• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-16 18:07:55    
ஒலிம்பிக் & சீனா ஆ

cri

ஏறக்குறைய 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே சீனாவில் மக்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சிகளை செய்தததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சீன வரலாற்றில் பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவத்துறைகளின் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து விளையாட்டுத்துறையும் வளர்ந்து வந்தது. பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு விளையாட்டுக்களும், பயிற்சிகளும் மக்களால் பயன்படுத்தப்பட்டன. பொழுதுபோக்கு மற்றும் நிகழ்த்துக்கலை விளையாட்டுக்களாகிய தோஹு எனும் மதுஜாடிகளின் மீது அம்பெறிதல், சூச்சு எனும் கால்பந்து, பாய்ஷி எனும் கழைக்கூத்துக்கலை, ச்சிச்சு எனும் போலோ, பிங்ஷி எனும் பனிவிளையாட்டுக்கள் முதலியவை, சீனாவின் பல்வேறு வம்சக்காலங்களில் மக்களிடையே பரவாலாக வழக்கத்தில் இருந்தன.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளான தாவ்யின் எனும் சுவாச மற்றும் உடற்பயிற்சி, வூச்சின்ஷி எனும் ஐவகை விலங்கு விளையாட்டு ஆகியவை ஹான் வம்சக்காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை செழுமைப்படுத்த, ஆற்றலை பேண பயன்படுத்திய உடற்பயிற்சிகளாகும்.

மேற்கு ஷோ வம்சக்காலத்தில் தேரோட்டுதலும், மிங் வம்சக்காலத்தில் நீண்டதூர ஓட்டமும் ராணுவ நோக்கிற்காக மேற்கொள்ளப்பட்ட உடற்பயிற்சிகளாக இருந்தன.

ஆக பொழுதுபோக்கு, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல், ராணுவ பயிற்சி என மூவகை தேவைகளுக்காக சீனர்கள் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டனர். ஜுயேலி எனும் மற்போர், வூஷு எனும் தற்காப்பு அல்லது போர்க்கலை, இவையிரண்டும், மேற்கூறிய மூன்று வகை தேவைக்கும் பயன்பட்டன.

உடலும் உள்ளமும் இயைந்து வளரவேண்டும், இரண்டின் வளர்ச்சியும் மனிதனின் வாழ்க்கைக்கு அவசியமானது என்ற கருத்தில் ஊன்றி நிற்பவர்கள் சீனர்கள்.

சீனாவில் கூறப்படும் பழங்கதைகளான, ஒன்பது சூரியன்களை வீழ்த்திய வீரன் யி, சூரியனை துரத்திச் சென்ற குவா ஃபூ, முதலியவை சீன மக்களின் இயற்கையை வெற்றிக்கொள்ளும் எண்ணத்தையும், அதற்காக அவர்கள் தங்களது உடல் திறன்களை மேம்படுத்த செய்த முயற்சிகளையும் இயம்புகின்றன.

மனிதகுலத்தின் ஆதி விளையாட்டாக வேட்டையாடல், அதாவது உணவிற்காக அவன் கற்களை வீசி, கூரிய கொம்புகளை வீச விலங்களை வீழ்த்தி பசியாறிய செயலையே கருதுகின்றனர். இத்தகைய கல் உருண்டைகள் பெருமளவில் சீனாவின் ஷான்ஷி மாநிலத்தின் யான்காவ் வட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆக சீனாவில் விளையாட்டுத்துறை பண்டைக்காலம் தொட்டே சீராக வளர்ந்து வந்துள்ளது. வரலாற்றின் வளர்ச்சியில், மக்களின், மக்களை ஆண்ட மன்னர்களின் தேவைக்கேற்ப விளையாட்டுக்களும், உடற்பயிற்சிகளும் பல வகைகளாக மாறி, பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தி ஒழுங்குபடுத்தவும் சீனர்கள் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் கவனமுடன் பழகி, கையேற்றி வந்துள்ளனர்.

சீனாவின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை பின்னோக்கி பார்க்கையில் விளையாட்டுத்துறையின் உச்சமாக உலகில் பரவலாக மதிக்கப்படும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் எழுச்சி, கோட்பாடு ஆகியவற்றுக்கு பொருந்தியதாய் சீன மக்களின் விளையாட்டு மீதான ஆர்வமும், எண்னமும் இருப்பதை அறியமுடிகிறது அல்லவா.

இரு பகுதிகளாக சீனப்பண்பாடு நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கும் சீனாவும் என்ற தலைப்பில், சீனாவின் விளையாட்டுத்துறையை பற்றியும், ஒலிம்பிக் தோன்றிய கிரேக்கத்துடன் எப்படி சீன விளையாட்டுத்துறையும் இசைவாக பொருந்தி வளர்ந்தது என்பதையும் அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.