கள், திசுக்களின் கூட்டாகிய கட்டிகளை ஏற்படுத்துகிறன.
எல்லா கட்டிகளும் புற்றுநோயல்ல. அவற்றில் தீங்கில்லா மற்றும் தீங்கான கட்டிகள் உள்ளன. கேடுவிளைவிக்கும் தீங்கான கட்டிகள் தான் புற்றுநோயாகும். இதிலுள்ள உயிரணுக்கள் இயல்புக்கு மாறாக, எந்த கட்டுப்பாடுமின்றி பிரிவுற்று பெருகும். அப்படி பலுகிபெருகும் புற்று உயிரணுக்கள், அவற்றை சுற்றியுள்ள நல்ல திசுக்களுக்குள் சென்று அவற்றையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டவை. புற்று உயிரணுக்கள் இரத்த ஓட்ட மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்து, உடலின் பிற உறுப்புகளில் புற்றுநோய் கட்டிகளை ஏற்படுத்தும். இன்றுவரை தொடக்கத்திலேயே கண்டறிந்து கொள்ள முடியாத மற்றும் தீர்க்க முடியாத நோயாக தான் புற்றுநோய் இருந்து வருகிறது.
இது இவ்வாறிருக்க, பிரிட்டனிலுள்ள பதின்ம வயதினர் பலர் தொண்டை, கருப்பை, விரை மற்றும் தோல் தொடர்ப்பான புற்றுநோய்களால் துன்புறுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 1979 முதல் 2003 ஆம் ஆண்டுகளில் வளரிளம் பருவத்தினரிடம் காணப்பட்டதை விட, தற்போதைய அதிகரிப்பு விகிதம் உயர்ந்துவருகிறது. இலண்டனில் "பதின்ம வயதினரிடம் புற்றுநோய்" என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வின் முடிவுகளில் இது வெளிப்படுத்தப்பட்டது.
கடந்த முப்பதாண்டு காலத்தில் தொண்டை மற்றும் கருப்பை தொடர்பான புற்றுநோய் பெறுவது, பிரிட்டனிலுள்ள பதின்ம மற்றும் வளரிளம் பருவத்தினரை தவிர்த்து, இதர எல்லா வயதினரிடையும் குறைந்துள்ளது. ஆனால் 15 முதல் 19 வரையான பதின்ம வயதினரிடம் எறக்குறைய 7 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று பிரிட்டன் புற்றுநோய் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தோல் புற்றுநோய் எல்லா வயதினரிடையேயும் அதிகரித்தது. ஆனால் 35 முதல் 39 வயதினரிடம் ஆண்டுக்கு 2.5 விகிதம் மட்டுமே அதிகரித்தது. ஆனால் 20 முதல் 24 வயதினரிடத்தில் 7 விழுக்காடு அதிகரித்தது.
குடல், விரை, மூளை தொடர்பான புற்றுநோய் வகைகள் தான் வளரிளம் பருவத்தினரிடம் அதிகமாக காணப்படுகின்றன. என்றாலும் இந்த அதிகரிப்பு எதனால் ஏற்படுகின்றது என்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வகத்தின் குழந்தை மற்றும் குடும்ப ஆய்வுக்குழுவின் இயக்குனர் ஜில்லியன் பிர்ட்ச் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பருவ வயதை அடையும்போது தூண்டப்படும் உடலுறுப்புகளின் வளர்ச்சியால் கூட தொண்டை, கருப்பை மற்றும் விரை தொடர்புடைய புற்றுநோய்கள் ஏற்படலாம். எனவே இந்த வயதினர் புற்றுநோய் ஏற்பட, மரபணு தொடர்பாக குறைந்த எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளனரா? என்ற திசையில் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று அவர் கூறினார்.
|