ஆயிரமாண்டுகளுக்கு முன் சீனாவில், சுங் வம்சக்காலத்தின்போது, ஹாங்ஷோவில் ஒரு திருடன் இருந்தானாம். அந்த விசித்திரமான திருடனின் பெயர் நான் வருகிறேன், வோ லாய் யே (Wo lai ye). அது மக்கள் அவனுக்கு சூட்டிய பெயர், பட்டப்பெயர். கில்லாடித்திருடனான இந்த வோ லாய் யே, திருடும் இடத்தில் எந்த ஒரு தடயத்தையும் விட்டுச் செல்வதில்லையாம். ஆனால், அவன் திருடுமிடங்களில் "நான் வருகிறேன்" வோ லாய் யே என்ற தனது பெயரை, சுவற்றில் எழுதிவிட்டுச் செல்வானாம். ஹாங்ஷோவிலுள்ள மக்களுக்கு பெரிய தலைவலியாய், தொந்தரவாய் இருந்தான் இந்த திருடன். வீடுகளில் அனாயசாமாக புகுந்து, திருடிவிட்டு, தன் பெயரையும் நான் வருகிறேன் என்று எழுதிவிட்டு போனால், யாருக்குத்தான் கோபம் வராது. எனவே. ஒரு முழு வீச்சிலான தேடுதல் வேட்டையை மக்களும், அந்த நகரத்து நிர்வாகத்தினரும் மேற்கொண்டனர். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல், இந்த வோ லாய் யே திருடனும் ஒரு வழியாக சிக்கினான். அவனை நகர நீதிபதியிடம் கொண்டு நிறுத்தினார்கள் காவல்துறையினர். நீதிபதி, காவல்துறை அதிகாரியை பார்த்து, இவன் தான் திருடினான் என்று குற்றம் சுமத்த ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்க, அதிகாரி, நிச்சயமாக எந்தத் தவறும் இதிலில்லை என்றார். ஆனால் இந்த திருடனோ, நான் அவனில்லை எனும் பாணியில் யாரோ செய்த குற்றத்துக்கு என்னை பலிகடா ஆக்குகிறார்கள் அய்யா, நான் திருடினேன் என்பதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை அய்யா என்று ஒரேயடியாக மறுத்தான். அதற்கு காவல்துறை அதிகாரி, நீதிபதி அவர்களே, கடும் பாடுபட்டு, தீவிரமாக திட்டமிட்டு தேடுதல் வேட்டையில் அவனை பிடித்துள்ளோம், இப்போது நீங்கள் அவனை போகவிட்டால் அதற்கு பிறகு அவனை பிடிப்பது மிக மிகக் கடினமானதாகும் என்றார். குற்றம் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லாதபோதும், புலன் விசாரணை முடியாத நிலையில் தற்காலிகமாக அவனை சிறையிலடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. அக்காலத்தில் சிறைக்குள் செல்லும் கைதிகள் சிறைக்காவலனுக்கு கொஞ்சம் காசு கொடுக்கவேண்டியது வழமையாக இருந்தது. சிறைக்காவலன் தன்னை கேள்வியோடு பார்த்தபோது, இப்போது என்னிடம் ஒன்றுமில்லை, என்னிடமிருந்த அனைத்தையும், என் உடைமைகளையும் காவலர்கள் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால் மலைக்கடவுள் கோயிலுக்குள்ளே ஒரு செங்கல்லின் அடியில் கொஞ்சம் வெள்ளிக்காசுகளை நான் மறைத்து வைத்துள்ளேன், அதை நான் உனக்கு தர விரும்புகிறேன். நீ எடுத்துக்கொள் என்றான். காவலனும் திருடன் சொன்னது போலவே கோயிலுக்குச் சென்று அங்கே ஒரு செங்கல்லின் அடியில் இருந்த 20 வெள்ளிக்காசுகளை எடுத்து வந்தான். அதற்குபின் சிறைக்காவலன் இந்த திருடனை நண்பனை போல் நடத்தினான். நாட்கள் சென்றன. ஒரு நாள் மீண்டும் சிறைக்காவலனை அழைத்து, ஒரு பாலத்தின் அடியில் நிறைய காசுகள் அடங்கிய பொதியை வைத்துள்ளேன் அதை நீ எடுத்துக்கொள் என்றான். சிறைக்காவலனும், அவ்வாறே சென்று 100 பொற்காசுகள் கொண்ட பொதியை கண்டு, எடுத்து வந்தான். அதற்கு பிறகு இருவரும் ஒன்றாக மதுவருந்தி பேசி மகிழும் அளவுக்கு நண்பர்களாக மாறினார்கள்.
ஓரிரு நாட்கள் கழித்து சிறைக்காவலனிடம் இந்த திருடன் எனக்கு ஒரு உதவி வேண்டும், கொஞ்சம் அவசரமாக வீட்டுக்கு செல்லவேண்டும், இரவு சென்று, உடனே திரும்பிவிடுகிறேன் என்றான். சிறைக்காவலன் குழப்பமாக யோசித்தபோது, என் மீது இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை, நான் திருடியதற்கான ஆதாரமுமில்லை, ஆக எனக்கு என்ன பயம், நான் உடனே திரும்பி விடுகிறேன் என்றான். அவன் சொன்னதை கேட்ட சிறைக்காவலனும், அதானே இன்னும் வழக்கில் குற்றம் நிரூபிக்கப் படவில்லை, அப்படியே பிரச்சனை என்றால், இவன் கொடுத்த காசுகள் நமக்கு உதவப்போகிறது என்று எண்ணி, இரவு வேளையில் அவனை வெளியே செல்ல அனுமதித்தான். வாயில் வழியாக செல்லாமல் கூரையிலேறி குதித்து மறைந்து போனான் திருடன். சில மணி நேரங்கள் கழித்து, தூங்கிக்கொண்டிருந்த சிறைக்காவலனை எழுப்பி, நான் வந்துவிட்டேன், உதவி செய்த உனக்கு உன் வீட்டில் சிறு அன்பளிப்பை விட்டு வைத்துள்ளேன் நீ எடுத்துக்கொள் என்றான். சிறைக்காவல் காலையில் வீட்டுக்குச் சென்றபோது, அவனது மனைவி, "வாங்க, வாங்க, விடியற்காலையில் நம் வீட்டின் கூரையில் ஏதோ சத்தம் கேட்டது, எழுந்து போய் பார்த்தேன் யாரோ ஒரு பொதியை தூக்கிபோட்டாங்க, உள்ளே தங்கமும் வெள்ளியுமா இருக்குதுங்க" என்று பூரித்து நின்றாள்.. சத்தம் போடாதே, இதை யாருக்கும் சொல்லாதே என்று மனைவியிடம் கூறினாலும் சிறைக்காவலனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் சிறைக்கு சென்று, அன்பளிப்பு கொடுத்த நண்பன், திருடனுக்கு நன்றி கூறினான். அன்றைக்கு கிட்டத்தட்ட ஆறேழு வீடுகளில் திருட்டு நடந்ததாகவும், பல பொருட்கள் களவாடப்பட்டதாகவும் பிறகு தகவல் வந்தது. திருட்டு நடந்த வீடுகளின் சுவற்றில் "வோ லாய் யே", நான் வருகிறேன் என்று எழுதப்பட்டிருந்ததாம். இதை அறிந்த நீதிபதி, சிறையில் இருந்த நம் திருடனை விடுவிக்கச் சொன்னாராம். காரணம் அவன் சிறையில் இருக்கும்போது வோ லாய் யே என்று எழுதிவிட்டு, களவாடி சென்றவன் தானே உண்மையான திருடன். ஆனால், உண்மையில் நடந்ததை அறிந்த ஒரே ஆளான சிறைக்காவலனோ வேறு வழியே இல்லாமல் வாய் மூடிக்கிடந்தானாம். மதிநுட்பத்தால் தப்பித்தான் வோ லாய் யே திருடன்.
|