சீன மீயுயர் அதிகார நிறுவனமான சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டம் 13ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. தலைமை அமைச்சர் வென் சியாபாவ் வழங்கிய அரசு பணியறிக்கையும், சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு வகுக்கும் ஒரு தொகுதி திட்டங்களும் நிறைவு விழாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கூட்டத்துக்குப் பின், சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்.
2 மணி நேரம் நீடித்த இந்தச் செய்தியாளர் கூட்டத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கேட்ட 23 கேள்விகளுக்கு தலைமை அமைச்சர் வென் சியாபாவ் பதிலளித்தார். இந்த 23 கேள்விகளில் சுமார் 70 விழுக்காடு நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் சீன அரசின் உள்நாட்டுக் கொள்கை மற்றும் தூதாண்மை நடவடிக்கைகள் பற்றியதாகும். சீன அரசு வகுத்த 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் பற்றி, வென் சியாபாவ் கூறியதாவது
பெரும் அளவிலான அரசு ஒதுக்கீடு, பெரும் அளவிலான தொழில் சரிப்படுத்தல் மற்றும் வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்பத் துறைக்கான மாபெரும் ஆதரவு, சமூக உத்தரவாத தரத்தின் பெரும் உயர்வு ஆகியவை எமது திட்டங்களில் சேர்க்கப்பட்டன என்று அவர் கூறினார். சர்வதேச நிதி நெருக்கடியின் பின்னணியில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 8 விழுக்காடு என்ற அதிகரிப்பு இலக்கை சீனா வகுத்துள்ளது. இது பரந்த அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த இலக்கை நனவாக்குவதில் இன்னல்களைச் சந்திப்பது உறுதி என்று வென் சியாபாவ் ஏற்றுக்கொண்டார். இருந்த போதிலும் சீரிய முயற்சி மூலம் இது நனவாக்கப்பட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சந்தை மயமாக்கம் மற்றும் நகர மயமாக்கம் விரைவில் வளர்ந்து கொண்டிருக்கும் கட்டத்தில் சீனா உள்ளது. நுகர்வு துறையும் தொழில் கட்டமைப்பும் வளர்ந்து வருகின்றன. போதிய அளவிலான உழைப்பாற்றல் மற்றும் திறமைசாலி மேம்பாடு சீனாவுக்கு உண்டு. சீர்திருத்தம் மூலம் சீனாவின் நிதி சந்தை சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது. அவை எல்லாம், சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான ஆதரவை வழங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.
லண்டனில் நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுமத்தின் நிதி உச்சி மாநாடு பற்றி அவர் கூறியதாவது
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில், வளரும் நாடுகள் மிக கடுமையாக இன்னலுக்குள்ளாயின. எளிதாக அப்புறப்படுத்தப்பட முடியாத இன்னல்கள் அவை. ஆகையால், வளரும் நாடுகளுக்கு குறிப்பாக வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவி செய்வதில் இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தி விவாதிக்க வேண்டும் என்று வென் சியாபாவ் கூறினார்.
நிதி நெருக்கடியை தவிர, சீன நடுவண் அரசு தலாய் லாமாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமா என்பது, செய்தியாளர்கள் மிகுந்த கவனம் செலுத்திய பிரச்சினைகளில் ஒன்றாகும். தலாய் லாமா தொடர்பான அணுகு முறையில், அவர் என்ன கூறுகிறார், என்ன செய்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வென் ச்சியாபாவ் கூறினார். இது பற்றி, அவர் மேலும் கூறியதாவது
தலாய் லாமா, சாதாரண ஒரு மதத்துறை பிரமுகரல்ல. அவர், அரசியல் நாடோடியாவார். உண்மையில், அவர் உருவாக்கி, நேரடியாக கட்டுப்படுத்த விரும்பும் தொலை அயல் நாட்டு அரசாங்கம், அரசியலும் மதமும் இணைந்த சட்டவிரோதமான அரசாகும். தலாய் லாமா உலகின் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த போது, அவர் அரசியல் துறையினர்களை தன்பால் திசைதிருப்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளையில், மேலை நாடுகளால் அவர் பயன்படுத்தப்பட்டார் என்று வென் ச்சியாபாவ் குறிப்பிட்டார்.
திபெத், சீனாவின் பிரிக்கப்பட முடியாத உரிமை பிரதேசமாகும். அத்துடன், திபெத் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். அதனால், இப்பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடாமல் இருக்க வேண்டும் என வென் ச்சியாபாவ் மீண்டும் உறுதிப்படுத்தினார். தலாய் லாமா தொடர்புடைய பிரிவு நடவடிக்கையை கைவிட்டால் தான், அவரது பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த நடுவண் அரசு விரும்பும் என்று அவர் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் கூட்டத்தில், சீன மாற்றுவிகிதக் கொள்கை, தைவான் நீரிணையின் இரு கரைகளிடை பொருளாதார வர்த்தக உறவு, ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களுக்கான நடுவண் அரசின் ஆதரவு, ஷாங்காய் ஒத்துழைப்பு மன்றத்துடனான ஒத்துழைப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கும், வென் ச்சியாபாவ் பதிலளித்தார்.
|