Li Cui E அம்மையாரும் அவரது ஓய்வு நேர இசை நாடகக் குழுவும்
cri
Li Cui E அம்மையாருக்கு வயது 69. சிறு வயதிலிருந்தே பாரம்பரிய இசை நாடகத்தை நேசிக்கும் அவர், சொந்த செலவில், ஓய்வு நேர இசை நாடகக் குழு ஒன்றை உருவாக்கி, இசை நாடக ரசிகர்களுக்கு இசை நாடகங்களைக் கண்டு ரசித்து, அரங்கேற்றும் மேடையை வழங்கியுள்ளார். இந்த இசை நாடகக்குழுவுக்கு வழமையான அரங்கும், பயிற்சி இடமும் இல்லை. சுமார் 60 சதுர மீட்டர் பரப்பளவுடைய அறையில், அரங்கு, இசைக்குழுவினரின் பகுதி, நடிகர்கள் ஒப்பனை செய்யும் பகுதி, ரசிகர்கள் பகுதி முதலியவை இடம்பெறுகின்றன.
Li Cui E அம்மையார் இக்குழுவின் தலைவராக திகழ்கின்றார். சாதாரண நாட்களில், Yu இசை நாடகமும், Xu Zhou Bang Zi இசை நாடகமும் அரங்கேற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். Yu இசை நாடகம், சீனாவில் மிகப் புகழ் பெற்ற இசை நாடகங்களில் ஒன்றாகும். சீனாவின் பல மாநிலங்களில், Yu இசை நாடக ரசிகர்கள் அதிகம். Xu Zhou Bang Zi இசை நாடகம், உள்ளூர் தனிச்சிறப்புமிக்கது. Li Cui E அம்மையார் தாமாக அரங்கேற்றுவது குறைவு. இசை நாடகக் குழுவின் நடிகர்கள் அரங்கேற்றும் ஒழுங்கினை அவர் ஏற்பாடு செய்கின்றார். சில சமயங்களில், அவர் இசை நாடக ரசிகர்களுடன் உரையாடுகின்றார். சிறு வயதிலிருந்தே இசை நாடகத்தை கேட்க அவர் விரும்பியவராவார். அவருக்கு 14 வயதான போது, Xu Zhou நகரின் Pei மாவட்டத்தின் Bang Zi இசை நாடகக் குழுவில் ஒரு நடிகையாக அவர் மாறினார். தனது 22வது வயதில் Li Cui E, தமது கணவரைச் சந்தித்தார். அவரது கணவர் Wang Hong De, Tong Shan மாவட்டத்தின் Qing Shan Quan வட்டத்தின் Bang Zi இசை நாடகக் குழுவின் உறுப்பினர் ஆவார். பின்னர் அதிக வீட்டு வேலைகளை செய்து, பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதால், Li Cui E அம்மையார், இசை நாடகக்குழுவிலிருந்து விலக வேண்டியிருந்தது. 2000ஆம் ஆண்டு மே திங்கள், Li Cui E அம்மையாரின் கணவர் நோயால் பீடிக்கப்பட்டார். உயிருக்கு ஆபுத்து இல்லையென்ற போதிலும், கணவரால் தங்கு தடையின்றி நடந்து செல்லவும், தம்மைத்தாமே பராமரிக்கவும் முடியவில்லை. கணவர் விரைவாக குணமடைய உதவி செய்யும் பொருட்டு, நாள்தோறும் Li Cui E அம்மையார், அவரது கணவர் Yun Long மலையில் ஏற துணையாக நின்று அவரை அழைத்துச் சென்றார். பிறகு, ஒரு நண்பரின் முன்மொழிவுக்கிணங்க, Ban Hu எனும் இசைக் கருவியை இசைக்குமாறு கணவருக்கு Li Cui E அம்மையார் அறிவுரை கூறினார். மலையில் கணவர் Ban Huஐ இசைத்ததுடன், Li Cui E அம்மையார் இசை நாடகப் பாடலை பாடினார். இது, இசை நாடக ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஓய்வு நேர இசை நாடகக் குழுவை உருவாக்கலாம் என்று Li Cui E அம்மையார் எண்ணினார். ஒருபுறம், கணவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். மறுபுறம், இளம் காலத்திலிருந்தே தமக்குள் இருந்த தமது ஆசையை நனவாக்கலாம் என்று அவர் கருதினார்.
2001ஆம் ஆண்டு மார்ச் திங்கள், Li Cui E அம்மையாரின் ஏற்பாட்டில், Wan Xia என்னும் ஓய்வு நேர இசை நாடகக் குழு நிறுவப்பட்டது. உற்சாகமான இசை நாடக ரசிகர்களின் உதவியுடன், இந்த குழுவுக்கு அரங்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் இடம் கிடைத்தது. Li Cui E அம்மையார், சுமார் 30 ஆயிரம் யுவான் பணத்தைச் செலவழித்து, அரங்கேற்ற ஆடைகள், மேடை பயன்பாட்டுப் பொருட்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றை வாங்கினார். நாள்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரை, இசை நாடகக் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் இசை நாடகத்தைப் பாடி, இசை நாடகத்தினால் ஏற்படும் மகிழ்ச்சியை கூட்டாக அனுபவிக்கின்றனர். இக்குழுவின் துணைத் தலைவர் Lv Ai Ying கூறியதாவது: "நான் Bang Zi இசை நாடகத்தை நேசிக்கின்றேன். இதைப் பாடும் போது, மிகவும் மகிழ்ச்சியடைந்து கவலைகளை மறந்து விடுகின்றேன்" என்றார், அவர். Liang Xing Fu என்னும் இசை நாடக ரசிகர் இந்த இடத்தை கடந்த போது, எதேச்சையாக கேட்ட இசை நாடகத்தின் ஒலியால் ஈர்க்கப்பட்டார். அதற்கு பிறகு, நாள்தோறும் அவர் இங்கு வந்து இசை நாடகத்தைக் கேட்டு ரசிக்கின்றார்.
நாள்தோறும் காலை இசை நாடக ரசிகர்கள் ஒன்று கூடுகின்றனர். தவிர, இந்த இசை நாடகக் குழு திங்களுக்கு ஒரு முறை அரங்கேற்றுகிறது. இசை நாடக ரசிகர்கள், இசை நாடக ஆடையை அணிந்து, இசை நாடகத்தை பாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். தற்போது, நாள்தோறும் சுமார் நூறு ரசிகர்கள் இங்கே ஒன்று திரள்கின்றனர். அரங்கேற்றத்தின் போது, 300க்கு அதிகமான பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களில் 90 வயதான முதியோரும் அடங்குவர். Wan Xia இசை நாடகக் குழுவின் நடவடிக்கைகள், பல இசை நாடக ரசிகர்கள் மற்றும் தொழில் முறை நடிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. Xu Zhou நகரின் தொழில் முறை இசை நாடகக் குழுக்களின் நடிகர்கள் அடிக்கடி இங்கு வந்து, Wan Xia இசை நாடகக் குழு உறுப்பினர்களுக்கு வழிகாட்டி, அவர்களுடன் இசை நாடகம் தரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
தொழில் முறை நடிகர்கள் இக்குழுவில் சேர்தல், இசை நாடக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியவற்றுடன், தற்போது, Li Cui E அம்மையாரும் அவரது இசை நாடகக் குழுவும் Xu Zhou நகரில் புகழ் பெற்றிருக்கின்றார். இசை நாடகக்குழு, இளம் காலத்தின் தமது மகிழ்ச்சியை தமக்கு மீண்டும் தந்துள்ளதாகவும், மேலதிக இசை நாடக ரசிகர்களுக்கு, மன அமைதியை அளித்துள்ளதாகவும் Li Cui E அம்மையார் கூறினார். இனி, மேலதிக மக்கள் சீனாவின் பாரம்பரிய இசை நாடகத்தை நேசித்து, சீனப் பாரம்பரிய பண்பாட்டைக் கையேற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
|
|