• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 11:02:31    
அறிவியல் அறிவில் சீனர்கள்

cri
அறிவியல் சாதனைகள் பொதுவாக மக்களனைவரையும் கவர்கின்றன. பல்வேறு அறிவியலாளர்களின் அயரா உழைப்பால் முந்தைய தலைமுறையினர் பெறாத பல வசதிகளை இன்று நாம் பெற்று இன்புறுகின்றோம். பூமியிலும், மேலே விண்வெளியிலும், நிலத்திற்கு கீழும் மேற்கோள்ளப்படுகின்ற சிறு ஆய்வுகள் கூட மனிதகுலத்தின் நலனை சார்ந்திருப்பதே அறிவியலின் முக்கியத்துவமாகும். எல்லைகளை தாண்டி அறிவியல் சாதனைகள் முன்னேறுகின்ற அதேவேளை, அவற்றில் பலவற்றை பொதுமக்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியின் கனிகளை மக்கள் அறிந்து, புரிந்து, அதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி மகிழும் அளவிற்கு எளிமைபடுத்தப்பட்டு நடைமுறையாவது தான் உகந்தது.

அறிவியல் செயல்முறைகளை, பார்வைகளை செயல்பாடுகளை எல்லா தலைமுறையினரும் கற்றுக்கொள்ள செய்வது பொது மக்களின் அறிவியல் சார்ந்த அறிவை வளர்க்கும். இது அறிவியல் அறிவை மட்டுமின்றி, அறிவியல் ஆய்வுக்கான வழிமுறைகளின் புரிதலையும் வளர்க்கிறது. இதன் மூலம் அவரவர் வழிமுறைகளில் சோதனைகளை மேற்கொண்டு, உண்மைகளை மெய்ப்பிக்க மக்கள் அறிந்து கொள்வர். இவ்வாறு அறிவியல் செயல்முறைகளை தொடர்ந்து பின்பற்றுவதால் தான், அதன் சாதனை எல்லைகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன.

திசைகாட்டி, தாள், அச்சுக்கலை, வெடிமருந்து, விசிறி, குடை என பல கண்டுபிடிப்புகளை சீனர்கள் உலகிற்கு தந்திருக்கிறார்கள். இவை அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளன. முற்காலத்திலிருந்தே சீனர்கள் அறிவியல் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கிவருவதை இது காட்டுகிறது. இத்துறையில் சீன மக்களின் தற்போதைய விழிப்புணர்வை அறிய 2007 டிசம்பர் திங்கள் முதல் 2008 பெப்ரவரி திங்கள் வரை ஆய்வொன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள்படி, சீன மக்கள் மத்தியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில், 2.25 விழுக்காட்டினர் அடிப்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவில் வளர்ந்துள்ளதாக சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப சங்கம் நடத்திய இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது 2005 ஆம் ஆண்டில் 1.6 விழுக்காடாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாய்வு சீன பெருநிலப்பகுதியின் 31 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த 18 முதல் 69 வயது வரையான 10,080 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் 18 விழுக்காட்டினர் அறிவியல் சொற்களையும், 33.5 விழுக்காட்டினர் அறிவியல் செயல்முறைகளையும் புரிந்துகொள்வது தெரியவந்தது. 59.4 விழுக்காட்டினர் அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை அறிந்திருக்கின்றனர். ஆசிரியர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மிகவும் மதிக்கக்கூடியவர்களாக கருத்து தெரிவித்துள்ள மக்களில் 40.1 விழுக்காட்டினர் தங்கள் குழந்தைகள் அறிவியலாளர்களாக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் வளர்ச்சிக்கும், மனித மூலவளங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதால் சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? என்று இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டினால், அது சீனாவின் வளர்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமையும் என்று 82.8 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். பொதுவாகவே அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் எதிர்கால வளர்ச்சியில் சீனர்கள் அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். அதனால் தான் 81.9 விழுக்காட்டினர் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி தங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் வழங்குமென நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகள் இவ்வாறிருக்க, அமெரிக்காவின் அறிவியல் இதழின் தலைமை பதிப்பாசிரியர் ஆல்பர்ட்ஸ் அளித்துள்ள பேட்டி இக்கருத்தை உறுதிபடுத்துவதாக உள்ளது. 1880 ஆம் நிறுவப்பட்ட அறிவியல் இதழ், 1900 லிருந்து இலாபநோக்கற்ற அமெரிக்க அறிவியல் வளர்ச்சி சங்கத்தின் அதிகாரபூர்வ இதழானது. ஒவ்வொரு வாரமும் உலகளவில் ஒரு மில்லியன் வாசகர்களை இது கொண்டுள்ளது. அதன் தலைமை பதிப்பாசிரியர் ஆல்பர்ட்ஸ், செம்டம்பர் திங்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டார். சீனர்களின் அறிவியல் அறிவு வளர்முகத்தில் இருப்பதாக அவர் சின்குவா செய்தி நிறுவனத்திற்கு அக்டோபர் இறுதியில் பேட்டியளித்தபோது தெரிவித்தார். அறிவியலில் தேர்ந்த பெற்றோர், இதழ்களில் வெளியாகும் அறிவியலாளர்களின் புலமைமிக்க கட்டுரைகள் மற்றும் பொறியியலாளர்கள் சீனாவில் நாள்தோறும் அதிகமாகி கொண்டு வருவதே இதற்கு காரணமாகும் என்று அவர் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமானால் 2007 ஆம் ஆண்டு அறிவியல் இதழில் மட்டுமே சீன அறிவியலாளர்கள் எழுதிய ஏறக்குறைய 30 கட்டுரைகள் வெளியான. ஓராண்டில் பெறப்படும் 12,000 அறிவியல் கட்டுரைகளில், தொகுப்பாசிரியர்களின் மிக கடுமையான மறுஆய்வுக்கு பின்னர் 7 விழுக்காட்டு கட்டுரைகள் தான் அறிவியல் இதழில் வெளியாகின்றன. அவற்றில் சீன அறிவியலாளர்கள் எழுதிய 30 கட்டுரைகள் ஓராண்டில் வெளியாகியிருப்பது சீன அறிவியல் வளர்ச்சியை வெளிகாட்டும் முக்கிய விடயமாகும்.

அண்மையில் பெய்ஜிங்கில் அறிவியல் இதழ் நடத்திய முதல் செய்தி வெளியீட்டில் சீன அறிவியலாளரின் பருத்தியிலான பூச்சி ஒழிப்பு பற்றிய அறிவியல் கட்டுரை மிகவும் பாராட்டப்பட்டது. 1978 யில் அறிவியல் இதழ் தனது முதல் பிரதிநிதியை சீனாவுக்கு அனுப்பியது. கடந்த முப்பது ஆண்டுகளில் சர்வதேச அளவிலான ஆய்வுகளில் சீனர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளதாக திரு. ஆல்பர்ட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை போன்றல்லாமல் சீனாவில் அறிவியல் மதிப்பீடுகள் போற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு, நிலநடுக்க முன்னெச்சரிக்கை, காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள், பாதுகாப்பான ஊட்டசத்துமிக்க உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் பெற சீனர்கள் முயல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அறிவை கடந்த சாதனைகளை ஆய்வுகளால் உண்மைகளாக்கி உயரும் சமூகத்திற்கு சீனா முன்னுதாரணமாக அமைகிறது என்றே சொல்லலாம்.