• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-07 09:49:05    
அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வளமடையும் விவசாயி ஹுவாங் யூ ஷு

cri
சிச்சுவான் மாநிலத்தின் நான் சோங் நகரிலுள்ள ஹுவா குவான் மியௌ கிராமத்தில், உள்ளூர் மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு முன்மாதிரி உழைப்பாளர் இருக்கிறார். முட்டைக் கோழி வளர்ப்புத் துறையில் அவர் தொடர்ந்து கல்வி பயின்று, இணையதளத்தின் மூலம் அலுவல்களை வளர்த்து, வளமடையும் வழியைக் கண்டறிந்து, வேளாண் கூட்டுறவு சங்கத்தை நிறுவியுள்ளார். அவரின் தலைமையில் அக்கிராமத்திலுள்ள முட்டைக் கோழிகளை வளர்க்கும் குடும்பங்களும் கூட்டாக வளமடைந்துள்ளன. அவர் தான் ஹுவா குவான் மியௌ கிராமத்து கட்சிக் கமிட்டியின் செயலாளர் ஹுவாங் யூ ஷு.

ஹுவாங் யூ ஷு வாழ்கின்ற நான் பு மாவட்டம், தேசிய அளவிலான வறுமையான மாவட்டமாகும். அங்குள்ள விவசாயிகளின் வருமானம், பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் உழைப்பாற்றல் ஏற்றுமதியிலிருந்து வருகிறது. 1997ஆம் ஆண்டுக்கு முன், ஹுவாங் யூ ஷுவும் பட்டுப்பூச்சி வளர்ப்பைச் சார்ந்து வாழ்க்கை நடத்தினார். அவரது ஆண்டு வருமானம் சுமார் 2 ஆயிரம் யுவான் மட்டுமே. 1990ஆம் ஆண்டுகளிலிருந்து, தற்சார்பாக தொழில் நடத்தவும் பல்வகை பொருளாதார முறைகளை வளர்க்கவும் விவசாயிகளுக்கு மாவட்ட அரசு ஊக்கமளித்து வருகிறது. வீட்டுப் பறவை வளர்ப்பை ஹுவாங் யூ ஷு கருத்தில் கொள்ளத் துவங்கினார். கடந்த 10 ஆண்டுகளில், வீட்டுப் பறவை வளர்ப்பு தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் அவரது வளர்ப்பு அளவு விரிவாகி வருகிறது. தற்போது அவர் வளர்க்கும் 17000 முட்டை கோழிகள் ஒவ்வொரு நாளும் 15000 முட்டைகளை இடுகின்றன. மேலும், கோழி எச்சத்தை அவர் மறுபடியும் பயன்படுத்தி, கரிம உரப் பதனீட்டு ஆலை ஒன்றை நிறுவியுள்ளார். அவ்வாலையின் ஆண்டு நிகர வருமானம் சுமார் 2 இலட்சம் யுவானாகும். வளமடையும் அனுபவங்களைப் பற்றி ஹுவாங் யூ ஷு கூறியதாவது—

"தற்காலம் அறிவியல் தொழில் நுட்பத்தின் காலமாகும். காலத்தின் கோரிக்கைக்கிணங்க முன்னேற வேண்டும். தகவல் மயமாக்கக் காலத்தில் தகவல்கள் திறவுகோலாக இருப்பதோடு பயன்மிக்கவையும் கூட. எடுத்துக்காட்டாக, இணையதளத்தில் நான் வெளியிட்ட வினியோக மற்றும் தேவைத் தகவல்களை நண்பர்கள் பலர் தேடுகின்றனர். அன்றைய சந்தை நிலையின்படி முட்டை விலையை வெளியிடுகின்றேன். அது பற்றி வணிகர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் கேட்கலாம்" என்றார் அவர்.

செலவைச் சிக்கனப்படுத்தும் வகையில், 2002ஆம் ஆண்டிலிருந்து தீனியை தாமாகவே தயாரிக்க அவர் கற்றுக் கொண்டார். தீனியை வாங்குவதை விட ஒவ்வொரு நாளும் 200 யுவானுக்கு மேல் இதனால் சிக்கனப்படுத்த முடிகிறது. இந்தச் சிக்கனம் பொருளாதாரப் பயனாக மாறிவிடும் என்று செய்தியாளரிடம் அவர் கூறினார். தாமாகவே தயாரித்த தீனி தரமாகவும் விலை மலிவாகவும் இருப்பது மட்டுமல்ல, முட்டைக் கோழிகளின் உடல் நிலைக்கிணங்க சரிப்படுத்தப்படவும் முடியும். தவிரவும், கோழி எச்சத்தின் சுழற்சி பயன்பாட்டை ஹுவாங் யூ ஷு கருத்தில் கொண்டுள்ளார். 2006ஆம் ஆண்டில் கரிம உரப் பதனீட்டு ஆலையை அவர் பதிவு செய்தார். பன்நோக்கு முறையில் கோழி எச்சத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளை, கழிவுப் பொருட்களை பயனுள்ள பொருட்களாக இந்த ஆலை மாற்ற முடியும். மேலும் நல்ல விற்பனை காணப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டின் இறுதியில் 2008ஆம் ஆண்டுக்கான 1600 டன் எடையுள்ள உரம் விற்கும் ஒப்பந்தங்கள் முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது கோழி வளர்ப்புப் பண்ணையின் பொருளாதாரப் பயன் நன்றாக உள்ளது என்ற போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் இன்னல்கள் பலவற்றை தாம் சந்தித்ததாக ஹுவாங் யூ ஷு செய்தியாளரிடம் கூறினார். கோழிகளை வளர்க்கத் தொடங்கிய காலத்தில், நோய் தடுப்பு தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளாததால், நோயால் பாதிக்கப்பட்ட 500க்கு மேலான கோழிகளில் 300க்கு மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

இத்தகைய படிப்பினைகளின் மூலம் தொடர்பான தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஹுவாங் யூ ஷு புரிந்து கொண்டுள்ளார். கடந்த 6, 7 ஆண்டுகளில், நூல்கள் மற்றும் இதழ்கள் பலவற்றைப் படிப்பதில் அவர் ஊன்றி நின்று வருகிறார்.

"சீன வீட்டுப் பறவை, பறவை நோய்க்கான தடுப்பு மற்றும் சிகிச்சை, தீவனப் பொருட்காட்சி ஆகிய இதழ்களுக்கு சந்தாதாரராக பதிவு செய்துள்ளேன். அவற்றிலும் இணையதளத்திலும் கண்டதன் மூலம் தீவன தயாரிப்பையும் தொழில் நுட்பங்களையும் கற்றுக் கொள்கின்றேன்" என்றார் அவர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடி மட்ட ஊழியரான ஹுவாங் யூ ஷு, வளமடையும் பாதையில் நடைபோட தனது சகாக்களுக்கு உற்சாகத்துடன் வழிகாட்டுகிறார். 2006ஆம் ஆண்டில், கிராமத்திலுள்ள கோழி வளர்ப்புக் குடும்பங்கள் அவரது தலைமையில் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை உருவாக்கின. தொழில் நுட்பங்களையும் அனுபவங்களையும் இலவசமாக வழங்குவதோடு, இணையதளத்தில் வினியோக மற்றும் தேவை தகவல்களை வெளியிட மற்ற விவசாயக் குடும்பங்களுக்கு அச்சங்கம் உதவியளிக்கிறது. மேலும், கூட்டாக முட்டைகளை விற்பனை செய்ய முட்டைக் கோழிகளை வளர்க்கும் இதர குடும்பங்களுக்கு உதவியளிக்கும் வகையில், நான் சோங் நகரின் வேறு 5 மாவட்டங்களிலும் விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது ஹுவா குவான் மியௌ கிராமத்தில், 6 குடும்பங்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிகளை வளர்க்கின்றன. வேறு 20க்கு அதிகமான குடும்பங்கள் கோழி வளர்ப்பு மூலம் வளமடைந்துள்ளன.

2006ஆம் ஆண்டில் ஹுவாங் யூ ஷுவின் ஊக்கத்துடன், ஹுவா குவான் மியௌ கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான ஹே ஹுய் என்பவரும் 1000க்கு அதிகமான முட்டைக் கோழிகளை வளர்த்துள்ளார். அவர் கூறியதாவது—

"முன்பு பட்டுப்பூச்சிகளை வளர்த்தோம். அதில் வருமானம் அதிகமில்லை. பின்னர், செயலாளர் ஹுவாங் கோழிகளை வளர்த்து நல்ல வருமானம் பெற்றதைக் கண்டோம். எங்களுக்கு உதவியளிக்க அவர் விரும்புகிறார். தொழில் நுட்பங்கள், எப்போது என்ன தடுப்பூசி போட வேண்டும் முதலியவற்றை எங்களிடம் கூறுகிறார். தற்போது முட்டைக் கோழி வளர்ப்புக்கான கூட்டுறவுச் சங்கத்தில் பலர் சேர்ந்துள்ளனர். இச்சங்கம் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளன. என் குடும்பத்தின் வருமானம் பெருமளவில் அதிகரித்துள்ளது" என்றார் அவர்.

முன்மாதிரி உழைப்பாளராகவும் மாவட்ட மக்கள் பேரவைப்பிரதிநிதியாகவும் பல முறை மாவட்ட கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹுவாங் யூ ஷு பேசுகையில், எமது நாடு வழங்கிய முன்னுரிமையுடன் கூடிய கொள்கைகளை விவசாயிகள் பயன்படுத்தி, காலத்தின் கோரிக்கைக்கிணங்க, புதிய ரக விவசாயிகளாக இருக்க வேண்டும் என்று கூறினார்.