கலை: கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி வழியில் பதிவான உங்கள் எண்ணங்களை அரங்கேற்றும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டு, தவறாமல் எண்ணங்களை மேற்கூறிய வழிமுறைகளில் பகிர்ந்துகொள்ளும் அன்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். க்ளீட்டஸ்: எமது நன்றிகளையும், அன்பையும் தெரிவிக்கும் அதேவேளையில், உரிமையோடு ஒரு வருத்ததையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். இலங்கையிலிருந்தான நேயர்களின் எண்ணிக்கையும், அவர்களது கடிதங்களும் அதிகரித்து வருவதை நேயர் கடிதம் நிகழ்ச்சியை கேட்டால் அறிந்துகொள்ளலாம். அதேவேளையில் தமிழகத்து நேயர்களிடமிருந்தான கடிதங்கள் அண்மைக்காலமாக குறைந்துள்ளன. கலை: க்ளீட்டஸ், நீங்கள் வருத்தமடையவேண்டாம். இது தற்காலிகமானதுதான். நேயர் நண்பர்கள் மீது எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பல்வேறு காரணங்களால் கடிதம் எழுத வாய்ப்பில்லாமல் போன நமது நண்பர்கள் நிச்சயம் தொடர்ந்து கடிதங்களை ஆர்வத்துடன் எழுதி நமக்கு ஊக்கமளிப்பார்கள். சரிதானே நண்பர்களே! சரி, இனி நாம் இன்றைய நிகழ்ச்சிக்கு செல்லலாம். கடிதப்பகுதி கலை: இலங்கை புத்தளம் கே. ஆர். அஸ்மிகா எழுதிய கடிதம். தாங்கள் அனுப்பிய சீனத் தமிழொலி இதழ் கிடைத்தது. உடனே வாசித்து முடித்தேன். அர்ப்பணத்துடன் பணிபுரியும் தமிழ்ப்பிரிவின் பணியாளர்களை பற்றி அறிந்துகொண்டேன். 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்துவைத்துள்ள நம்மிடையே, ஆங்கிலமயமாகிய உலகில் தமிழன்னையை மறக்காமல் தமிழொளியை வீசிக்கொண்டிருக்கிறது சீன வானொலி தமிழ்ப்பிரிவு.
க்ளீட்டஸ்: மறைமலை நகர் ஏ. சிவகாமி எழுதிய கடிதம். 46வது ஆண்டில் காலடி வைத்துள்ள சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு நேயர்கள் கூறிய வாழ்த்துக்களை கேட்டேன். குறிப்பாக மதுரை அமுதாராணி அவர்களது வாழ்த்துரை நன்றாக இருந்தது. பல தகவல்களை குறிப்பிட்டு வழங்கிய அவரது உரை அருமை. கலை: அடுத்து நாகர்கோவில் பிரின்ஸ் ராபர்ட் சிங் எழுதிய கடிதம். பெய்ஜிங்கில் பொதுமக்கள் உடற்பயிற்சி மீது காட்டும் ஆர்வம் குறித்த கட்டுரை கேட்டேன், பெய்ஜிங்கில் 28 லட்சம் பேர் ஏதாவது விளையாட்டில் ஈடுபடுகின்றனர். பெய்ஜிங்கில் 77 நகர நிலை விளையாட்டு மன்றங்கள், 11 உடற்பயிற்சி பூங்காக்கள் உள்ளன. மக்கள் உடற்பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்பதை ஊக்கமூட்டி ஆதரிக்கும் சீன அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இதனால்தான் சீனா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை குவித்துக்கொண்டிருக்கிறது. க்ளீட்டஸ்: நீலகிரி கீழ்குந்தா நேயர் கே. கே. போஜன் எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் எல்லாமே அவசரகதியாகிப்போன இக்காலத்தை பற்றி தமிழன்பன் குறிப்பிட்டார். இது உண்மைதான். கல்யாணம் செய்துபார், வீட்டை கட்டிப்பார் என்று சொல்வார்கள். அக்காலத்தில் எல்லாமே ஊர்கூடி தேர் இழுப்பது போலத்தான். எங்கள் பகுதியில் கூட அந்த காலத்தில், ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், ஊரே அவருக்கு உதவி செய்யும். மரம் வெட்டி, செங்கல் தயாரித்து, முழுதாக வீடு கட்டி முடிக்கும் வரை ஊர் மக்கள் உதவி செய்வர். ஆனால் அதெல்லாம் இப்போது பார்க்கப்பட முடியாது. ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக சீன மக்களும், அரசும், விளையாட்டுத் துறையினரும் சிறப்பாக பணியாற்றினர். ஊர் கூடி தேர் இழுத்தது போல், ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்திக்காட்டினர். கலை: அடுத்து யாழ்ப்பாணம் எஸ். தனிஸ்குமார் எழுதிய கடிதம். பல்கலைகழக நண்பர் ஒருவரின் மூலம் சீன வானொலி தமிழ்ப்பிரிவு பற்றி அறிந்துகொண்டேன். தமிழ் மொழியை கற்று, தமிழுக்கு சேவை புரியும் உங்களது நிழற்படங்களை நண்பனுக்கு வந்த இதழில் கண்டேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டபோது, சீன மக்களின் கடின உழைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. அதே போல் கடினமாக உழைக்கும் தமிழ்ப்பிரிவின் பணியாளர்களை மனதார வாழ்த்துகிறேன். க்ளீட்டஸ்: அடுத்து பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். எங்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதாக அமைந்த சீனத் தமிழொலி இதழ் அமைந்தது. தமிழ்ப்பிரிவுப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்கும் படமும், அறிவிப்பாளர்கள் அனைவரது தனிப்பட்ட படங்களும், அவர்களை பற்றிய அறிமுகமும் மிகச் சிறப்பாக இருந்தன. அனைவரையும் நேரில் சந்தித்து மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது சீனத் தமிழொலி இதழ். நன்றி! கலை: பழனி பகத்சிங் எழுதிய கடிதம். தாங்கள் அனுப்பிய தமிழ் மூலம் சீனம் புத்தகம் கிடைத்தது, நன்றி. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் வரும் சொற்களை உச்சரிக்க கேட்பதை, புத்தக்த்தில் அவற்றை எழுத்து வடிவில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. க்ளீட்டஸ்: நேருக்கு நேர் நிகழ்ச்சி குறித்து ஈரோடு காளியப்பம்பாளையம் க. ராகம் பழனியப்பன் எழுதிய கடிதம். நந்தியாலம் தணிகாச்சலம் அவர்களுடனான பேட்டியை கேட்டேன். வேலூர் மாவட்ட நேயர் மன்றத்தை சேர்ந்த அவர் தனது தந்தையார் அறிமுகப்படுத்த சீன வானொலியை கேட்டு வருவதாக குறிப்பிட்டார். 25 ஆண்டுகளாக சீன வானொலியோடு தொடர்புகொண்டுள்ள அவரது முயற்சிகளும், பணியும் தொடர வாழ்த்துக்கள்.
மின்னஞ்சல் பகுதி சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி செப்டம்பர் திங்கள் 22ம் ஆம் நாள் அன்று இடம் பெற்ற சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியினை கேட்டேன். முட்டையினையும, தேயிலையினையும் முக்கிய பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் "முட்டை சூப்" தயாரிப்பு முறையினைப்பற்றி மதிப்பிற்குறிய வாணி, அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு செய்யும் வகையில் கூறினார். நிகழ்ச்சி எளிய உரைநடையில் அருமையாக தொகுத்து வழங்கப்பட்டது. விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் இந்த சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி ஓர் வரப்பிரசாதம்மாகும். பாராட்டுக்கள். வளவனூர், முத்துசிவக்குமரன் 6.10.2008 அன்றைய நிகழ்ச்சியில் நட்புப்பாலம் பகுதியில் தொடர்ந்த திரு பல்லவி பரமசிவம், திரு. நாச்சிமுத்து அவர்களின் பேட்டிகள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவர்கள் எந்த அளவுக்கு அளப்பறியா ஆனந்தத்தில் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தியது. அவர்களின் முந்தைய பயணத்துக்கும், தற்போதைய பயணத்துக்குமான வேறுபாட்டை அவர்கள் கூறியபோது, நாமே அந்த அரிய அனுபவத்தினை பெற்றது போல் இருந்தது. வளவனூர், புதுப்பாளையம், எஸ். செல்வம் அக்டோபர் திங்கள் 7 ஆம் நாள் இடம்பெற்ற •சீனாவில் இன்பப் பயணம்• நிகழ்ச்சியில் பெருஞ்சுவர் பற்றிய தகவல்களை கலைமகள் கூறியபோது, பெருஞ்சுவர் பற்றிதான் நமக்கு பல தகவல்கள் தெரியுமே என நான் நினைத்தேன். ஆனால் புத்தம் புதிய தகவல்கள் பலவற்றை கலைமகள் வழங்கினார். பொதுவாக, நேயர்களுக்கு பெய்ஜிங் மாநகரின் புற நகரில் அமைந்திருக்கும் பாதாலிங் பெருஞ்சுவர் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியும். ஆனால், உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் கொய்யாங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருஞ்சுவர் பற்றிய புதிய தகவல்கள் பலவற்றை கலைமகள் வழங்கி என்னைப் பெரிதும் மகிழ்வித்தார். 5000 கிலோ மீட்டர் நீளமுள்ள பெருஞ்சுவர், ஏராளமான தகவல்களை உள்ளடக்கியது. எதிர்வரும் நிகழ்ச்சியில், சீனாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பெருஞ்சுவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன். முனுகப்பட்டு, பி. கண்ணன்சேகர் அக்டோபர் 7ம் நாள் நிகழ்ச்சியில் நீர் மின்சார தளங்கள் பற்றி பலத் தகவல்களைத் தந்தமை பாராட்டுக்குரியது. மஞ்சள் ஆற்றின் மேற்பகுதியில், பெரியரக நீர் மின்சார உற்பத்தித் தளங்களை சீனா முழுதாக கட்டியமைத்து வருகின்றது என்ற செய்தி என்னை ஆச்சரிய படுத்தியது. அவை, qing hai, சிச்சுவான், gan su ஆகிய மாநிலங்களிலும், ning xia ஹீய் தன்னாட்சி பிரதேசத்திலும் அமைக்கப்படுவதையும் அறிகிறேன். அப்பகுதியின் வளர்ச்சி வரைவுக்கு இணங்க, 37 அல்லது 38 நீர் மின்சார உற்பத்தித் தளங்கள் கட்டியமைக்கப்படவுள்ளன என்பதால் இதை ஒரு மிகப்பெரிய திட்டமாகவே கருதுகிறேன்.
திருச்சி அண்ணா நகர் வீட்டிஆர். 3 அக்டோபர் 2008. சீன சமூக வாழ்வு....சீனாவின் கழைக்கூத்துக்கலை குறித்து வான்மதி விளக்கியதோடு, ஆசாவ் மாநிலம் இதில் சிறந்து விளங்குவதையும், வெளிநாட்டு மாணவர்கள் எந்த அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதையும் அறியச் செய்தார். மேலும் எனது சீஆன் பயணத்தில் •டாங்பு ரோங்போன்• பூங்காவில் பலவகையான கழைக்கூத்துக்களை நேரில் கண்டு ரசிக்க முடிந்தது. என்னை மிகவும் கவர்ந்தது, கட்டைக்காலை கட்டிக் கொண்டு பம்பரமாக சுழன்று நடனமாடிய அழகிய மங்கைகளின் ஆட்டம், நாடக அரங்கில் ஒரு கழைக்கூத்தாடி மிகப் பெரிய பீங்கான் பூத்தொட்டியை உயர உயர தூக்கிப் போட்டு பிடித்துக் காட்டியது ஆகியவை. இந்நிகழ்ச்சியை கேட்டதும் அந்த காட்சிகள் கண்முன் நின்றன.
|