• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-13 10:38:04    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே ! புத்தாண்டில் ஒலிபரப்பாகும் முதல் நேயர் நேரம் நிகழ்ச்சியில், நமது வானொலியின் நிகழ்ச்சிகள் பற்றிய உங்களது கருத்து கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட எண்ணங்களை அனைவருக்கும் அறிய தருகின்றோம்.
தமிழன்பன் பலவித எண்ணங்களோடும் எதிர்பார்ப்புபளோடும் தொடங்கியுள்ள இப்புதிய ஆண்டு இனிமையாக அமையட்டும். கலை, புத்தாண்டில் நல்லதொரு செய்தியை நமது நேயர் அன்பர்களுக்கு செல்லுங்களேன்.
கலை நீங்கள் பலர் கருத்து கடிதங்கள் எழுதி வருகின்றீர்கள். சீன வானொலியின் நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் மறுமொழிகளை பொன்னான கருத்துக்களாக இடைவிடாது தெரிவித்து வருகின்றீர்கள். இவ்வாறு கருத்து கடிதங்களை எழுதுவோரை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த கருத்து கடிதங்களை அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கலாம் என்று எண்ணுகின்றோம்.
தமிழன்பன் நேயர் அன்பர்களே, உங்களுக்கான சிறப்பு செய்தியை தமிழ்ப் பிரிவின் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளனர். சிறந்த கருத்து கடிதங்கள் என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் எழுதுகின்ற கடிதங்களில் நமது வானொலி நிகழ்ச்சிகள் பற்றி அமையும் உங்கள் கருத்துக்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை மறவாதீர்கள். சரி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோமா!
கலை....முதலில் புத்தாண்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மக்களின் வாழ்க்கை ஒழுங்கான நிலைக்கு மீட்கப்பட்ட செய்தியை கேட்டு 30 பள்ளிப்பட்டி ஆர் சுப்ரமணியன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.


தமிழன்பன்......அடுத்து புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் இணையத் தளத்தில் புதிய பக்கம் திறக்கப்பட்டதை பார்த்த பின் ஊதங்கலை கவி செங்குத்துவன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
கலை......அடுத்து டிசம்பர் 28ம் நாள் நடைபெற்ற அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 20வது கருத்தருங்கு பற்றி பெரும்பலூர் சு கலைவாணன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
தமிழன்பன்.....சரி கடித மூலம் தெரிவித்த கருத்துக்களை பார்க்கின்றோம்.
கலை: கடையாலுருட்டி எம். பிச்சைமணி அனுப்பிய கடிதம். சீன வானொலி மூலம் தேசிய விழா விருந்து குறித்து அறிந்தேன். பெய்ஜிங்கில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 29 வது ஒலிம்பிக் மற்றும் 13 வது பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் போது சீனா பல நாடுகளின் தலைவர்களை உபசரித்து வெளிநாட்டு கொள்கையில் முன்னேற்றத்தை காட்டியது. Shen Zhou 7 இல் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்தது, அண்டவெளி ஆய்வில் சீனாவின் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்தது. எல்லா வளர்ச்சி அம்சங்களிலும் சமூக இணக்கத்தை சுட்டிக்காட்டும் சீனாவை பாராட்ட வேண்டும்.
தமிழன்பன்: ஆந்திராவிலிருந்து கடிதம் எழுதும் மும்பை சுகுமார், திருச்சி சின்மயா பள்ளி குழந்தைகள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி அளித்தை பாராட்டி எழுதியுள்ளார். தீபாவளி பற்றிய வரலாற்று பார்வையை அளித்த அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அத்தோடு சீன வானொலி ஒலிபரப்பை முன்னேற்றுவதற்கு, சீன வானொலியை இன்னும் அதிக மக்களை கேட்க செய்வது, கடித எண்ணிக்கையை பெருக்கும் வழிமுறைகள் என பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
கலை: திரு சுகுமார், உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றிகள். தொடர்வது, தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். அழகு பொருட்களை பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவுகள் பற்றி இந்நிகழ்ச்சியில் அறியமுடிந்தது. குறிப்பாக நமது தலைமுடியை பாதுகாப்பது குறித்த தகவல்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. விளம்பரங்களில் மயங்கிபோகும் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு தருவதாகவும் அது இருந்தது.

தமிழன்பன்: இலங்கை மாவடிசேனையிலிருந்து எழுதுகின்ற கே. ஆயிஷா, காலை எழுந்தவுடன் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறேன் என்றும், ஒலிபரப்பப்படுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளும் சீனாவை பற்றிய தகவல்களாக இருப்பதால் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பலர் பயன்பெறும் வகையில் தனது தோழிகளுக்கும் சீன வானொலியை அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
கலை தெடர்வது சென்னை ரேணுகாதேவி செய்தி தொகுப்பு பற்றி எழுதிய கடிதம். காலநிலை மாற்ற பேச்சுவார்த்தையில் நடந்த அனைத்தையும் ரெத்தின சுருக்கமாக தந்த விதம் அருமையாக இருந்தது. ஒரு மரம் வெட்டுமுன் இரண்டு மர கன்றுகளை நடுவதற்கு தூண்டுகின்ற தொகுப்பாக அது இருந்தது.
தமிழன்பன் கவிநிலா சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் கா. அருண் நவம்பர் திங்கள் நடைபெற்ற கூட்டம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். ஏழாவது ஐரோப்பிய உச்சி மாநாடு பற்றி விவாதிக்கப்பட்டது என்றும், அழகான சிச்சுவான் பொது அறிவுப் போட்டியில் அதிகம் பேர் பங்கெடுக்கவும் ஆவண செய்துள்ளதாக தொரிவித்துள்ளார். மின்னஞ்சல், வான் அஞ்சல் மூலம் வருகின்ற கடிதங்கள் தனித்தனி நிகழ்ச்சியாக வழங்கப்படலாம் என்றும் அதிக கடிதங்கள் வாசிக்கப்பட்டால் கருத்துக் கடிதங்களின் எண்ணிக்கை பெருகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கலை கவிநிலா சீன வானொலி நேயர் மன்றத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள். மின்னஞ்சல், வான் அஞ்சல் ஆகியவற்றை தனித்தனி நிகழ்ச்சிகளாக வழங்குவது குறித்து ஆழமாக ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இதுவரை நிகழ்ச்சி நேரத்தில் எங்களால் இயன்றளவு அதிக கடிதங்கள் வாசிக்க முயற்சிக்கின்றோம்.
தமிழன்பன் அடுத்ததாக விழுப்புரம் எஸ் பாண்டியராஜன் அனுப்பிய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி குறித்து அனுப்பிய கடிதம். நவ சீனா உருவாகி 60 ஆண்டு, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக், சென் சாவ் 7 சீன தேசிய விழா ஆகிய நான்களையும் வரிசைபடுத்தி வழங்கியது நன்றாக இருந்தது. மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது.
மின்னஞ்சல் பகுதி

……பாண்டிச்சேரி ஜி.ராஜகோபால்……
சீன மக்கள் நாளேடு புத்தாண்டு வாழ்த்துக் கட்டுரை பற்றிய செய்திகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். 21ம் நூற்றாண்டில் நுழைந்தபின், 2009ம் ஆண்டு, சீனப் பொருளாதார வளர்ச்சியில் சந்திக்கும் மிக கடினமான ஆண்டாகவும் இருக்கக் கூடும் என்று மக்கள் நாளேட்டின் புத்தாண்டு வாழ்த்துக் கட்டுரை தெரிவித்திருந்தது. சீனாவுக்கு துணிச்சலான சவால் என்றால் சக்கரைக் கட்டிதானே! சீன வானொலியின் இயக்குனர் திரு. வாங் கங் நியன் அவர்கள் பணியாளர்களின் சார்பில் எங்களுக்கு வானொலி அலைகளின் மூலமாக வாழ்த்துச் செய்தியை வழங்கியதைக் கேட்டு ரசித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நேயர்களை நண்பர்களாக மதிக்கும் ஒரே வானொலி சீன வானொலிதான் என்று சொன்னால் அது மிகையில்லை.
......வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்......
தமிழ்ப்பிரிவு இணையத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் தனிப்பகுதியை ஒதுக்கி, தமிழ்ப்பிரிவு பணியாளர்களின் வண்ணமயமான நிழற்படங்களுடன் அவர்களின் வாழ்த்துரையை வெளியிட்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து, இத்தகைய பல்வேறு புதிய உள்ளடக்கங்களை இணையத்தில் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.