சீன மொழியில் Yu yong ke gu என்றால், உபரி வலிமை விற்பனைக்கு என்று பொருள். சண்டைக்கு கூலிப்படை அமர்த்துவதை குறிப்பிடுவது போல் தோன்றும் இந்த சொற்றொடருக்கு உண்மையில் என்ன பொருள் என்று அறிவோம். கிமு. 589ம் ஆண்டில் ச்சி (Qi) நாடு அருகாமை லூ (Lu) நாட்டின் மீது படையெடுத்தது. இதைக் கண்ட ச்சின் (Jin) நாடு, லூ (Lu) நாட்டிற்கு உதவ படைகளை அனுப்பியது. ச்சி (Qi) நாட்டு படைத்தளபதி காவ் கு (Gao gu) ச்சின் (Jin) நாட்டுப் படைகளினூடே நுழைந்து ச்சின் (Jin) நாட்டு படைவீரன் ஒருவனை கல் கொண்டு அடித்து கீழே சாய்த்து, கைது செய்து அவனது தேரை கைப்பற்றினான். குதிரை பூட்டிய அந்த தேரை காவ் கு (Gao gu) ஓட்டிச்சென்று மல்பெர்ரி மரமொன்றை வேரோடு பிடுங்கி, தேரில் கட்டிக்கொண்டு, ச்சி (Qi) நாட்டு படைகளின் அணிகளைச் சுற்றிவந்து, "யாருக்கெல்லாம் வலிமை வேண்டுமோ, என்னிடம் எஞ்சியுள்ளதை வந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்று முழங்கினான். ஆக, பிற்காலத்தில் உபரி வலிமை விற்பனைக்கு Yu yong ke gu என்ற சொற்றொடர், ஒருவரிடம் இன்னும் எஞ்சியுள்ள வீரம், போராட்ட குணம் மற்றும் வலிமையை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பொதுவாக வலிமையும், மன உறுதியும் கொண்டவரை பாராட்டுகையில் இந்த Yu yong ke gu என்ற சொற்றொடர் எடுத்தாளப்படுகிறது.
|