• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 11:05:38    
நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்

cri

கலை: எமது நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் எண்ணங்களின் வண்ணத்தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: நாள்தோறும் எமது நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு, நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுதி அனுப்பி வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கலை: ஆம் நண்பர்களே. பலரது விருப்பப்படி, தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு நேயர் நேரம் நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்ட உங்கள் குரல் வழி கருத்துக்கள் இனிமேல் இடம்பெறாது. நேயர் நேரம் நிகழ்ச்சியில், இனி உங்களின் கடிதங்களும், மின்னஞ்சல்களும் மட்டுமே இடம்பெறும்.
க்ளீட்டஸ்: ஆகவே, இனி நிகழ்ச்சியில் அதிக கடிதங்களும், மின்னஞ்சல்களும் வாசிக்கப்படும். நண்பர்கள் ஆர்வத்துடன் மேலதிக கடிதங்களை எழுதியினுப்புமாறு வேண்டுகிறோம்.
கலை: எப்போதும் எழுதும் நேயர்கள் தொடர்ந்து எழுதியனுப்புங்கள், எப்போதாவது எழுதுபவர்கள் அடிக்கடி எழுதியனுப்புங்கள், எழுதவேண்டும் என்று நினைத்து, எழுதாமலேயே விட்டுவிடுபவர்கள் இனி ஓரிரு வரிகளாவது எழுதியனுப்ப முயற்சி செய்யுங்கள்.


க்ளீட்டஸ்: நிகழ்ச்சிகளை கேட்பதோடு நின்றுவிடுபவர்கள், உங்கள் கருத்துக்கள் எமக்கு ஊக்கமளிக்கும் என்பதை நினைவில் கொண்டு கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்கள் வாயிலாக அவற்றை எமக்கு எழுதியனுப்புங்கள்.
கலை: தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேளுங்கள். மறவாமல் நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் எண்ணங்களை கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களூடாக எழுதியனுப்புங்கள் என்ற வேண்டுகோளுடன், இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
கடிதப்பகுதி
கலை: அரியலூர், உத்திரக்குடி கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். நட்புப்பாலம் நிகழ்ச்சியில், சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட ஆறு தலைசிறந்த நேயர்களுடனான பேட்டியின் முதல் பகுதியை கேட்டேன். சீனப் பயணம் சென்றவர்களை தனித்தனியாக பேட்டி எடுத்து ஒலிபரப்பியதை கேட்டுள்ளோம். இப்போது ஆறு தலைசிறந்த நேயர்களையும் ஒன்றாக பேட்டி எடுத்துள்ளது, சிறப்பாக இருக்கும் என்பதை முதல் பகுதியே உணர்த்திவிட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்.
க்ளீட்டஸ்: ஊட்டி சுரேந்திரன் எழுதிய கடிதம். சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியில் குளுகுளு குவெய்யாங் பற்றி தமிழன்பன் அவர்கள் கூறக் கேட்டோம். மியாவ் இன மக்களின் தொல்பொருள் அருங்காட்சியகம், இயற்கைக் காட்சித் தளங்கள் முதலியவை குறித்து அறிய முடிந்தது. முற்கால நீர் இறைக்கும் இயந்திரம், சாம்பிரானிக் கருவிகள், நீர் ஆற்றலால் இயங்கு செக்கு இயந்திரம் போன்றவை குறித்த தகவல்கள் நன்றாக இருந்தன.


கலை: இலங்கை காத்தான்குடி மு. ஹ. மு இர்ஃபான் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை நாள்தோறும் கேட்டு வரும் பல நேயர்களில் நானும் ஒருவன். அருகிலுள்ள நண்பர்களும் சீன வானொலியை கேட்பவர்கள் என்பதால், நிகழ்ச்சிகளை கேட்டு எங்களுடைய கருத்துக்களை நாங்கள் பகிர்ந்துகொள்வோம். குறிப்பாக எங்கள் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் தகவல்களை பற்றி நாங்கள் அதிகம் உரையாடுவோம். அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும் உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து பல நேயர்களை பெற்று, புகழ் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
க்ளீட்டஸ்: அறிவியல் உலகம் நிகழ்ச்சி குறித்து சென்னை-5, எஸ். ரேணுகாதேவி எழுதிய கடிதம். வயதானவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்க இணையதளம் எப்படி பயன்படும் என்பதை பற்றிய ஆய்வு குறித்து தமிழன்பன் விளக்கினார். இன்றைய தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றம், இணையதளத்தின் பங்கு ஆகியவற்றை இதன் மூலம் அறிந்து தெளிந்தோம்.
கலை: சீன மகளிர் நிகழ்ச்சி குறித்து மெட்டால எஸ். பாஸ்கர் எழுதிய கடிதம். ஆடலிலும், பாடலிலும் ஆர்வம் கொண்ட சீனப் பெண் லுவான்சியாவ் அவர்கள் தன்னலம் கருதாமல் பிறர் நலக் கண்ணோட்டத்துடன் வாழ்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பது குறித்து மகளிர் நிகழ்ச்சியில் அறிந்துகொண்டோம். தீ விபத்துக்களை தடுப்பது, மர வீடுகளை அகற்றி செங்கற்களால் ஆன வீடுகள் கட்ட உதவுவது, பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல துணைபுரிவது என பிறரின் நலனுக்காய் லுவான்சியாங் அம்மையார் செய்யும் பணிகள் பாராட்டுக்குரியவை.
க்ளீட்டஸ்: இலங்கை மட்டக்களப்பு எம். நர்த்தனா எழுதிய கடிதம். சீனத் தமிழொலி இதழும், நாட்காட்டியும் கிடைத்தன. நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். குறிப்பாக திங்கட்கிழமை ஒலிபரப்பாகும் சீன வரலாற்றுச்ச் சுவடுகள் நிகழ்ச்சியை கேட்டு குறிப்பெடுத்து வருகிறேன். அதேபோல், அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் நான் பல அறிவியல் தகவல்களை அறிந்து எனது தோழிகளிடம் பகிர்ந்துகொள்கிறேன். பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கும் சீன வானொலிக்கு நன்றிகள்.


கலை: சீனப் பண்பாடு நிகழ்ச்சி குறித்து கடையாலுருட்டி எம். பிச்சைமணி எழுதிய கடிதம். சீனத் திருமணங்கள் பற்றிய தகவல்களை கேட்டோம். கடந்த 30 ஆண்டுகளில் சீனாவிலான திருமணங்களில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அக்கால எளிய திருமணம், இக்கால ஆடம்பர திருமணம், எளிய ஆடையோடு தம்பதியர் எடுத்துக்கொண்ட கறுப்பு வெள்ளை நிழற்படம் என பல தகவகளை அறிந்து கொண்டேன்.
க்ளீட்டஸ்: விழுப்புரம் எஸ். கருணாகரன் எழுதிய கடிதம். விழுப்புரம் நகரில் தலைமை அஞ்சல் நிலையத்தில் பணிபுரிகிறேன். சீன வானொலி நிலையம், தமிழ்ப்பிரிவு என்ற முகவரியிட்ட அஞ்சல் உறைகளை கொடுத்தபோது எஸ். சேகர் என்பவரிடம் அதை பற்றி அண்மையில் விசாரித்தேன். அவர் எனக்கு விளக்கமாக சீன வானொலியின் நிகழ்ச்சிகள் மற்றும் அலைவரிசை பற்றி கூறினார். முதல் முறையாக நவம்பர் 6ம் நாள் உங்கள் நிகழ்ச்சிகளை கேட்டேன். இத்தனை ஆண்டுகளாக ஏன் சீன வானொலியை பற்றி அறியாமலிருந்தோம் என்ற வருத்தமும், ஆதங்கமுமே ஏற்பட்டது. நிறைய பயனுள்ள செய்திகளை ஒலிபரப்பும் உங்கள் முயற்சிக்கும், உழைப்புக்கும் பாராட்டுக்கள்.
கலை: புதிய நண்பராக அறிமுகமாகியிருக்கும் கருணாகரன் அவர்களை சீன வானொலியின் நேயர்கள் அனைவரின் சார்பில் வரவேற்கிறோம். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேளுங்கள், உங்கள் கருத்துக்களை தவறாமல் எழுதியனுப்புங்கள். நண்பர் சேகர் அவர்களுக்கு எமது நன்றிகள்.


தொடர்ந்து, மதுரை திருமங்கலம் பி. கதிரேசன் எழுதிய கடிதம். விவசாயத்தொழிலாளர்களின் நிலை பற்றிய விளக்கம் இடம்பெற்ற கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அவ்வாறே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியின் மொழி பயிற்சியளிக்கும் முறை நன்றாக அமைந்துள்ளது. இடையிடையே இசையை சேர்ப்பது, கேட்பதற்கு புத்துணர்ச்சியூட்டுவதாக உள்ளது.
க்ளீட்டஸ்: புதுக்கோட்டை ஜி. வரதராஜன் எழுதிய கடிதம். நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், சீனாவில் மக்கள் செய்யும் தாய்ச்சி சுவான் உடற்பயிற்சிமுறை பற்றியும், ஒலிம்பிக் போட்ட நடைபெற்ற போது அதற்கு கிடைத்த முக்கியத்துவம் பற்றியும் கூறக் கேட்டேன். தாய்ச்சி சுவான் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நோய் குறைவதோடு, தீராத பல நோய்களுக்கும் இப்பயிற்சி அருமருந்தாக பயன்படுகிறது என்று அறிந்துகொண்டேன். மேலும் தூக்கமின்மைக்கு இவ்வுடற்பயிற்சி நல்ல பலன் தரும் என்பதை அறிந்து வியந்துபோனேன்.
மின்னஞ்சல் பகுதி


……வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
ஜனவரித் திங்கள் 30 ஆம் நாள் இடம்பெற்ற •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் •2009 ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதார அதிகரிப்பு• என்ற கட்டுரை இடம்பெற்றது. உலக நாடுகள் யாவும், மாபெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் தருவாயில், எந்த அளவிற்கு மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்தித்ததோ, அந்த அளவிற்கு அமெரிக்கா வீழ்ச்சியை சந்திக்கும் என கணிப்புக்கள் நிலவுகின்றன.ஆனாலும், சீனாவின் பொருளாதாரம் நிதானமாக இருக்கும் என்ற செய்தி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. நிதி நெருக்கடியால், வளர்ந்த நாடுகளின் ஆற்றல் பெருமளவு குன்றியுள்ள நிலையில், சீனா, தனது நிலைமையை தொடர்ந்து ஒரே அளவில் வைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இதற்கு, நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட சீனத் தலைவர்களும், அவர்களின் முயற்சிகளுக்கு தோள் கொடுக்கும் மக்களும்தான் காரணம். அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
......ஊட்டி. எஸ்.நித்தியா......
பிப்ரவரி 4ம் நாள் ஒலிபரப்பான விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியில் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் விளையாட்டு தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நாடலும் , இரண்டாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரரும் இருப்பதை அறிந்தேன். விளையாட்டுச் செய்திகள் மூலம் பல்வேறு விளையாட்டுகள் பற்றிய தகவல்களை எங்களுக்கு அறியத்தரும் சீன வானொலிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


……சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன்……
சீன வானொலி தமிழ்ப்பிரிவின் ஒலிபரப்பை செந்தில் இல்லத்தில் கணினி மூலம் கேட்டேன். 23 ஆண்டுகளாக இரவில் இரைச்சலுக்கு மத்தியிலும் பிற வானொலிகளின் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் கேட்டு வந்த நான் கணினி இருந்தால் தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமாலும் கேட்கலாம் என்பதை நினைக்கும் போது, வியப்பாகத்தான் இருக்கிறது. காலம் எப்படி மாறிவிட்டது என்பதை கண்டு வியந்து நிற்கிறேன்.
……சிறுநாயக்கன் பட்டி கே.வேலுச்சாமி……
கடந்த ஆண்டில் உலகில் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் வேளையில் சீன அரசு தனது பொருளாதார வளர்ச்சியில் சரியான பாதையில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த ஆண்டும் சீன நடுவணரசு தனது ஆக்கப்பூர்வமான பொருளாதார கொள்கையில் ஊன்றி நின்று சீரான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும். சீன விவசாயிகளின் மருத்துவ சிகிச்சை கட்டணத்தை குறைப்பதற்கு வருகின்ற 3 ஆண்டுகளுக்குள் சுமார் 85 கோடி யுவான் தொகையினை ஒதுக்கியதன் மூலம் சீன அரசு விவசாயிகளின் நலனுக்கும், நல்ல எதிர்காலம் அமைத்து தருகிறது.


பாண்டிச்சேரி ஜி ராஜகோபால்
செய்திகளின் மூலமாக 2009ம் ஆண்டின் துவக்கத்திலேயே, அதுவும் வசந்தவிழா வாரத்தில் சீனாவின் சுற்றுலா சந்தையின் உற்சாகமான நிலையை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன். மிகவும் செழுமையான வசந்த விழாவின் போது, பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா வருமானம் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதைக் கேட்டு, பொருளாதார வளர்ச்சியின் துவக்கம், ஆண்டின் துவக்கத்திலேயே தெரிந்து விட்டது. இன்பமாக துவங்கிய ஆண்டில் சீனப் பொருளாதாரம் மேலும் வளர வாழ்த்துகின்றேன்.
ஊட்டி, ஏ. வினோத்
ஜனவரி திங்கள் 25 ஆம் நாளன்று சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்டேன். இந்த நிகழ்ச்சியில் முள்ளங்கி ஊறுகாய் பற்றிய செய்முறையை கூறினீர்கள். நான் இதுவரை எலுமிச்சை,மாங்காய், பூண்டு, தக்காளி மற்றும் நார்த்தங்காய் போன்ற ஊறுகாய்களையே சுவைத்துள்ளேன். ஆனால் இந்த புதுமையான முள்ளங்கி ஊறுகாய் பற்றி கேட்டபின் எனது தாயாரிடம் கூறி தயாரிக்க சொல்லப்போகிறேன். புதுமையான அதே சமையம் எளிதான செய்முறைகளுடன் கூடிய சீன உணவு வகைகளை இனி வாரம் தோரும் கேட்டு அதை தயார் செய்து சுவைக்க நான் தயாராக இருக்கிறேன்.
......பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன்......
ஜனவரி திங்கள் 25ஆம் நாள் வழங்கிய செய்தித் தொகுப்பு மக்களுடன் இணைந்து சீன வசந்த விழா கொண்டாடிய சீன அரசுத்தலைவரை நினைத்து மிகவும் பெருமை கொள்ள செய்தது. நாட்டு மக்களின் நலன் மீது அக்கரை கொண்டு அவர்களுடன் வசந்த விழாவை சேர்ந்து கொண்டாடியது நில நடுக்க சோகத்தையும் மறக்க செய்து, அந்த மாநிலத்தின் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்து இருக்கும். மக்களின் மனதை அறிந்து நடக்கும் சீனத் தலைவர்களின் இது போன்ற கொண்டாட்ட நடவடிக்கைள் பாராட்டப் படவேண்டியவை.


…விஜயமங்க‌லம் குணசீலன்......
அமெரிக்க அரசுத்லைவர் ஒபாமாவின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் பற்றிய செய்தித்தொகுப்பு கேட்டேன். தம்முடைய ஆட்சியின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களுக்கு நிறய பயன்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் விரைவில் நிறைவேறி மக்களுக்கு நல்லது நடக்கும் என நம்பலாம். புதிய அமெரிக்க அரசுத்தலைவரது பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்.
......பாண்டிச்சேரி N.பாலகுமார்......
சீன கதை நிகழ்ச்சியில் பேரழகி சி ஷு கதையின் கடைசி பாகம் கேட்டு மகிழ்ந்தேன். இக்கதையின் ஆரம்பம் முதல் கேட்டு வருகிறேன். கதையில் வரும் பாத்திரங்கள், மிகவும் கவனமாக கவனிக்கமால் விட்டாலும், கதையின் ஒட்டத்தை தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிந்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல ஒரு கதை கேட்ட மகிழ்ச்சி அளித்தது. குறிப்பாக கதை வாசிக்கும்போது நான் இருப்பதில்லை. ஏதோ ஒரு பாத்திரமாகிவிடுகிறேன் சீன கதை நிகழ்ச்சியில் கதை கேட்பது என்பது, துவக்கத்தில் "அறுக்குதுப்பா" என்று நினைப்பேன். இப்போது அந்த முடிவை மாறிக்கொண்டேன். கதையின் கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தியதற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கீழ்குந்தா கே. கே. போஜன்
சீன வசந்தவிழா மற்றும் புத்தாண்டின் கொண்டாட்டம் பற்றி நிகழ்ச்சிகள் மூலம் அறிந்துகொண்டேன். இந்தியாவில் பொதுவாக புத்தாண்டு நாளில் தேசியக் கொடியை தலைவர்கள் ஏற்றுவதில்லை. ஆனால் சீனாவில் புத்தாண்டு நாளில், தியென்னான்மென் சதுக்கத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செய்யப்படுவதை அறிந்துகொள்ள முடிந்தது. விழாவை கொண்டாட அரசு தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் உதவித்தொகை வழங்கியதை கேட்டு மகிழ்ந்தேன். குறிப்பாக சின்ச்சியாங் உய்கூர் சிறுபான்மை தேசிய இன மக்கள் உதவித்தொகையை பெற்று சிறப்பாக விழாவை கொண்டாடினார்கள் என்பதை கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.