• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-04 16:45:24    
குட்டி தீவும் குடியேற்றமும்

cri
உலக நாடுகளிலுள்ள மக்கள் ஊர்கள், கிராமங்கள், வட்டம், மாவட்டம், மாநிலம், நகரங்கள் என நாடுகளுக்குள்ளே இடம்மாறியும், குடிபெயர்ந்தும் வாழ்கின்றனர். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணிகள் இதை ஏற்படுத்துவதாக கூறலாம். போர்கள் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் மக்கள் இடம்பெயரும் சூழ்நிலைகளை உருவாக்கும். ஆனால் பிற இடங்கள் அல்லது நாடுகளுக்கு பெருமளவிலான மக்கள் இடம்பெயர்கின்றபோது, அது மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவுக்கு கொலம்பஸ் சென்றடைந்த பின்னர் தான் ஜரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் அங்கு குடியேற தொடங்கினர். இன்றைய அமெரிக்காவை உருவாக்கியதற்கு ஐரோப்பியரின் குடியேற்றத்தையும் காரணமாக கூறலாம்.

உலக நாடுகள் பலவற்றில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதையும் இங்கே சுட்டிக்காட்டலாம். இவ்வாறு ஏற்படும் இடப்பெயர்வுகளும் குடியேற்றங்களும் வரலாற்றில் முக்கிய பதிவுகளை விட்டு செல்கின்றன. பசிபிக் கடல் தீவுகளில் பல்லாயிரகணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பசிபிக் தீவுகள் என்றால் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஏறக்குறைய 20,000 முதல் 30,000 தீவுகளைக் குறிக்கின்றன. ஆஸ்திரேலியாவை தவிர, இதர தீவுகள் மெலனேசீயா, மைக்குரொனேசியா, பாலினேசியா என பொதுவாக மூன்று பிரிவுகளாக இவை குறிப்பிடப்படுகின்றன. இக்குவடோரின் கலாபகசுத் தீவுகள், அலாஸ்காவின் அலூசியன் தீவுகள், ரஷ்யாவின் சக்காலின், குரில் தீவுகள், தைவான், பிலிப்பீன்ஸ், தென் சீனக் கடல் தீவுகள், இந்தோனேசியாவின் பெரும்பாலான தீவுகள், மற்றும் ஜப்பான் ஆகியவை இந்த பசிபிக் தீவுகளில் அடங்காதவை. இங்கு வாழ்கின்ற மக்கள் எங்கிருந்து வந்தனர்? எந்த பகுதியிலிருந்து குடியேறி பரவ தொடங்கினர்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் விதமாக நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் அனைவரும் சீன மக்களின் உடன்பிறப்புக்களே என தெரியவந்துள்ளது.

பசிபிக் தீவுகளில் வாழ்கின்ற மக்கள் ஏறக்குறைய 5,200 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் தைவானிலிருந்து குடியேறி பரவி வாழ தொடங்கியவர்கள் என்ற உண்மை பசிபிக் தீவுகளிலுள்ள ஆஸ்டிரேனேஷிய மொழிகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்லாண்ட் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மிகவும் உயர் தரமுடைய கணினி ஆராய்ச்சி மூலம் இப்புதிய ஆய்வை மேற்கொண்டனர். பசிபிக் தீவுகளிலுள்ள மக்கள் எங்கிருந்து குடியேறினர் என்பதை அறிய 400 ஆஸ்டிரேனேசிய மொழிகளை ஆய்வு செய்தனர். ஆஸ்டிரேனேசிய மொழிக் குடும்பம் உலகிலேயே மிக பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று. ஆஸ்டிரேனேசிய மொழிகள் பேசப்படும் பகுதிகள் அனைத்தும் ஆஸ்டிரேனேசியா என்று அழைக்கப்படுகிறது. பசிபிக் தீவுகளில் 1,200 மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. ஜாவானிஸ், மலாய், சுன்டானிஸ், தகாலோக், செபுவானோ, மலகாசி, இலோக்கோனோ, கிலிகைனோன், மினாங்காபௌ, படாக், பீகோல், பன்ஜார், பாலினிசி ஆகியவை ஆஸ்டிரேனேசிய மொழிகளுக்கு சில எடுத்துகாட்டுக்கள். பசிபிக் தீவுகளில் ஏற்பட்ட மக்களின் குடியேற்றம் உலக மக்கள்தொகை விரிவாக்கத்தில் மிக பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று உளவியல் துறை பேராசிரியர் Russell Gray தெரிவித்துள்ளார்.

ஆஸ்டிரேனேசிய மொழிகளிலுள்ள விலங்குகளின் பெயர்கள், எளிதான வினைச் சொற்கள், நிறங்கள் மற்றும் எண்கள் ஆகியவற்றின் அடிப்படை சொற்களை ஆய்வு செய்தால், இந்த மொழிகள் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு மாற்றம் பெற்று வளர்ந்து ஒன்றையொன்று கலந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளன என்று கண்டறியலாம். இந்த மொழிகளுக்கு இடையிலான உறவுகள் பசிபிக் குடியேற்றத்தின் விபரமான வரலாற்றை தருகின்றன என்று Russell Gray தெரிவித்தார். இத்தகைய ஆய்வு முறையை தான் மொழிகளின் பரிணாம வளர்ச்சி என்று பொதுவாக கூறுகிறார்கள். மிகவும் உயர்தரமான கணினி முறைகளை பயன்படுத்தி இந்த முடிவுகள் பெறப்படுகின்றன. மொழிகளின் தரவுகளால் ஏற்படுத்தப்படும் மிக பெரிய தரவுதளத்தின் மூலம் பல்வேறு காலகட்ட பரிணாம உயிரியல் வளர்ச்சி ஆய்வு செய்யப்படுகிறது. உயிரியல் முறைகளையும் மொழியியல் தரவுகளையும் இணைத்து பார்கின்றபோது மக்களின் குடியேற்றம் பற்றிய ஐயங்களை ஆழமாக ஆய்ந்தறிய முடிகிறது.

ஆய்வு முடிவுகள்படி, ஆஸ்டிரேனேசியா மக்கள் ஏறக்குறைய 5,200 ஆண்டுகளுக்கு முன்னால் தைவானிலிருந்து குடியேற தொடங்கியுள்ளனர். பிலிப்பீன்ஸில் நுழைவதற்கு முன்னால் சுமார் 1000 ஆண்டுகள் பெரிய குடியேற்ற நிகழ்வுகள் இல்லை. அதன் பிறகு பிலிப்பீன்ஸிலிருந்து பாலினேஷியா வரை 1,000 ஆண்டுகளில் குடியேறி பரவினர். பாலினேசியா என்பது பல தீவுகள் எனப் பொருள்படும். இவை நியூசிலாந்து, ஹவாய் தீவுகள், ரொட்டுமா, மிட்வே தீவுகள், சமோவா, அமெரிக்க சமோவா, தோங்கா, துவாலு, குக் தீவுகள், பிரெஞ்சுப் பாலினேசியா, ஈஸ்டர் தீவு ஆகியனவாகும். Fiji, சமோவா மற்றும் தோங்காவில் குடியேறிய பின்னர் ஆஸ்டிரேனேசிய மக்கள் மீண்டும் ஒரு 1,000 ஆண்டுகள் வரை அதிகமாக குடியேறி பரவவில்லை. பிறகு New Zealand, Hawaii மற்றும் Easter தீவு ஆகியவற்றில் குடியேறினர்.

இத்தகைய குடியேற்றங்கள் விரிவாகி பரவும் போக்கு மற்றும் அதற்கான முக்கிய காரணங்கள் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த தீவுகளுக்கும், பாலினேஷியாவுக்கு இடையிலான படகு போக்குவரத்து மற்றும் சமூக நுட்பங்கள் போன்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த குடியேற்ற விரிவாக்கம் ஏற்பட்டதாக அறியவந்தனர். இந்த புதிய நுட்பங்களை பயன்படுத்தி ஆஸ்டிரேனேசிய மற்றும் பாலினேஷியா மக்கள் பசிபிக் தீவுகளில் விரைவாக பரவலாகி, மிக பெரிய மக்கள் குடியேற்றத்தை உருவாக்கியுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி தான் மக்கள் உலகில் பெரியளவில் குடியேறி பரவி வாழ மிக முக்கியமாக விளங்கியுள்ளதை இது காட்டுகிறது.

பசிபிக் தீவுகளில் உள்ளவர்கள் தைவானிலிருந்து பரவலாகி குடிபெயந்து பரவியுள்ளனர் என்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. அப்படியானால் ஆஸ்டிரேனேசிய மொழிகள் பேசப்படும் பசிபிக் தீவுகளின் மக்கள் சீனர்களின் உடன்பிறப்புக்கள் என்பதையும், சீனர்களின் வம்சாவழியினர் உலகின் பெரும் பகுதிகளில் பரவி வாழ்வதையும் நமக்கு புரிய வைக்கின்றது.