• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-10 16:06:55    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை:நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது கருத்துக்களும், விமர்சனங்களும் இடம்பெறும், நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: நாள்தோறும் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்பதோடு, கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக தங்களது கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து, எமக்கு உற்சாகமூட்டி வரும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
கலை: நண்பர்களே, உங்களது இந்த ஆதரவும், பங்களிப்பும் தொடரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் பகுதியாக, கடிதங்கள் வழியாக நண்பர்கள் அனுப்பிய கருத்துக்கள்.
கடிதப்பகுதி
கலை: சென்னை எஸ். ரேணுகாதேவி எழுதிய கடிதம். அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சரிவிகித உணவு, புரதச்சத்து, எண்ணெய் அளவு ஆகியவை குறித்து விரிவான தகவல் இடம்பெற்றது.
2009ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ்ப்பிரிவின் பணியாளர்கள் வழங்கிய வாழ்த்துரைகள் நன்றாக இருந்தன. பணி தொடர வாழ்த்துக்கள்.
க்ளீட்டஸ்: அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின், 20வது கருத்தரங்கு குறித்து மீனாட்சிபாளையம் கா. அருண் எழுதிய கடிதம். முற்றிலும் நேயர்கள் மட்டுமே கலந்து கொள்ள, சீன வானொலியோடு தொடர்புடையவர்கள் மேடையில் வீற்றிருக்க அரங்கேறியது பேளுகுறிச்சியில் நடைபெற்ற நேயர் மன்ற கருத்தரங்கு. வெளியாட்கள் யாரும் இல்லாது சீன வானொலியோடு தொடர்புடையவர்கள் மட்டுமே கலந்துகொண்டது தனிச்சிறப்பு. சுவையான உணவுடன் மனநிறைவு தருவதாக நடந்தது கருத்தரங்கு.
கலை: குமரி மாவட்டம் இலவுவிளை ஜெயராஜ் எழுதிய கடிதம். டிசம்பர் 2ம் நாள் ஒலிபரப்பான நட்புப்பாலம் நிகழ்ச்சியை கேட்டேன். நன்றாக இருந்தது. சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் அன்னாசிப்பழம் கொண்டு செய்யப்படும் உணவுவகை பற்றிய குறிப்பு இடம்பெற்றது. நிகழ்ச்சியை கேட்கும்போதே சுவையான ஒரு உணவு வகை என்று உணர்ந்துகொள்ள முடிந்தது. தொகுத்து வழங்கிய வாணி அவர்களுக்கு நன்றி.
க்ளீட்டஸ்: சீனப் பண்பாடு நிகழ்ச்சி குறித்து புதுகை ஜி. வரதராஜன் எழுதிய கடிதம். நளபாகம் என்ற தலைப்பில் சீன சமையற்கலைஞர்களின் திறமைகள் பற்றிய தகவல்களை கேட்டேன். அந்த காலத்திலேயே பெண் சமையற்கலைஞர்கள் அதிகக் கட்டணம் பெற்றார்கள் என்பதும், சீன மருத்துவம் சமையலறையிலிருந்தே உருவானது என்பதும் புதிய தகவல்கள். கன்பியூசியஸ் காலத்திலேயே உணவை மருந்தாக சீனர்கள் கருதினார்கள் என்பது, சமையலின் சிறப்பை உணர வைத்தது.
கலை: டிசம்பர் திங்கள் 26ம் நாள் இடம்பெற்ற அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து, சென்னை மணலி, எஃப். எம். பி. மாறன் எழுதிய கடிதம். சீனாவில் அட்டையை பயன்படுத்தி வங்கியில் பணம் பெறுதல், பேருந்துகளிலும், தொடர்வண்டியிலும் பயணச்சீட்டுக்கு இந்த அட்டையை பயன்படுத்தி நுழைதல் என பல தகவல்களை அறிந்துகொண்டோம். மேலும் எம்.பி.3 அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, அதன் செயல்பாடுகள் குறித்த அறிவியல் உலகம் நிகழ்ச்சியின் விளக்கங்கள் அருமையாக இருந்தது.


க்ளீட்டஸ்: மலர்ச்சோலை நிகழ்ச்சி குறித்து இலங்கை கினிகத்தேனை எஸ். வி. துரைராஜா எழுதிய கடிதம். ரியாத்தில் ஆட்டுக்குட்டியொன்று அழகுப் போட்டியில் கலந்து வெற்றிப் பெற்றது குறித்த தகவல் கேட்டேன். விலங்குகளிலும் அழகை வெளிப்படுத்தும் போட்டிகள் இருப்பதை அறியும்போது வியப்பாக இருந்தது. மேலும் யத்வான் சிங் என்பவர் நீளமான தாடி வளர்த்து சாதனை நிகழ்த்திருப்பது மேலும் வியப்படைய வைத்தது.
கலை: சேலம் ஏ. வேலு எழுதிய கடிதம்.டிசம்பர் 22ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில், செய்திகள் மற்றும் செய்தித்தொகுப்புகளை கேட்டேன். அதில் ஈரான் வான் தாக்குதல் ஏவுகனையை வாங்குவது குறித்த செய்தித்தொகுப்பு புதிய தகவல்களை தந்தது. அன்றைய நட்புப்பாலம் நிகழ்ச்சியில் சீனாவுக்கு பயணம் சென்று திரும்பிய தலைசிறந்த நேயர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. நண்பர்களின் உரையாடல் சிறப்பு.
க்ளீட்டஸ்: ஈரோடு எம். சி. பூபதி எழுதிய கடிதம். சீன வானொலியில் மும்பை தீவிரவாதத் தாக்குதல் பற்றிய செய்தித்தொகுப்பை கேட்டேன். சீனா என்றுமே பயங்கரவாதத்திற்கு எதிரானது என்பதை அறிவோம். இந்தியாவும், சீனாவும் உலகில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முன்வருவதை பாராட்டுகிறோம்.
மேலும் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில், பழைய திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்.
கலை: குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பேளுக்குறிச்சி கே. செந்தில் அவர்களுடனான பேட்டியை கேட்டேன். சீன வானொலியுடனான தனது அனுபவம், ஹாம் ரேடியோ எனும் அமெச்சூர் வானொலி பற்றிய தகவல் என்று நிகழ்ச்சி பல தகவல்களை கொண்டிருந்தது.


மின்னஞ்சல் பகுதி
விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்
பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாளன்று ஷாங்காயில் போதைப் பொருள் எதிர்ப்பு மாநாட்டின் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகளைக் கேட்டேன். சீனா போதைப் பொருளுக்கு எதிராக •அபினிப் போர்• என்ற வரலாற்று சாதனையை படைத்த நாடு. வேறு எந்த ஒரு நாடும் போதைப் பொருளை எதிர்த்து போர் நிகழ்த்தியதாக வரலாறு கிடையாது. அந்த வகையில் போதைப் பொருள் எதிர்ப்பில் நூற்றாண்டு விழாவை சீனா கொண்டாடுவது சாலச் சிறந்ததாகும். சீனா பெருமையுடன் இந்த விழாவை கொண்டாடலாம்.
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்திற்கு அருகே உள்ள சத்திய விஜய நகரம் என்ற இடத்தில் அமைந்துள்ள அரசு அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில், கடந்த 16 ஆம் நாள் முதல் 21 ஆம் நாள் வரை நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டேன். ஊரக வளர்ச்சித் துறையின் முக்கிய 35 பணியாளர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். விடுதியில் நாள்தோறும், இரவு 7.30 மணி முதல், சீன வானொலி நிகழ்ச்சிகளை என்னுடன் எடுத்துச் சென்ற வானொலிப் பெட்டியில் கேட்பதை பிற நண்பர்கள், வியப்புடன் கவனித்தனர். சீன வானொலி பற்றிய அவர்களின் விசாரிப்புக்களுக்கு விரிவாக பதிலளித்தேன். சீனர்கள் பேசும் தமிழ் அனைவருக்கும் பிடித்திருந்தது. அன்றி, என்னுடைய தொலைபேசியின் அழைப்பு ஒலியாக, சீன வானொலியின் துவக்க இசையை பதிவு செய்து வைத்துள்ளதால். எனக்கு தொலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் ஒலிக்கும் சீன வானொலியின் துவக்க இசையைக் கேட்ட நண்பர்கள் சிலர், அந்த இசையை தங்களுடைய செல்லிடைப் பேசிகளுக்கு அனுப்புமாறு கோரினார். ரிஷிவந்தியம் அலுவலகத்தின் மேலாளராக பணிபுரியும் சாம்ராஜ் என்பவர் உடனடியாக பதிவு செய்ய, அவரின் செல்லிட பேசிக்கு அழைப்பு வந்தபோது ஒலித்த சீன வானொலியின் துவக்க இசையை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இவர்களில், எத்தனை பேர் கடிதம் எழுதுவார்கள் என்பது தெரியாதபோதிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களிடையே சீன வானொலி தமிழ்ப்பிரிவை அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் மகிழ்ச்சி அடைந்தேன்.
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை பிரச்சாரம் செய்ய முயற்சி மேற்கொண்ட திரு செல்வம் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.


ஈரோடு, ஆர். சுகுமார்
நீண்ட நாட்களுக்கு பிறகு சீன வானொலியைக் கேட்டேன். பிப்ரவரி 14 அம் நாள் ஒலிபரப்பான கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் தாங்கா ஒவியம் பற்றிக் கேட்டு மகிழ்ந்தேன். மேலும் சீன வானொலி இனையதளத்தில் இடம் பெற்றிருந்த ஆறு தாங்கா ஓவியங்களையும் பார்த்து ரசித்தேன். சீன வானொலியில் கேட்டு பயன் பெற்றதை, இனையதளத்தில் பார்த்து பயன் பெற முடியும் என்பதற்கு இது நல்ல சான்று. இனி தொடர்ந்து நிகழ்சிகளைக் கேட்டு கடிதங்களை அனுப்புவேன்.
வளவனூர், முத்துசிவக்குமரன்
பிப்ரவரி திங்கள் 19ஆம் நாளன்று ஒலிபரப்பான அறிவியல் உலகம் பகுதியில் தலைக்கு மேல் கத்தி என்ற தலைப்பில் ஒலித்த உரை, விண்வெளியில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை பற்றி விரிவாக கூறியதை கேட்க, வியப்பாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தது. இந்த விண்வெளிக் கழிவுகள் செயற்கைக் கோள்களுடன் மோதி, பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது கவலை தரக்கூடிய செய்தியாகும். இந்த விண்வெளி கழிவுகளை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை, விஞ்ஞானிகள் உடனே மேற்கொள்ள வேண்டும்.


......ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்......
பிப்ரவரி திங்கள் 14 ஆம் நாளன்று ஒலிபரப்பான கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் தாங்ஹா ஓவியம் பற்றி கேட்டேன்.
சீனாவின் திபெத் இன பண்பாட்டுத் துறையில் தனிச் சிறப்பியல்பு மிக்க ஒவிய கலை வடிவத்தையும், மிகப் பல கருப்பொருட்களையும் இந்த தாங்கா ஓவியம் உள்ளடக்கியுள்ளதையும், இவ்வோவியத்தில் பயன்படுத்தப்படும் நிறங்கள் இயற்கையான கனிமத் தாவரங்களின் மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படுவதையும் அறிந்தேன்.
மேலும் தாங்ஹா ஒவியம் எந்த‌ அளவில் உள்ளது, அதன் உயர்வான மதிப்பு போன்றவைகளைப் பற்றி தெளிவாக அறியத்தந்த சீன வானொலிக்கு எனது நன்றிகள்.
。。முனுகப்பட்டு பி.க‌ண்ண‌ன்சேக‌ர் 。。
பிப்ரவரி 17ம் நாள் இடம்பெற்ற செய்திகளில் சீனாவும் ரசியாவும் எரியாற்றல் துறையில் நட்பார்ந்த முறையில் ஒத்துழைத்து வளர்ச்சியை தொடரவுள்ளது பற்றி அறிந்தேன். எரியாற்றல் தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டதன் மூலம் நட்புறவை மேலும் ஆழமாக்கும் என நம்புகிறேன். சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் இது தொடர்புடைய ஏழு ஒப்பந்தங்கள் நிறைவேற்றியிருப்பது எரியாற்றல் துறைக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும். சீன ரசிய நட்பு மேலும் பெருகவும், ஆழமான வளர்ச்சியைக் காணவும் இவ்வொப்பந்த நடவடிக்கை உதவும் என கருதுகிறேன்.
பாண்டிச்சேரி, என். வசந்தி
பிப்ரவரி திங்கள் 23ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சியில் செய்தித் தொகுப்பு மூலம், •இந்தியாவும் ஆஸ்கர் விருதும்• என்ற கட்டுரையைக் கேட்டு உண்மையில் வியப்படைந்தேன். ஒரு தமிழர் முதன்முதலாக ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார். தமிழ் மக்களுக்கு ஏ. ஆர். ரகுமான் பெற்றுத் தந்த அரிய மதிப்பை உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அவரைப்பற்றி ஒரு சிறந்த கட்டுரையை வழங்கி, எங்கள் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்திவிட்டீர்கள். காலதாமதமின்றி சிறந்த கட்டுரை ஒன்றை வழங்கிய சீன வானொலிக்கு என் நன்றி.
செந்தலை, N.S. பாலமுரளி
ஜனவரி திங்கள் 23ம் நாளன்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கான வாழ்த்துச் செய்தி பற்றிய செய்தியை கேட்டேன். சீன அரசுத் தலைவர் ஹூச்சின்தாவ் அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உலகின் பெரிய வளரும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் உள்ளன ஒத்துழைப்பு வளர்ச்சி, இருநாடுகள், இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு ஏற்றதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி அண்ணா நகர், V. T. இரவிச்சந்திரன்
பிப்ரவரி திங்கள் 8ம் நாள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வென்ச்சியாபாவிற்கு ஏற்பட்ட இடையூறு மற்றும் தனது தவறான நடத்தையை உணர்ந்த மாணவரின் மன்னிப்பு போன்ற தகவல்களை நமது செய்திகளில் வாணி வழங்கினார். இதற்கு அந்த மாணவருக்கு சிலரால் போதிக்கப்பட்ட தவறான வழிகாட்டுதல் காரணமாக இருக்கும். சிலர் பலரை இதுபோன்றுதான் ஏமாற்றிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கின்றனர். இதுபோன்ற தவறான வழிகாட்டிகளால் ஒன்றும் அறியாதவர்கள் பலிகடா ஆகின்றனர். அனைவரும் உண்மையை உணர்ந்து திருத்திக் கொள்ளும்போது, தவறான வழிகாட்டிகள் தனது கும்பல்களாலேயே தனிமைப்படுத்தப்படுவர். இது உலக நியதி.
பாண்டிச்சேரி, N. பாலகுமார்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பல நேயர்கள் கேட்ட ஒரே மாதிரியான கேள்விகளை தொகுத்து பதில் அளித்தீர்கள். சீன சமூக காப்புரிமை பற்றி அறிந்துகொள்வதில் நேயர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை கேள்வியின் வாயிலாக அறிய முடிந்தது. கேள்விகளின் பதில்கள் பல நிகழ்ச்சிகளின் மூலமாக தனித்தனியாக அறிந்து இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மூலமாக, ஒரு முழுமையான தகவல் திரட்டை பெற உதவியாக இருந்தது. முதுமைக்கால காப்புரிமை, மருத்துவ காப்புரிமை போன்றவை குறித்து நானும் அறிந்து கொண்டேன். மிகவும் விரிவான பதில்.
......விஜயமங்கலம் குணசீலன்......
பிப்ரவரி திங்கள் 4ம் நாள் சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சியில் திபெத் பற்றிய கட்டுரை கேட்டேன் ...1959ம் ஆண்டு வரை திபெத் சாதாரண நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்றைக்கு நல்ல வளர்ச்சி கண்டுள்ளது என்று அறிந்து கொண்டோம் ...விவசாயிகளும் தொழிலாளர்களும் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தின் மூலமாக இன்று நல்ல நிலையில் வாழ்கின்றனர். நில நடுக்கத்தாலும் பல்வேறு இயற்கை அழிவுகளாலும் பாதிப்புகளை சமாளித்து இன்று பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.