• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-16 23:08:31    
பூட்டு....... பூட்டலை !!!

cri
அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். தனிமனித பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதன் அடையாளமே நமது வீடுகள். விலங்குகள், காலநிலை என பல இயற்கை சூழல்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொண்டு, நிம்மதியாக வாழ்வதற்கு தான் வீடுகள். அவற்றை பாதுகாக்க உள்ளவை பூட்டுகள். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டு குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர் பெரிய நிறுவனங்கள் பூட்டுகளை தயாரிக்க தொடங்கின. பூட்டுகளின் சாவிகளுக்கு போலி சாவிகள் உருவாக்கவதையும் மிகவும் எளிதாக்கிவிட்டனர். உண்மையான சாவியை கொண்டு கொடுத்த 5 நிமிடங்களில் எத்தனை போலி சாவிகளையும் உருவாக்கிவிடுகின்ற நிலை இப்போது உள்ளது. ஆனால் அவ்வாறு தயாரிக்க உண்மையான சாவி கூட தேவையில்லை என்ற சூழல் வந்தால்....

அமெரிக்காவி்ன் கணினி அறிவியலாளர்கள் போலி அல்லது கள்ள சாவிகளை உருவாக்குவதற்குரிய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அவ்வாறு போலி சாவிகளை உருவாக்க உண்மையான சாவி தேவையில்லை என்பதே இதனுடைய சிறப்பாகும். அப்படியானால் எப்படி போலி சாவிகளை தயாரிப்பார்கள் என்று கேட்கிறீர்களா? உண்மையான சாவியினுடைய நிழற்படம் ஒன்று மட்டும் போதும். பல போலி சாவிகளை குறைந்த நேரத்தில் உருவாக்கி விடலாம். நம்ப முடியவில்லையா?

வீடுகள் மற்றும் அலுவலக சாவிகளிலுள்ள ஏற்ற இறக்கங்கள் சாவியை திறப்பது பற்றிய முழுவிபரங்களையும் விளக்குகின்ற பதிவு எண்ணை குறிக்கிறது. இந்த பதிவு எண்ணை கொண்டிருக்காத சாவிகளின் பூட்டை திறக்க முடியாது. எண்ணியல் பிம்பம் மற்றும் ஒளியியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களே பிற சாவிகளை உரிமையாளருக்கே தெரியாமல் போலியாக தயாரிக்கும் முறையை எளிமையாக்கியுள்ளது. high-resolution அதாவது உயர் பிரிதிறனை கொண்ட நிழற்படத்தை வைத்து சாவிகளை பிரதி எடுக்கக்கூடிய வல்லுனர்கள் ஏற்கெனவே உள்ளனர். ஆனால் தற்போது அந்நிலை மலையேறிவிட்டது. பிரிதிறன் குறைவாக உள்ள எண்ணியல் புகைப்படக் கருவிகள் பரவிவிட்டதால், வல்லுனர்களின்றி, நீங்களும் நானுமே அடிப்படை கணினி தொழிற்நுட்பங்களின் மூலம் போலி சாவிகளை உருவாக்க முடியும் என்பதை இந்த மென்பொருள் காட்டியுள்ளது.

உண்மையான சாவியின் நிழற்படத்தை கொண்டு இந்த மென்பொருளை பயன்படுத்தி, போலி சாவியை தயாரிப்பதற்கான எல்லா தகவல்களையும் எளிதாக பெற்றுவிடலாம். இதற்கு, இரண்டு செய்முறை விளக்கத்தை இந்த மென்பொருளை உருவாக்கிய அறிவியலாளர்கள் நிகழ்த்தி காட்டினார்கள். குடியிருப்பு ஒன்றிலிருந்து செல்லிடபேசி மூலம் எடுக்கப்பட்ட சாவியின் நிழற்படத்தை இந்த மென்பொருளில் செலுத்தியவுடன் அதேபோன்ற சாவிகளை தயாரிக்கும் சூத்திரங்களை உடனடியாக வழங்கியது. இதுகூட பரவாயில்லை.

வீட்டு உரியமையாளருக்கோ பிறருக்கோ தெரியாமல் 200 அடி தொலைவிலிருந்து, 5 அங்குல தொலைநோக்கு ஆடியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட நிழற்படத்தை வைத்து கூட இவ்வாறு போலி சாவிகளை தயாரிக்க முடிவதை அவர்கள் நிகழ்த்திக்காட்டினர். நாம் வைத்திருக்கும் சாவிகள் மிகவும் இரகசியமானதல்ல என்று காட்டவே இந்த மென்பொருளை கண்பிடித்திருக்கிறோம் என்கிறார் San Diego விலுள்ள கலிபோர்னிய பல்கலைக்கழக ஜேக்கப்ஸ் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் பேராசிரியர் Stefan Savage. எனவே யாரும் யார் வீட்டு பூட்டுகளையும் திறக்கலாம் என்ற நிலை இப்போது உள்ளது. இத்தகைய போலி சாவிகளை பற்றிய பயம் அதிகரித்துள்ளதால் மின்காந்த இரகசியங்களை உள்ளடக்கிய புதிய பூட்டுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவ்வாறான பூட்டுகள் வழக்கமாகும்போது நாம் நம்முடைய சாவிகளை சிறிய கடன் அட்டை போல் வைத்து கொண்டு தேவைப்படுகின்றபோது பயன்படுத்தலாம். ஏதோ சாவி எடுத்து பூட்டிவிட்டால் நாம் மிகுந்த பாதுகாப்பாக உள்ளோம் என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. நாம் நினைக்கிற அளவுக்கு மிகுந்த பாதுகாப்பாக இல்லை என்பது இப்போது புரிகிறதல்லவா? இனிமேல் கதவுகளில் சாவியை வைத்துவிட்டு வீட்டினுள் இருப்பதை கூட சற்று சிந்திக்க வேண்டும்.

நிகழ்ச்சியை நிறைவு செய்வதற்கு முன்னால், அன்றாட வாழ்க்ககைக்கு உகந்த சிறு தகவல். அண்மையில் Colorado பல்கலைக்கழகத்தின் உயிரி வேதியல் பேராசிரியர் Rob Knight டும் இயற்கை சூழலியல் துறையின் Noah Fierer வும் நடத்திய ஆய்வில் மனிதர்களின் கைகளில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். 51 கல்லூரி மாணவர்களின் 102 கைகளை ஆய்வு செய்தபோது 4,742 வகை நுண்ணுயிரிகளை இனம்கண்டனர். ஒவ்வொரு கைகயிலும் 150 நுண்ணுயிரிகள் இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதில் ஆண்களை விட பெண்களின் கைகளில் அதிகமான நுண்ணுயிரிகள் காணப்பட்டதாம். இந்த வேறுபாடு ஆண்களின் தேலில் காணப்படும் அமிலத்தாலும் வேர்வை மற்றும் எண்ணை சுரப்பிகளின் வேறுபாட்டாலும் நிகழக்கூடும் என்கிறார்கள்.

இதில் காணப்படுகின்ற நுண்ணியிரிகளில் பல நச்சு தன்மையற்றவை. சில நச்சு தன்மையுடையதாகவும் உள்ளன. ஒருவரின் இரு கைகளிலும் 17 விழுக்காடு நுண்ணுயிரிகள் தான் ஒரேமாதிரியாக இருந்துள்ளன. இதர அனைத்தும் வேறுபட்டவையே. இந்த ஆய்வை வேவ்வேறு நாடுகளில் வேறுபல மாணவர்களிடத்திலும் நடத்த ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குழந்தை பருவத்திலிருந்தே நாம் கற்ற தொடக்ககால சுகாதாரக்கல்வி பாடம். வீட்டிற்குள் செல்லும்போதும், சாப்பிடுவதற்கு முன்னரும் கைகளை கழுவதன் பின்னணியில் இத்தகைய மேலான இரகசியம் இருப்பது இப்போது தான் புரிகிறது.