வாணி – மீண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தொடர்ந்து சுவையான சீன உணவு வகைகள் பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். க்ளீட்டஸ் – வணக்கம், நேயர்களே. வாணி, இன்று எந்த வகை சீன உணவு பற்றி கூறுகின்றோம்? வாணி – கடந்த சில நிகழ்ச்சிகளில் நூடுல்ஸ் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். பல நேயர்கள் இதன் தயாரிப்பு பற்றி அறிய ஆர்வம் காட்டினர்.
க்ளீட்டஸ் – ஆமாம். ஆனால், இந்தியாவில் உடனடி நூடுல்ஸ் தவிர, வறுக்கப்பட்ட நூடுல்ஸ் மட்டுமே கிடைக்கிறது. வாணி – பரவாயில்லை. இன்றைய நிகழ்ச்சியில் வீட்டிலேயே நூடுல்ஸ் தயாரிப்பது பற்றி முதலில் எடுத்துக்கூறுகின்றோம். க்ளீட்டஸ் – ஓ.நல்லது. சீனர்கள் அடிக்கடி வீட்டில் நூடுல்ஸ் தயாரிப்பது உண்டா? வாணி – உண்டு. முதியோர்கள் வீட்டில் சொந்தமாக நூடுல்ஸ் தயாரிக்க விரும்புகின்றனர். வீட்டுத்தயாரிப்பு, நூடுல்ஸ் கடையில் வாங்கியதை விட மேலும் சுவையாக இருக்கின்றது. இது உண்மை தான். ஆனால், இளைஞர்கள் கடையில் தயாரிக்கப்பட்டதை வாங்கவே விரும்புகின்றனர். காரணம் அது வசதியாக இருப்பது தான்.
க்ளீட்டஸ் – சரி. தயாரிப்பு முறையை தெரிவிக்கலாமா? வாணி – கண்டிப்பாக. கோதுமை மாவு உணவு வகைகளைத் தயாரிப்பது பற்றி நேயர்கள் அனைவருக்கும் தெரியும். ஆகையால், இன்று நூடுல்ஸ் தயாரிப்பதற்கு தேவையான அளவு பற்றி கூறத் தேவையில்லை. க்ளீட்டஸ் – ஆமாம். நேயர்களே, நீங்கள் வீட்டில் தேவையான அளவுக்கேற்ப கோதுமை மாவு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தலாம். வாணி – முதலில், கோதுமை மாவை தண்ணீருடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பு, நூடுல்ஸ் சுவையாகவும் தரமாகவும் அமைவதற்கு கோதுமை மாவை பல முறை பல திசைகளில் மாற்றி மாற்றி பிசைய வேண்டும். க்ளீட்டஸ் – ஆமாம், இந்தியாவில் கூட பரோட்டாவுக்கு மாவு பிசையும் போது இப்படி தான் செய்வார்கள்
வாணி – அடுத்து, உருளைக் கட்டையைப் பயன்படுத்தி, இந்த மாவை ஒரு பெரிய தோசை அல்லது சப்பாத்தி போல உருட்ட வேண்டும். இந்தப் போக்கில், இதன் மேல் கோதுமை மாவை அவ்வப்போது தூவிக் கொள்ள வேண்டும். க்ளீட்டஸ் -- பிறகு, இந்த சப்பாத்தி அல்லது தோசையை பல மடிப்புகளாக்கிக் கொள்ளுங்கள். சிறிய நாடாக்கள் போல வெட்டிக் கொள்ளுங்கள். எவ்வளவு மெலிதாக தேவையோ அதன் படி செய்துக் கொள்ளுங்கள், இந்தப் போக்கிலும் இதன் மேல் கோதுமை மாவை தூவிக் கொள்ள வேண்டும். வாணி – இது தான், நூடுல்ஸின் தயாரிப்பு முறை.
|