முட்டை அடுக்கை போல் நிலையற்றது
cri
வசந்தம் மற்றும் இலையுதிர்கால பருவ காலக்கட்டத்தில் ச்சின் நாட்டை ஆண்டுகொண்டிருந்த அரசன், 9 அடுக்குமேடை கொண்ட ஒரு உல்லாச மாளிகையை கட்டியெழுப்ப ஆணையிட்டான். அரசனின் ஆணைக்கேற்ப கட்டுமானப்பணிகள் தொடங்கி மூன்றாண்டுகள் கழிந்தன ஆனால் கட்டிடம் முடிவடைவாதாயில்லை. மேலும் நாட்டின் வளங்களும், மனித உழைப்பும் விரயமாகிக்கொண்டிருந்தன. ஆனால் அரசன் தன் எண்ணத்தை மாற்றாமல் விடாப்பிடியாய் கட்டுமானப்பணியை தொடர்ந்துகொண்டிருந்தான். மேலும், தனது திட்டத்தை பற்றி குறைகூறுபவர்களோ, தவறென சுட்டிக்காட்ட விழைபவர்களோ இருப்பின் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தான். அரசனை எதிர்த்து பேச ஆளில்லாத நிலையில், அரண்மனையில் இருந்த பணியாளன் ஒருவனான் ஷுன் ஷி, அரசரை சந்திக்க அனுமதி கோரினான். அரசனும் கோபத்தோடு அனுமதியளித்து, கையில் வில்லும் அம்பும் ஏந்தியவனாய் வீற்றிருந்தான். அரசனை வணங்கிய ஷுன் ஷி, "அரசே, உங்களது திட்டத்தை பற்றி குறைகூறவோ, உங்களை மனமாற்றம் செய்யவோ எனக்கு துணிவில்லை. ஆனால் என்னால் 12 சதுரங்கக்காய்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்காக வைக்கவும் அவற்றின் மீது மேலும் 9 முட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும் முடியும் என்பதை தங்களுக்கு காட்ட விரும்புகிறேன்" என்றான். அரசனும், சரி செய்து காட்டு என்று கூற ஷுன் ஷி தன்னை அமைதிபடுத்திக்கொண்டு, மனதை ஒருநிலைப்படுத்தி செயலில் இறங்கினான். சொன்னபடியே 12 சதுரங்கக்காய்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கினான். பின்னர், 9 முட்டைகளை எடுத்து, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சதுரங்கக்காய்களின் மீது அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கினான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அரசனும் பதட்டத்துடன் மூச்சுவிடவும் மறந்தவன் போல், ஷுன் சி செய்யும் வித்தையை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அரசன் "அவை மிகவும் நிலையற்றதாக இருக்கின்றன, கவனம்" என்று குரலெழுப்பினான். உடனே ஷுன் ஷி, இல்லை அரசே இது ஒன்றும் நிலையற்றதாக இல்லை. இதை விட நிலையற்ற ஒன்று இருக்கிறது. தங்களது ஆணையின் பேரி கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் 9 அடுக்குமேடை கொண்ட ஒரு உல்லாச மாளிகை இன்னமும் முடிவடையவில்லை. நாட்டு மக்களில் ஆடவர் விவசாயத்தை கைவிட, பெண்கள் நூற்பதை கைவிட்டுவிட்டனர். நாட்டின் வளங்களும், மனித உழைப்பும் ஏறக்குறைய தீர்ந்து போகும் நிலை. இதன் விளைவாக அண்டை நாடுகள், நமது இந்த வலிமையிழந்த நிலையை சாதகமாக்கி நம் மீது போர் தொடுத்து கைப்பற்ற திட்டமிடுகின்றனர். நம் நாடு அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதைவிட நிலையற்றதான அசைந்தாடிக்கொண்டிருப்பதாக என்ன இருக்கமுடியும்?" என்று கேட்டான். ஷுன் ஷியின் கருத்தை உணர்ந்த அரசன் தனது தவறான எண்ணத்தையும், நடத்தையையும் உணர்ந்து தன்னையே கடிந்துகொண்டதோடு உல்லாச மாளிகையின் கட்டுமானப்பணியை உடனே நிறுத்துமாறு ஆணையிட்டான். பின்னாளில், முட்டை அடுக்கை போல் நிலையற்றது Wei ru lei luan, shi ru lei luan என்ற சொற்றொடர், ஆபத்தான நிலையை உணர்த்த கையாளப்பட்டது.
|
|