• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-24 12:40:34    
புற்களை முடியிடுவதும் மோதிரங்களை வாயில் கவ்வியிருப்பதும்

cri
இந்த சொற்றொடர் இரண்டு கதைகளை உள்ளடக்கியது. இரண்டும் கூறு கருத்து என்னவோ ஒன்றுதான். ஒருவர் செய்யும் உதவிக்கான நன்றியுணர்வை பற்றியே இவ்விருகதைகளும்.
சீன வரலாற்றின் வசந்தம் மற்றும் இலையுதிர்கால காலக்கட்டத்தில் வாழ்ந்தவன் வெய் கெ. அவனது தந்தை வெய் வூஸு ச்சின் நாட்டின் அதிகாரியாக இருந்தவர். வெய் வூஸுவுக்கு ஒரு அழகான வைப்பாட்டி இருந்தாள். மூப்பின் விளைவாய் நோய்வாய்ப்பட்ட வெய் வூஸு, தன் மகன் வெய் கெவிடம், ஒருவேளை தான் இறந்துவிட்டால் தனது வைப்பாட்டியை வேறு யாருக்காவது மணமுடித்து வைக்குமாறு கூறினார். சில காலம் கழிந்தது, நோயின் தீவிரம் அதிகரிக்க, தன் மகனை அழைத்த வெய் வூஸு, மறு வாழ்வில் தன்னோடு இருக்கும் வகையில் தன் வைப்பாட்டியை தான் இறந்தபின் கொன்று, கல்லறையில் தன்னோடு அருகே வைக்குமாறு கோரினார். காலம் சென்றது, முதியவர் வென் வூஸு இயற்கை எய்தினார். ஆனாலும் வெய் கெ தன் தந்தை கூறியதை போல, அவரது வைப்பாட்டியை கொன்று அவரோடு புதைக்கவில்லை. அதற்கு பதில் அவளை வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி அனுப்பினான். மரணத்தருவாயில் இருக்கும்போது ஒருவர் சொல்லும் வார்த்தைகளுக்கு அவர் பொறுப்பல்ல. அவர் என்ன கூறுகிறார் என்பது பெரும்பாலும் அவருக்கு தெரியாத நிலை அது. எனவேதான், என் தந்தை தற்சிந்தனையும், தன் விழிப்பும் கொண்ட நிலையில் கூறியபடி, அவரது கோரிக்கையை நிறைவேற்றினேன் என்று, தான் செய்ததற்கு விளக்கமளித்தான் வெய் கெ.
பின்னாளில் ஒருமுறை ச்சின் நாட்டு படைத் தளபதியான தூ ஹுய்யுடன் தீவிர போரில் ஈடுபட்டிருந்தான் வெய் கெ. வெற்றி தோல்வி யாருக்கென இறுதி செய்யப்படாத உக்கிரமான சண்டையின்போது ஒரு நாள், போர்களத்தில் ஒரு வயதான மனிதர் புற்களை முடிபோட்டுக்கொண்டு வலைபோல் பின்னிக்கொண்டிருந்ததை கண்டான் வெய் கெ. சிறிது நேரத்தில் தன்னை எதிர்த்து சண்டையிட்டுக்கொண்டிருந்த எதிரி நாட்டு படைத்தளபதியான தூ ஹுயின் குதிரை அந்த முதியவர் பின்னிய ஒரு வலையில் சிக்கிக்கொண்டது, தூ ஹுய் பிடிபட்டான். வெய் கெ வெற்றி பெற்றான். அன்றிரவு வெய் கெவின் கனவில், போர்களத்தில் புற்களை முடிபோட்டு வலை பின்னிய முதியவர் தோன்றினார். நீ உயிர் வாழ அனுமதித்த அந்த பெண்ணின் தந்தைதான் நான். உன் இரக்கத்திற்கு மாறாக நான் என்னால் இயன்றதை செய்துவிட்டேன்" என்று அந்த முதியவர் கூறினாராம். தன் தந்தையின் மரணத்துக்கு பின் அவரது வைப்பாட்டியை உயிரோடு விட்ட வெய் கெவின் நற்செயலுக்கு நல்ல கைமாறு கிடைத்து.
இதேபோன்ற கருத்தில் வருவதுதான் அடுத்த கதையும். மோதிரங்களை வாயில் கவ்வியிருப்பது.
ஹான் வம்சக்காலத்தில் யாங் பாவ் என்ற ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு அப்போது வயது 9. ஒருமுறை ஒரு மஞ்சள் நிறப் பறவையை ஆந்தைக்கூட்டமொன்று தாக்கிக்கொண்டிருப்பதைக் கண்டான் இந்த சிறுவன். பின் அந்த மஞ்சள் பறவை மரத்தின் மீதிருந்து கீழே விழ, அதை எறும்புகள் கடிக்கத்தொடங்கின. இதைக்கண்ட சிறுவன் யாங் பாவ், மஞ்சள் பறவையை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு சென்று பராமரித்தான். காயங்கள் எல்லாம் சரியான பின் ஒரு நாள் அந்த பறவை பறந்து சென்றது. அதே நாள் இரவு சிறுவன் யாங் பாவின் கனவில் வாயில் நான்கு வெள்ளிமணிக்கல் மோதிரங்களை வைத்திருந்த மஞ்சள் ஆடையணிந்த ஒரு சிறுவன் தோன்றினான். "மேற்கு கடவுளர்களின் தாயான அரசியின் தூதன் நான். என்னை காப்பாற்றியதற்கு கைமாறாக இந்த நான்கு மோதிரங்களை அன்பளிப்பாக உனக்கு அளிக்கிறேன். உன் சந்ததியினர் இந்த மோதிரங்களை போல் தூய்மையானவர்களாகவும், உயர்நிலை வகிப்போராகவும் இருப்பார்கள்" என்று கூறி மறைந்தான் அந்த கனவுச்சிறுவன். பின்னாளில் யாங்பாவின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என அவனது சந்ததியே அரசில் உயரதிகாரிகளாக இருந்தனராம்.
ஆக பின்னாளில் நன்றியுணர்வை குறிப்பிடவும், ஒருவர் தனக்கு செய்த உதவிக்காக நன்றிப் பெருக்கோடு செய்யும் கைமாறையும் குறிக்க Jie cao xian huan புற்களை முடியிடுவதும் மோதிரங்களை வாயில் கவ்வியிருப்பதும் என்ற சொற்றொடர் சொல்லடையாக பரவியது.