உள்ளூர் நேரப்படி 19ம் நாள் பிற்பகல், சீன அரசுத்தலைவர் ஹு சிந்தாவ் பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் பெரு அரசுத் தலைவர் Alan Garciaவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் பயன் தரும் ஒத்துழைப்பு மேற்கொள்வது பற்றி இரு தரப்பும் முக்கிய ஒத்த கருத்துக்கு வந்துள்ளன. சீன-பெரு தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதை அவர்கள் கூட்டாக அறிவித்தனர். மேலும் இரு நாட்டு உத்தி நோக்கு கூட்டாளியுறவு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதும் அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின், இரு நாட்டுப் பொருளாதாரம், தொழில் நுட்பம், நலவாழ்வு, சுங்க துறை, வறுமை ஒழிப்பு, நிதி முதலிய துறைகளுடன் தொடர்பான 11 ஒத்துழைப்பு ஆவணங்களில் இரு தரப்பும் கையொப்பமிட்டன. பெருவிலுள்ள 3 பல்கலைக்கழகங்களில் கன்ஃபியூசியஸ் கழகங்களின் துவக்க விழாவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின், கூட்டுச் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பெரு அரசுத் தலைவர் காசியா கூறியதாவது
பெரு நாடு, சீனாவின் மிக உளமார்ந்த நண்பராகவும் கூட்டாளியாகவும் திகழ்கின்றது. சீனாவின் வளர்ச்சிக்கும் பல்வேறு நாடுகளுடன் உறவை வளர்க்கும் அதன் விருப்பத்துக்கும் ஆதரவளிக்கின்றோம். பல்வேறு நாடுகளின் அரசுரிமையை மதித்து, அவற்றுக்கும் அவற்றின் மக்களுக்கும் நன்மை பயப்பது என்பது இதற்கான முன் நிபந்தனையாகும். இன்று சீனாவும் பெருவும் ஒரு முக்கிய கருத்தொற்றுமையை உருவாக்கின. அதாவது, இரு நாட்டு உத்திநோக்கு கூட்டாளியுறவு நிறுவுப்பட்டமை. மேலும் தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையை இரு நாடுகள் வெற்றிகரமாக நிறைவேற்றின. இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இது முக்கிய அடிப்படையிடும் என்று நம்புகின்றேன் என்றார் அவர்.
சீனா பெற்றுள்ள சாதனைகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். சீனாவின் வளர்ச்சி உலகிற்கு நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது என்று காசியா கூறினார். அடிப்படை வசதியின் கட்டுமானம், சுற்றுலா முதலிய துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு முயற்சி மூலம், இரு நாட்டு வளர்ச்சிக்கான உத்திநோக்கு கூட்டாளியுறவு உடன்படிக்கையில் வகுக்கப்பட்ட பல்வேறு இலக்குகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெரு விரும்புவதாக காசியா தெரிவித்தார்.
இரு நாட்டு உத்திநோக்கு கூட்டாளி உறவை நிறுவுவது, இரு நாட்டுறவு பன்முகங்களிலும் வேகமாக வளரும் காலக்கட்டத்துக்குள் நுழைந்துள்ளதை குறிக்கின்றது என்று ஹு சிந்தாவ் கூறினார். அவர் கூறியதாவது
சீன-பெரு உறவு ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதை இது காட்டுகின்றது. இரு நாட்டுறவின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். இரு தரப்புகளின் கூட்டு முயற்சி மூலம், இரு தரப்பு நட்புறவு ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றது. அரசுத் தலைவர் காசியாவுடன் இணைந்து முயற்சி செய்து, இரு நாட்டு உத்திநோக்கு கூட்டாளியுறவை மேலும் வளர்க்க பங்காற்ற விரும்புகின்றேன் என்றார் அவர்.
சீனாவில் வென் ச்சுவான் நிலநடுக்கத்துக்குப் பின், பெரு நாட்டின் பல்வேறு சமூக வட்டாரங்கள் வழங்கிய ஆதரவு மற்றும் உதவியை ஹு சிந்தாவ் மீளாய்வு செய்து பாராட்டினார். அவர் கூறியதாவது
இவ்வாண்டு மே திங்கள் சீன சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, அரசுத் தலைவர் காசியா பெருவிலுள்ள சீனாவின் தூதரகத்துக்குச் சென்று இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் லிமாவின் புறநகருக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் பிரார்த்தனை நடவடிக்கையில் கலந்து கொண்டார். நிலநடுக்கத்தில் உயிர் இழந்த சீன மக்களுக்கு இரங்கல் செலுத்தும் வகையில், பெரு நாட்டில் நாடு முழுவதிலும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இவை எல்லாம் மறக்க முடியாதவையாகும். சீன மக்கள் மிகவும் கவரப்பட்டுள்ளனர். பெரு மக்கள் சீன மக்களின் உணர்வுப்பூர்வமான நம்பத்தக்க நண்பர்களாவர் என்றார் அவர்.
பெருவுடனான உறவில் உயர்வாக கவனம் செலுத்தி, பெருவுடன் அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பைக் கூட்டாக வலுப்படுத்தி, இரு நாட்டு வளர்ச்சிக்கு உயிராற்றலை ஊட்ட சீனா விரும்புகின்றது என்று அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் தெரிவித்தார்.
|