• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-10 16:52:12    
சிவப்பு அஞ்சலுறை (ஹுங் பாவ்)

cri
சிவப்பு அஞ்சலுறை (ஹுங் பாவ்)

அஞ்சலுறை என்றதும் ஏதோ கடிதம் எழுதப்போகிறோம் என்று நினைக்க வேண்டாம். அஞ்சலுறைகளை பார்த்திருப்போம். நாம் திருமண, காதுகுத்தல், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களுக்கு சென்றால், அன்பளிப்பு தருவது ஒரு வழிமுறை மற்றொன்று மொய் எழுதுதல் அல்லவா. அந்த மொய் கவர் அல்லது மொய் எழுத பயன்படும் உறையை போன்றதுதான் இப்போது நாம் கூறும் சிவப்பு அஞ்சலுறை. வசந்த விழாவின் போது பொதுவாக இளையோர், குறிப்பாக சிறுவர் மற்றும் திருமணமாகாத இளைஞர்கள் முதியோரை, திருமணம் முடித்த மூத்தோரை பார்த்து, வசந்த விழா வாழ்த்தாக "குங் ஷி ஃபா ஸாய், ஹுங் பாவ் நா லாய்" என்று கூறுவார்கள். இதற்கு என்ன பொருள் என்றால் " உங்களுக்கு வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கே எனது சிவப்பு அஞ்சலுறை" என்பதாகும். பேச்சு மொழியில் சொன்னால், "புத்தாண்டு வாழ்த்துக்கள் தாத்தா, சிவப்பு கவரை தா தா".

வசந்தவிழாவின் போது மூத்தவர்கள் பொதுவாக அதிர்ஷ்டத்துக்காக, நல்லாசிக்காக சிவப்பு நிற அஞ்சலுறையில் கொஞ்சம் பணம் போட்டு இளையோருக்கு வாழ்த்தாக அன்பளிப்பாக வழங்குவது வழமை. நம்மூரில் புத்தாண்டின் போது, பெரியோரின் காலில் விழுந்து ஆசி வாங்கினால், அவர்கள் நமக்கு வாழ்த்து கூறி கையில் காசு கொடுப்பது போலத்தான். சீனாவில் அதையே சிவப்பு நிற அஞ்சலுறையில் வைத்து கொடுக்கிறார்கள் அவ்வளவுதான். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்துக்கு மட்டுமல்லாது, சிறியோரை கெட்ட ஆவிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவும் என்பது சீனர்களின் நம்பிக்கை. சிவப்பு நிறத்துக்கு அவ்வளவு சிறப்பு. சிறுவர்களை பொறுத்தவரை சிவப்பு அஞ்சலுறையை விட உள்ளேயிருக்கும் பணம் தான் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் என்பது வேறு.

சிவப்பு நிறத்தோடு தொடர்புடைய வேறு சில வழக்கங்கள்.

சிவப்பு நிற முட்டைகளை மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மக்கள் அளிப்பதுண்டு. திருமணம், குழந்தை பிறப்பு, குழந்தை பிறந்து ஒரு திங்கள் ஆகும் நாள் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது, சிவப்பு முட்டைகளை வழங்குவர். நண்பர்களும், உறவினர்களும் கூடிய தருணத்தில் சிபவ்வு நிறம் பூசப்பட்ட முட்டைகளை வழங்கி மகிழ்கின்றனர். வாழ்க்கையின் துவக்கத்தை, ஆரம்பத்தை உணர்த்தும் விதமாக செந்நிற முட்டைகள் பாரம்பரிய வழக்கமாக வழங்கப்படுகின்றன.

மட்டுமன்றி, குழந்தை பிறந்து ஒரு திங்கள் ஆகும் நாளில், குழந்தையின் வயிற்றில் அல்லது இடுப்பில் செந்நிற நாடா ஒன்றை கட்டுகின்றனர். பாரம்பரியமாக இந்த சிவப்பு நாடா குழந்தையை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருப்பது ஒருபுறம், இந்த நாடாவை கட்டுவதால் குழந்தைக்கு வெப்பமான இதமான சுகம் கிடைக்கும் என்பது மறுபுறம். நம்மூரில் அரைஞாண்கயிறு கட்டுவது போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவ்வளவு ஏன், ஷான்சி மாநிலத்தில் வடபகுதியில் பெண்கள் குழந்தைப்பருவம் முதல் இறக்கும் வரை இந்த சிவப்பு நாடாவை அணிகின்றனராம். அன்றைக்கு அரைஞாண்கயிறு கட்டும் வழமை இடுப்பில் அணியும் ஆடை அவிழாமல் இருக்க ஒரு பட்டி (பெல்ட்) போலவும், வயல்வெளிகளில், கழனிகளில் கோவணத்தை கட்டிக்கொண்டு வசதியாக வேலை செய்யவும், கழனியில் தீடிரென பாம்பு ஏதாவது கடித்தால் ரத்தத்தில் நச்சு ஏறாமல் தடுக்க, கடித்த இடத்திற்கு கொஞ்சம் மேலே கயிறு கட்ட தேடிக்கொண்டிருக்கத் தேவையின்றி உடனே இடுப்பிலிருப்பதை அவிழ்த்து கட்டவுமாக, ஒரு மல்டிபர்பஸ் எனப்படும் பல பயன் தரும் பொருளாக கருதி முன்னோர்கள் பின்பற்றினார்கள் எனலாம். ஆனால் இன்றைக்கு அழகின், கவர்ச்சியின் ஒரு அம்சமாக அரைஞாண்கயிறு கட்டுவதை காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்களிடத்தில் இந்த புதிய நவநாகரீக அம்சம் தற்போது காணப்படுவதை, உலகின் பல பகுதிகளில் காணமுடிகிறது. நூல் கயிறாக அல்லாமல் தங்கம், வெள்ளியாக இடுப்பில் ஜொலிக்கின்றன இந்த அரைஞாண் அணிகலன்கள்.