இவ்வாண்டு, தியன்சின் ஹேய்ஹெ ஆற்றின் கரையில் அமைந்துள்ள இத்தாலி பாணியுடைய காட்சி மண்டலம் சீரமைக்கப்பட்டுள்ளது. 1902ம் ஆண்டு கட்டியமைக்கப்படத் துவங்கிய இப்பிரதேசத்தின் பரப்பளப்பு, 28.45 ஹெக்டராகும். இதில், வீடுகள், துணைத் தூதரகங்கள், நகராட்சி மாளிகை, பாலங்கள், பள்ளிகள் முதலிய 140 மேலை நாட்டுப்பாணியுடைய கட்டிடங்களும், தோட்டம், சதுக்கம் ஆகியவையும் காணப்படலாம். தற்போது, ஆசியாவில் மிகப் பெரிய இத்தாலி பாணி கட்டிடத் தொகுதி, இதுவாகும். தியன்சின்னின் தனிச்சிறப்பான 12 சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக, இத்தாலி பாணி சுற்றுலா மண்டலத்தில் இத்தாலிய சுற்றுலா விழா நடைபெறுகிறது. தியன்சின் மாநகரத்தின் ஹேய்ஹெ நிர்வாக அலுவலகத்தின் செயலாளர் பெய் சியுவான் கூறியதாவது: இந்த இத்தாலிய சுற்றுலா விழாவில், பயணிகள் சுவையான pizza, நூடுல்ஸ், காப்பிஃ முதலிய இத்தாலி உணவுவகைகளைச் சுவைக்கும் பொருட்டு, புகழ்பெற்ற இத்தாலி சமையல் கலைஞர்களை அழைத்துள்ளோம். இத்தாலி பாணி ஒப்பரா நாடகம் உள்ளிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்தியுள்ளோம் என்றார் அவர். 2008ம் ஆண்டு டிசம்பர் பிற்பகுதி முதல் 2009ம் ஆண்டு பிப்ரவரி முற்பகுதி வரை, தியன்சின் மாநகரம் மொத்தம் 34 சுற்றுலா நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மாநகரவாசிகளும் பயணிகளும் இதனால் விடுமுறை நாட்களைக் கழிக்க, நல்ல வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்று எமது செய்தியாளர் தியன்சின் சுற்றுலா பணியகத்திலிருந்து அறிந்துகொண்டார். இப்பணியகத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் பிரிவின் தலைவர் வாங் சியுன் கூறியதாவது: 

உயர்வேக இருப்புப்பாதை மூலம், தியன்சின் வருவது என்ற தலைப்புடன் இணைந்து, குளிர்காலத்தின் பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகளையும் விழாக்களுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தினோம். பனி, வெப்ப ஊற்று, நாட்டுப்புற பழக்கவழக்கங்கள், இயற்கைச் சூழல் ஆகிய தனிச்சிறப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கடந்த டிசம்பர் 27ம் நாள் துவங்கிய தியன்சின் பனிச்சறுக்கு விழா குறிப்பிடத்தக்கது என்றார் அவர். 

கடந்த ஆண்டின் ஆகஸ்டு திங்கள் முதல் நாள், பெய்ஜிங்-தியன்சின் உயர்வேக தொடர்வண்டி போக்குவரத்துக்கு துவங்கி வைக்கப்பட்ட பின், மென்மேலும் அதிகமான பயணிகள் தியன்சின் மாநகரில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து, தியன்சின் சுற்றுலா ஆணையகத்தின் துணைத் தலைவர் சின் தியேலின் கூறியதாவது:
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், உயர்வேக இருப்புப்பாதை, பெய்ஜிங்கையும் தியன்சினையும் இணைத்துள்ளது. இதனால், தியன்சின் மாநகரம் நலன் பெற்று வருகிறது என்று அவர் கூறினார். வசந்த விழா காலத்தில், தியன்சின் மாநகரத்தின் சுற்றுலா சந்தை மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. வாய்ப்பு இருந்தால், நீங்களும் வந்து பார்க்கலாம்.
|