தோழமையுடன் நேயர் நண்பர்களுக்கு வணக்கம். வருங்காலம் இனிதாகும் என்ற எதிர்பார்ப்போடு 2009 ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்கும் வேளையில் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வரப்போகிறது என்றாலே கடந்த ஆண்டின் இன்ப மற்றும் துன்ப அனுபவங்கள் மனதில் திரைபோல் விரிய தொடங்கிவிடும். இவ்வாறு கடந்த நினைவுகளை அசைபோட்டு மீளாய்வு செய்வது, தவறிய செயல்பாடுகளை திருத்தி கொள்வதற்கு முத்தாய்பாய் அமையும். வரப்போகின்ற ஆண்டு நமது வளர்ச்சிக்கு எப்படி அமையுமோ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், கடின உழைப்பிற்கு ஏற்ற நன்மை என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையே மேலிடுகிறது.
புத்தாண்டு புதிய தொடக்கத்தை குறிக்கிறது. புத்தாண்டில் எல்லாம் புதிதாய் சிறப்பாய் அமையவே நாமனைவரும் விரும்புகின்றோம். புத்தாண்டின்போது நாம் தெரிவிக்கும் வாழ்த்துக்களில் இரண்டு முக்கிய சொற்கள் இல்லாமல் இருக்காது. நலம், வளம் என்பதே அவைகள். அதாவது நலமோடும் வளமோடும் வளர வேண்டும் என்று குறிப்பிடாத வாழ்த்தொலிகளே இல்லை. நலமும் வளமும் நமது மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிப்படையானவை. அப்படியானால் மகிழ்ச்சியான வாழ்வு காண வாழ்த்துகிறோம் என்பதை தான், உடல் நலத்தோடும், செல்வ செழிப்போடும் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டு வாழ்த்துகின்றோம்.
மன அமைதி மிக்க மகிழ்ச்சியான வாழ்வில் நமது நேயர் நண்பர்கள் அனைவரும் நாள்தோறும் வளர புத்தாண்டின்போது நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். அதற்கு தேவையான அனைத்து வளங்களையும் பெறுகின்ற வாய்ப்பை தங்களது தளராத முயற்சிகளால் அடைய புதிய ஆண்டில் வழி பிறக்கட்டும்.
புத்தம் புதிய ஆண்டில் – நாளும்
நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
நாளைய மனிதர்கள் நாமே – வாழும்
இலட்சிய விடுதலை கனவுகள்
கனவுகள் யாவும் நனவுகளாகும்
இனி இந்த பூமி புதுயுகம் காணும்
வா வா தோழா நீயும் நானும்
சேர்ந்து வந்தாலே வாழ்வு நன்றாகும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சீன தமிழ் ஒலிபரப்பு குடும்பத்திலிருந்து
தோழமையுடன்,
தமிழன்பன்.
|