• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 09:31:13    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: புத்தாண்டு 2009, புதிய நம்பிக்கைகளின் ஒளிக்கீற்றாய் நெருங்கி வருகின்றது. இலக்குகள் நனவாகும், வருங்காலம் இனிதாகும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம்.
தமிழன்பன்: ஆம், அன்பான நேயர்களே! சீன வானொலியின் நம்பிக்கை தூண்களாய் உயர்ந்து நிற்கும் நீங்கள் காட்டும் ஆதரவும், அயரா முயற்சியும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் ஐயமில்லை.
கலை: குறிப்பாக கடந்த ஆண்டில் சீன வானொலி நிகழ்ச்சிகளை நாள்தோறும் கேட்டு வந்தீர்கள். உங்கள் சிந்தனைகளை எங்களுக்கு கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தீர்கள். இவ்வாறு வானொலி நிகழ்ச்சிகளில் நீங்கள் காட்டிய பங்கேற்பு பாராட்டுதற்குரியது. தொடர்ந்து வருகின்ற புத்தாண்டிலும் சீன வானொலி மற்றும் நேயர்களாகிய உங்கள் முயற்சிகளோடு இணைந்து வளர்வோம்.
தமிழன்பன்: 2009 ஆம் ஆண்டில் சீன வானொலி நிகழ்ச்சிகளை நாள்தோறும் கேட்டு, அதிக கருத்து கடிதங்கள் எழுத முடிவெடுத்து செயல்பட கேட்டு கொள்கின்றோம். சரி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோமா!


கலை: முதலில் பெரிய காலாப்பட்டு பெ சந்திரசேகரன் எழுதிய கடிதம். நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்பதே மேல். அதை உணர்த்தும் விதமாக சீன அலுமினிய தொழில் நிறுவனம் மேற்கொண்ட சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை பற்றி ஈஸ்வரி அவர்கள் அளித்த மக்கள் சீனம் நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்தேன். பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை குறைத்து, எரியாற்றல் சிக்கனத்தை மேற்கொண்டு செயல்படும் அந்த தொழில் நிறுவனத்தை பாராட்ட வேண்டும். இத்தகைய சமூக பொறுப்புணர்வை எல்லா தொழில் நிறுவனங்களும் மேற்கொண்டு மாசுபாடுகளை குறைப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.
தமிழன்பன்: கரூர் சொ. முருகன் சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று பதிவுகளை இந்நிகழ்ச்சியில் விளக்கமாக கேட்டு புரிந்து கொள்ள முடிகிறது. இதனை அறிவிப்பாளர் மதியழகன் மிக அழகாக தொகுத்து அளித்தார். இந்த முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் சீன வரலாறு உலகெங்கும் பரவ வழிவகுக்கும் என்று எண்ணுகிறேன். இத்தகைய முயற்சி நேயர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.
கலை: சொ. முருகனின் முன்மொழிவுக்கு நன்றி. சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சியை தொகுத்து வெளியிடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அதனை செய்வோம். அடுத்ததாக கீழ் குந்தா கே. கே போஜன் அனுப்பிய கடிதம். உலக முன்னணி பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்தி கேட்டேன். அதில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கும் சீனா உலக தர வரிசையில் 50 வது இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். உலகளவில் தரமிக்க கல்வியை சீனா, மக்களுக்கு வழங்கி வருவதை இது காட்டுகிறது. தாய்மொழிக்கல்வி தரமிக்க கல்வி என்பதை உலக மக்கள் அறியவும் செய்கிறது.


தமிழன்பன்: அடுத்தாக மணச்சநல்லூர் ந. சண்முகம் எழுதிய கடிதம். அன்றாட சீன மொழி, தமிழ் மூலம் சீனம் ஆகிய நிகழ்சிகளால் சீன மொழியை கற்றுக்கொள்ள முடிகிறது. சீன மொழியை தெளிவாக கற்றுக் கொடுக்கும் ஆசிரியாரான தமிழ்ப்பிரிவின் தலைவர் கலையரசி அவர்களுக்கு பாராட்டுக்கள். சீன உணவரங்கம் நிகழ்ச்சி மூலம் சீனரின் உணவு வகைகளை அறிந்து, அவற்றை சமைத்து சுவைக்க முடிகிறது. சீன பண்பாடு நிகழ்ச்சி மூலம் சீனர்களின் பழக்க வழக்கங்களும் தெரிய வருகின்றன.
கலை: தொடர்வது ஜெயங்கொண்டம் கி. இரவிச்சந்திரன் சீன பண்பாடு குறித்து எழுதிய கடிதம். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு வழங்கப்படும் பதக்கங்களில் சீன பண்பாட்டு அடையாளங்கள் நிறைந்திருந்ததை இந்நிகழ்ச்சி உணர செய்தது. வெள்ளி மணிக்கற்களை பயன்படுத்தி செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பாரம்பரிய அடையாளங்களை வெளிப்படுத்தின என்பதை அறிய செய்தது.


மின்னஞ்சல் பகுதி
ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன்.....
மலர் சோலை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய மின்னஞ்சல். லாங் மார்ச் 4 டி எனும் ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட யாகண் 5 என்னும் தொலை உணர்வறி செயற்கைக் கோள், அறிவியல் ஆய்வு, தேசிய நில வள ஆராய்ச்சி பொது அளவீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேளாண் உற்பத்தி மதிப்பு, பேரிடர் மேலாண்மை முதலிய துறைகளில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌ட‌ உள்ள‌தை அறிந்து ம‌கிழ்ந்தேன். அதேபோல கைகளின்றி பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் என்ற பெண்மணி தனது இரண்டு கால்களையும் பயன்படுத்தி போட்டிக்கான விமானங்களை ஓட்டுவதற்கு சான்றிதழ் பெற்று விமானியாக சாதனை படைத்துள்ளது வியப்பில் ஆழ்த்தியது

……ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன்……
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பங்குகொண்டதாக ஐயத்திற்கு உள்ளாகிய லஷ்கர்-இ-தோய்பா அமைப்பின் தலைமை ஆணையாளரை, பாகிஸ்தான் காவல் துறை கைது செய்ததை செய்தியில் கேட்டேன். அதை ஆக்கபூர்வ நடவடிக்கை என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார். இது புதிய பயங்கரவாதத் தாக்குதல் ஏற்படாமல் கூட்டாக தவிர்க்கும் வகையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்ற அவரின் கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது தான்
……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
டிசம்பர் திங்கள் 6 ஆம் நாள் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கேட்டேன். பழங்கால பாணியில், இசைக் கருவிகள் ஏதுமின்றி புகழ்பெற்ற பாடகர் வாங்சிலுவான் அவர்கள் உருவாக்கிய மூன்று பாடல்களைக் கேட்டேன். அப்பாடல்கள் மூலம் பழமை மற்றும் பண்பாட்டின் மணத்தை உணர முடிந்தது. சீன வானொலியுடனான எனது தொடர்பில், இசைக் கருவிகள் ஏதுமின்றி பாடல்கள் ஒலிபரப்பானது இன்றைய இசை நிகழ்ச்சியில் தான். திலகவதி அவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியும் ஏதோ ஒரு வகையில் புதுமை அடங்கியுள்ளது.


……மதுரை-20 N.இராமசாமி……
சர்வதேச சமுகத்தில் சீனா முக்கிய பொறுப்புக்களை ஏற்று உணர்வுபூர்வமான மனபான்மையுடன் சர்வதேச விவகாரக்களை கையாண்டு வருகிறது. 1978 ஆம் ஆண்டு சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புபணியை செயல்படுத்தியபின் சீன சமுகம் மற்றும் பொருளாதரம் உயர்வேக வளர்ச்சியை பன்முகங்களிலும் பெற்றுள்ளன. தற்போது சீனா உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்திவருவதும், சமூக அரசியல் உறுதிபாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றிவருவதும் அனைவரும் கற்க வேண்டிய பாடம்.
……காளியப்பம்பாளையம் க.ராகம் பழனியப்பன்……
சீன பெருநிலப்பகுதி மற்றும் தைவான் இருகரைகளுக்கிடையில் விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்து, அஞ்சல் சேவை துவங்கியிருப்பது வரவேற்றவேற்கப்பட வேண்டியவை. இருகரை உறவிலான மேம்பாடு சீனா உயர் வேக வளர்ச்சியில் முன்னேறுவதற்கு நல்ல தொடக்கமாக இருக்கும்.
……திருச்சி அண்ணா நகர் வி. டி.இரவிச்சந்திரன்……
உணவும் உடல் நலமும் எனும் சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் ஆழமான கருத்துக்களை அறிய முடிந்தது. ஒவ்வொரு சுவையும் உடல் உறுப்புகளுக்கு நல்லதென சீனர்கள் பகுத்தறிந்து, அவற்றை உணவு மூலம் பெற அதற்கேற்ற உணவு வகைகளை உண்டு வருகின்றனர். உணவில் அறுசுவை சரியாக இருந்தால் உணவே நமக்கு மருந்தாகும் என்று சீனர்கள் முன்பே உணர்ந்திருப்பது அவர்களின் மருத்துவ அறிவுத் திறமைக்கு சான்றாகிறது.