க்ளீட்டஸ் – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகையின் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம். வாணி – ஆமாம். இன்று ஒரு வகை கோதுமை மாவு உணவு பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். க்ளீட்டஸ் – வாணி, நீங்கள் குறிப்பிடுவதை நான் ஓரளவு அறிந்து கொண்டுள்ளேன். சந்தையில், எள்ளு வடை போன்ற உணவு வகை விற்பனை செய்யப்படுகின்றது. அதிக மக்கள் அவற்றை விரும்புகின்றனர் என்று கண்டுள்ளேன். அதன் சீனப் பெயர் என்ன? வாணி –அதன் சீனப் பெயர் shao bing. எள்ளும் இடம்பெறுவதால், சிலர் அதை zhi ma shao bing என்று அழைக்கின்றனர். க்ளீட்டஸ் -- zhi ma shao bing. அடுத்த முறை, நான் வாங்கி ருசிப்பார்ப்பேன். வாணி – இன்றைய நிகழ்ச்சியைக் கேட்டப் பின், நீங்கள் வீட்டில் சொந்தமாக தயாரிக்கலாமே. க்ளீட்டஸ் – சரி சரி. வாணி – முதலில், தேவையான பொருட்களைக் கூறுகின்றேன். கோதுமை மாவு 300 கிராம் Yeast 2 தேக்கரண்டி எள்ளு சாந்து 2 தேக்கரண்டி வெள்ளை எள்ளு 20 கிராம் மிளகு தூள் ஒரு தேக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி முட்டை ஒன்று க்ளீட்டஸ் – முதலில், 250 மில்லி லிட்டர் 35 சென்டி கிரேடுக்குட்பட்ட மிதமான வெந்நீரில் yeast போட்டு கலக்கவும். பிறகு, இதை கோதுமை மாவில் ஊற்றி, நன்றாக பிசைந்து பிசையவும். வாணி – மெல்லிய துணியை ஈரமாக்கி கோதுமை மாவு இடம்பெறும் பாத்திரத்தை மூட வேண்டும். க்ளீட்டஸ் – எவ்வளவு நேரம் அப்படி வைக்க வேண்டும்? வாணி – சுமார் ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கவும். வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் எள்ளு சாந்தை, சிறிதளவிலான மிதமான வெந்நீருடன் கலந்து ஒரே திசையில் சுழற்ற வேண்டும். பிறகு, உப்பையும், மிளகுத் தூளையும் இதில் போடலாம். நன்றாக கிளற வேண்டும்.
க்ளீட்டஸ் – ஒன்றரை மணிக்குப் பின், பாத்திரத்திலுள்ள கோதுமை மாவை ஒரு சதுர வடிவ தட்டில் வைத்து, சப்பாத்தி உருளையைக்கொண்டு 3 மில்லி மீட்டர் அடர்த்தியுள்ள பெரிய சப்பாத்தி போல பரப்பிக்கொள்ள வேண்டும். வாணி -- ஏற்கனவே தயாரித்து எள்ளு சாந்தை சப்பாத்தியின் மேல் தடவிக்கொள்ளவும். பிறகு, இந்தச் சப்பாத்தியை ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுருட்டிக்கொள்ளுங்கள். பிறகு, காதிதம் போல சுருட்டப்பட்ட இந்த சப்பாத்தியை 5 சென்டி மீட்டர் அளவுடைய துண்டுகளாக பிரித்துக்கொள்ளுங்கள். இந்த துண்டுகளை
இரு முனைகளிலும் துளை தெரியாமல் மூடிக் கொள்ளுங்கள். பிறகு, அவற்றை உருண்டைகளாக்கி, கையில் வைத்து வடை போல் தட்டிக்கொள்ளுங்கள். க்ளீட்டஸ் – ஒரு முட்டையை உடைத்து பாத்திரத்தில் கொட்டி, நன்றாக அடித்து கொள்ளவும். வடையின் மேல் முதல் முட்டையை தடவி, எள்ளை அதன் மேல் தூவிக் கொள்ளுங்கள். வாணி -- நுண்ணலை அடுப்பை இயங்க செய்து முன் கூட்டியே 170 சென்டி கிரேடில் 10 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள். தயாரிக்கப்பட்ட வடைகளைத் தனித்தனியாக அதில் வைத்து, 170 சென்டிகிரேட் வெப்பத்துடன் 20 நிமிடங்கள் வேக வையுங்கள். க்ளீட்டஸ் – இன்றைய zhi ma shao bing தயார்.
வாணி – கோதுமை உணவு வகையை விரும்பும் நேயர்கள் வீட்டில் இதனைத் தயாரிக்கலாம். தேவைப்படும் பொருட்கள் தமிழகத்தில் எளிதாக கிடைக்கலாம். க்ளீட்டஸ் – மேலும் இனிப்பு சுவை விரும்பும் நேயர்கள், எள்ளு சாந்தில் உப்புக்குப் பதிலாக, சர்க்கரை போட்டுக்கொள்ளலாம். அப்படி செய்தால், மிளகுத் தூள் போட வேண்டாம். மேலும் நுண்ணலை அடுப்பு இல்லாத நிலையில், தோசை, சப்பாத்தி ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தவா அல்லது தோசைக்கல்லை வைத்து, அதில் இந்த எள்ளு வடைகளை வாட்டி எடுக்கலாம்.
|