இவ்வாண்டு பிப்ரவரி 25ம் நாள் சீனாவின் திபெத் இனத்தின் சந்திர நாட்காட்டி படி திபெத் புத்தாண்டின் முதல் நாளாகும். திபெத் புத்தாண்டு சீனாவில் வாழ்கின்ற 50 இலட்சம் திபெத் இன மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் பாரம்பரிய விழாவாகும். இன்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசா முழுவதும் மகிழ்ச்சிகரமான இசையொலி எழுகிறது. வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் இந்நகர் அழகுபடுத்தப்பட்டுள்ளது. போத்தலா மாளிகையும் புத்தம்புதிய பட்டு துணி பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் வாசலின் முன்னாலும் ஜெமா என்னும் மரப் பெட்டி வைக்கப்படுகின்றது. அதிலே வதக்கப்பட்ட கோதுமை பயிர் மற்றும் இதர தானியங்கள் வைக்கப்படுகின்றன. இது பற்றி ஸுச்சுன் அம்மையார் கூறியதாவது அமோக அறுவடை பெறவும் மனித குலத்தின் வாழ்க்கை செழுமையாகவும் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கவும் அடையாளமாக இந்த தானியங்கள் வைக்கப்படுகிறன என்றார் அவர்.
புத்தாண்டு நாட்களில் திபெத் இன மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவிப்பது மட்டுமல்ல, மலை குன்றுகளில் புத்த மத திருமறை அச்சடிக்கப்பட்ட கொடிகளை நடுவதும் வண்ண பட்டு துணி பதாகையைத் தொங்கவிடுவதும் அவர்களது பழக்கவழக்கங்களாகும். பாரம்பரிய வழக்கங்களை நிலைநிறுத்தும் அதேவேளையில் இவ்வாண்டு கொண்டாட்ட நடவடிக்கைகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 24ம் நாளிரவு திபெத் தொலைக்காட்சி நிலையம் திபெத் சந்திர நாட்காட்டின் புத்தாண்டை வரவேற்கும் கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. இது திபெத் இன குடும்பங்கள் அனைத்தும் விழாவை கொண்டாடும் போது இன்றியமையாத பண்பாட்டு நிகழ்ச்சியாகும்.
திபெத் இன இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் இன பாணியுடைய ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியோடு பாடி ஆடினர். அவர்கள் அரங்கேற்றிய அதே மேடையில் பெய்ஜிங் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த இதர இன நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல்வகை கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். பண்பாட்டு நிகழ்ச்சிகளின் அரங்கேற்றம் தவிர, விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் உணவுப் பொருட்களை வாங்குவதும் மக்கள் விழாவை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் முக்கிய பகுதியாகும். லாசா நகரவாசி சொலாஞ்செத்து இது பற்றி கூறியதாவது. விழா நாட்களில் உணவுப் பொருட்களை வாங்கும் விகிதம் சாதாரண நாட்களில் இருந்ததை விட அதிகம். சில பெட்டி பழங்களை வாங்குகின்றேன். அதனால் விருந்தினர் வரும் போது நன்றாக உபசரிக்கலாம் என்று அவர் கூறினார்.
வெளியூரில் இருக்கின்ற திபெத் இன மக்கள் புத்தாண்டை கொண்டாட பிறந்த ஊருக்கு திரும்பினர். 64 வயதான டாவான் அம்மையார் தனது மகன் மற்றும் மருமகளோடு லாசாவுக்குத் திரும்பினார். அவர் கூறியதாவது. நாங்கள் யுநான் மாநிலத்தின் குன் மின் நகரிலிருந்து லாசாவுக்கு திரும்பினோம். புத்தாண்டை கொண்டாடும் உணவு பொருட்கள் அனைத்தும் மகளால் தயாரிக்கப்பட்டன. குடும்பத்தினரான பத்துக்கு மேற்பட்டோர் ஒன்று கூடி விழாவை கொண்டாடுகின்றோம் என்று டாவன் அம்மையார் கூறினார்.
லாசாவில் திபெத் இன மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டு பயணிகளும் திபெத் புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள். அவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். லியோ மற்றும் அப்பி கூறியதாவது. நாங்கள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் வாழ்கின்றோம். திபெத் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் நாங்கள் திபெத் வரலாறு, பண்பாடு மற்றும் மதம் பற்றிய நூல்களை படித்தோம். ஆகவே புத்தாண்டு விழாவின் போது நாங்கள் லாசா வந்திருக்கின்றோம். இங்குள்ள அனைத்தும் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன என்று அவர்கள் கூறினர்.
|