• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-29 19:40:12    
உரிமை போராட்டம்

cri
பச்சைபசேலென மரங்கள் செடி கொடிகள், பருவகால மழை, விண்ணை தொடும் மலைகள் ஆகிய அனைத்தையும் கொண்டு இயற்கையோடு ஒன்றிந்த வாழ்வு வாழ்ந்த மனிதன் இடையில் அதனை தொலைத்துவிட்டு இன்று மீண்டும் அதனை தேடிக்கொண்டிருக்கிறான். விலைமதிப்பில்லா இயற்கை வளங்களை கூட இப்போது தான் தேட முன்வந்துள்ளான். அன்று வெளிநாட்டவர்கள் கடல் கடந்து பிற நாடுகள் சென்று மக்களை பிரித்து அடிமையாக்கி ஆண்டார்கள். அது பழைய காலனியாதிக்கம். இன்று வளர்ந்து வரும் ஆதிக்கம் நவீன காலனியாதிக்கம். எந்த நாட்டவரும் பிற நாட்டுக்குச் சென்று அடிமைப்படுத்த வேண்டியதில்லை. அவரவர் சொந்த நாடுகளில் இருந்து கொண்டே இன்னொரு நாட்டை அடிமை படுத்தும் அல்லது பிற நாடுகளின் மூலவளங்களை கொள்ளையடிக்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. உரிமைகள் பறிபோகும் நிலை முனைப்பாகிக் கொண்டே வருகிறது.

உலகளவில் உற்பத்திப் பொருட்களுக்கு இரண்டு வகையான உரிமைகள் இருந்தன. அவை கண்டுபிடிக்கப்பட்ட பொருளுக்கான மறறும் கண்டுபிடிப்பு முறைக்கான காப்புரிமைகள். அதாவது ஒருவர் ஒரு பொருளை கண்டுபிடித்து விட்டால் அந்த பொருளுக்கு அவர் காப்புரிமை உடையவர். செய்முறை / முறைவழியாக்க காப்புரிமை என்றால் ஒருவர் ஒரு பொருளை கண்டுபிடித்தால் அதே முறைப்படி இன்னொருவர் அப்பொருளை செய்யக் கூடாது. ஆனால் வேறு முறைப்படி உற்பத்தி செய்து அந்த முறைவழிக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ளலாம். தற்போது இவை ஒன்றிணைந்து அறிவுசார் சொத்துரிமை என்ற நிலையில் உலக அளவில் பரவலாகியுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வும் வலுப்பெற்று வருவதை நாம் காணலாம்.

ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விற்க சொல்லி காகிதம்

போட்டானாம் வெள்ளக்காரன்

இது தான் வெளிநாட்டவர் நம்மை ஆண்டபோது இருந்த நிலை. நமது பொருட்களுக்கு அவர்கள் விலை நிர்ணயிப்பதா? அதாவது பொருட்களை உற்பத்தி செய்யும் நாம் தான் விலையை முடிவு செய்ய வேண்டும் என்ற உரிமைக்குரலை இது வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த சமயத்தில் நாம் உற்பத்தி செய்த பொருள் நமக்கு சொந்தமாகத்தான் தான் இருந்தது. விலையை மட்டும் தான் அவர்கள் நிர்ணயித்தார்கள்

இன்றைக்கு என்ன நிலை தெரியுமா?

ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு வாங்க சொல்லி

காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்

அன்றைக்கு விற்க சென்னவர்கள் இன்று வாங்க சொல்லுகிறார்கள். அதாவது இன்று உற்பத்திப்பொருளே அவர்களுடையதாகி நமது பொருளை நமக்கே அவர்களது விலையில் விற்கும் நிலை உருவாகிவிட்டது. திகைப்பாக இருக்கிறதல்லவா?

பல்வேறு நாடுகளில் இத்தகைய அறிவுசார் சொத்துரிமை பற்றிய ஆழமான புரிதல் தற்போது தான் வலுவடைந்துள்ளது எனலாம். உயிரியல் பொருட்களுக்கான காப்புரிமைகள் கூட உலக அளவில் செயல்படுத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது தானே. ஐந்து ஆண்டுகால கலந்துரையாடல்களுக்கு பிறகு சீன தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகமும் மற்றும் பிற பல அமைச்சுகளும் இணைந்து தேசிய சொத்துரிமைக்கான தொடக்ககால வரைவை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் பூர்வீக உயிரியல் வளங்களை பாதுகாக்கும் கட்டமைப்புகளை அது விரைவுபடுத்திவுள்ளது. இதனை எதிர்கால சட்டத்திற்கான நகர்வாகவும் கொள்ளலாம். ஆனால் உயிரின கள ஆய்வாளர்கள் தேசிய அளவிலான சட்டத்தை விரும்புகிறார்கள். அப்படிபட்ட சட்டங்கள் இல்லாவிட்டால் நாட்டின் அறிவாற்றல் சொத்துரிமை பாதுகாப்பு தேக்கநிலை அடையும் என்கிறார்கள்.

உயிரின அளவிலான போட்டியானது கடுமையாக உள்ளது என அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது ஒரு நாட்டிலுள்ள உயிரின வளத்தை பற்றிய பரவலை பிற நாடுகள் பெற்று கொண்டு அதற்கான மற்றும் அவை அடிப்படையான பொருட்களின் காப்புரிமைகளை தங்களுடையதாக உரிமை கொண்டாடுகிறார்கள். இத்தகைய போட்டியாற்றலால் வளரும் நாடுகள் தான் மிகவும் பாதிக்கப்படுகின்றன. அடிப்படையில் சீனாவில் தோன்றி பல்லாண்டுகள் பயிரிடப்பட்ட சில பயிர்களுக்கு இன்று வெளிநாட்டினர் உரிமை கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சோயா அவரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தொடக்கத்தில் 5000 த்திற்கு மேலான சோயா அவரை மாதிரிகள் சீனாவில் வளர்க்கப்பட்டுள்ளன. உலக அளவில் 6000 மாதிரிகளையும் 90 விழுக்காடு உற்பத்தியளவையும் கொண்டு சீனா இருந்துள்ளது. சோயா அவரையின் விதை மாதிரிகள் பரவலாக்கப்பட்டதால் 2000 சோயா அவரை மாதிரிகளின் மரபணு உற்பத்தி தகவல்களை இன்று வளர்ந்த நாடுகள் கொண்டுள்ளன. முன்பு சோயா அவரை வளர்ப்பில் முன்னணியும் பெரிய ஏற்றுமதியளரகவும் இருந்த சீனா தற்போது மிக பெரிய இறக்குமதியாளராக மாறியுள்ளது. "சீனா போன்ற வளரும் நாடுகளின் மூலவள காப்புரிமைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டுள்ளதால், உள்நாட்டு பண்ணைகள் அந்த மூலவளங்களை பயன்படுத்த உரிமைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது" என்று தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாக துணைத்தலைவர் உயு சியாவ் ஸிங் பேட்டியின் போது தெரிவித்தார்.

அமெரிக்கா உறுதிபடுத்தப்படாத முறையில் 4,452 சோயா அவரை மாதிரிகளை ஜூன் 30, 2002 யில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. அதில் 168 வகைகள் காடுகளில் இயற்க்கையாக வளர்ந்தவை. ஆனால் இதில் 2,717 மாதிரி வகைகள் தான் சீன அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டவை. காட்டில் விளையும் சோயா அவரை மாதிரிகள் பட்டியலிடபடவே இல்லை என்பது குறிப்பிடதக்கது.

சீன நெல்லிக்காய் எனப்படும் கீவிப்பழம் சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் தோன்றியது. இன்று கீவிப்பழம் என்று சொல்லிவிட்டாலே போதும் நியுசிலாந்து தான் என்று கூறப்படுகின்ற நிலைமை உருவாகியுள்ளது எப்படி? Changchu எனப்படுகின்ற கீவிப்பழ விதை நியுசிலாந்தில் 1903 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நியுசிலாந்து ஆசிரியர் இஸ்சோபல் பிராஸர் ஹூபெய் மாநிலத்திலுள்ள Yichang மதப்போதகத்திலிருந்த தனது சகோதரியை பார்த்துவிட்டு திரும்பியபோது தான் கீவிச்செடி அங்கு அறிமுகமானது. ஒரு நூற்றாண்டுக்கு பிறகு கீவிப்பழ தொழில்துறை பல பில்லியன் டாலர் ஆற்றலுடையதாகவும், அந்நாட்டின் தோட்டக்கலை மூலமான ஏற்றுமதியில் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாகவும் உள்ளது.

மேலும் பெரிய அளவில் அறியப்படாத தென்மேற்கு Guizhou வின் Miao இனக்குழுவின் guanyin cao என்ற புல் பற்றிய விபரங்கள். இவ்வின மக்கள் இந்த புல்லிலிருந்து சளி மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைக்கான மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்து வந்துள்ளனர். ஆனால் இந்த புல்லின் பரவலாக்கத்தால் Miao இன மக்களின் அறிவுக்கு பாதகம் வராவிட்டாலும், அந்த மூலிகை மருந்தால் வருவாய் ஈட்ட முடியாத நிலையை அவர்கள் அடைந்துள்ளனர் என்று Guizhou மாநில அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நிலைய துணைத் தலைவர் An Shou hai கூறினார்.

ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்கள் இந்த புற்களிலான மூலக்கூறுகளின் ஆய்வை மேற்கொண்டுள்ளன. இவைகளின் அடிப்படையிலான சிகிச்சை முறைகளுக்கு வெளிநாட்டு ஆய்வாளர்கள் காப்புரிமை பெற்றுவிட்டால், சீன மருந்து உற்பத்தியாளர்கள் பொருளாதார இழப்பு அடைய அது வழிவகுக்கும் என்று சின்குவா செய்தி நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது. சீனாவின் சில உயிரியல் பொருட்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மரபுசார் மூலவள காப்புரிமைகளை பெற்றுள்ளன. அவைகளின் ஆய்வு மற்றும் வளர்ச்சி, அவை அடிப்படையிலான பொருட்கள் மூலம் இலாபமும் அடைந்துள்ளன. அதிகாரபுர்வ புள்ளிவிபரங்கள்படி சீனா தனது உயிரியல் மூலவளங்களில் பத்துக்கு ஒரு பகுதியை ஏற்றுமதி செய்கின்றது அல்லது இழக்கின்றது.

உயிரின மூலவளங்கள் மற்றும் பாரம்பரிய அறிவை வெளிநாடுகள் பயன்படுத்துவதால் கடுமையான சுற்றுச்சூழல் அழிவு, நாட்டின் நில வளர்ச்சி 20 முதல் 30 விழுக்காடு வரை பாதிப்பு ஆகியவை சீன உயிரின மூலவளங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன என்று உயு கூறுகிறார். இது நாட்டின் தேசிய உரிமைகளில் பயங்கர ஆபத்துகளை கொண்டு வருகிறது. எனவே தான் 2020 ஆம் ஆண்டிற்குள் உயிரினங்களின் பன்முகமயமாக்கத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்த சீனா திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு பகுதியிலுள்ள உயிரினங்களின் உற்பத்தியை பன்முகப்படுத்தி அவற்றை அதிகமாக வளர செய்வதால் அங்கு வளமான வாழ்க்கை சுழற்ச்சி முறை உருவாகும் என்பதாகும். இது சீன நடுவண் அரசின் 11 வது ஆண்டு திட்டமாகும். தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகத்தில் கடந்த அக்டோபர் அறிக்கையிலும் இது இடம்பெற்றுள்ளது.

40 க்கு மேலான நாடுகள் உயிரின பன்முகத்தன்மையை முன்னேற்றி தனது நாட்டின் உயிரியல் வளங்களை பிற நாடுகள் தங்களுடையதாக உரிமை கொண்டாடுவதை ஒழிக்க சட்டங்கள் மற்றும் விதிகளை உருவாக்கியுள்ளன. சீன பாரம்பரிய மூலவளங்கள் மற்றும் அறிவு கொண்டிருப்போரை பாதுகாக்க பாசுமதி அரிசியின் காப்புரிமை பற்றிய வெற்றிகரமான பிரச்சாரத்தை நடத்திய இந்தியா முதலிய கொள்கையுள்ள நாடுகளுடனும், உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக அரங்குகளின் துணையோடு, அதிகாரிகளும், நிபுணர்களும் இணைந்து ஒத்துழைப்பது இன்றைய கட்டாயமாகியுள்ளது.

பொருள் திருட்டு நடைபெறுவது தான். திருட்டு குறுந்தகடு கேள்விப்பட்டிருப்போம். பிறநாடுகளின் வளங்களை தனது நாட்டிற்கு கொண்டு சென்று அவை தங்களுடையவை என சாதிப்பது உயிரின திருட்டு அல்லவா. நமது தேசிய மூலவளங்களை காத்து வளர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அனைவருமே இருக்கிறோம். இல்லாவிட்டால்

ஊரான் ஊரான் தோட்டத்துல

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு வாங்க சொல்லி

காகிதம் போட்டானாம்.... காகிதம் போட்டானாம்.... காகிதம் போட்டானாம்...

என்று பாடவேண்டியதாகிவிடும்.