• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-11 17:23:31    
புகை உயிருக்கு உலை

cri
புகைபிடிக்கின்றவர்கள் தங்கள் பெற்றோரின் அல்லது தனது உழைப்பின் கனியாக கிடைத்த வருமானத்தை புகையாக்குகின்றோம் என்று நினைப்பதில்லை. புகைப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற எச்சரிக்கையை மதிப்போரும் இல்லை. புகையிலையில் இருந்து வெளியாகும் புகையில் சுமார் 250 வகையான நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், இரசாயனங்கள், பாதிப்பை உருவாக்கும் உலோகங்கள் அடங்கியிருக்கின்றன. இவை புகைபிடிப்போரை பாதிக்கும் என சொல்லத்தான் வேண்டுமா. ஆனால் புகைப்பிடிப்பதன் மூலம் உட்கொள்ளப்படும் நிக்கோட்டின் நச்சுப்பொருள் ஒருவரின் வாழ்நாளில் எந்த பருவத்தில் அறிமுகமானால் அதிக கேடுவிளைவிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இது தொடர்பாக, டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயதில் புகைபிடிக்கும் பழக்கம் ஏற்பட்டால் பிந்தைய வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள் என்ன? சில காலம் மட்டுமே புகைபிடித்த பின்னர், அப்பழக்கத்தை கைவிட்டு விட்டால் பாதிப்புகள் இருக்குமா? எத்தகைய பாதிப்புகள் வெளிப்படும்? என்பதை அறியும் விதமான புதிய ஆய்வொன்றை அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகம் நடத்தியது. பதின்ம வயதில் புகைபிடிப்போர் தங்களுடைய பிந்தைய வாழ்க்கையில் நீண்டகால பாதிப்புகளை பெறுவர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைபிடிக்கின்றபோது அந்த புகையிலையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சுப்பொருள் உடலில் படிகிறது. பதின்ம வயதிலேயே ஒருவர் நிக்கோட்டினுக்கு அறிமுகமானால், அது பண்புகளை சீர்குலைக்கும் நீண்டகால நரம்பியல் பாதிப்புகளை அவரில் ஏற்படுத்தும். மேலும், மிக குறைந்த அளவில், சில காலம் மட்டுமே நிக்கோட்டின் எடுத்திருந்தால் கூட பிந்தைய வாழ்வில் நமது பண்புகள் சீர்குலைக்கப்படும் என்பதையும் இந்த ஆய்வு அறிய தருகிறது.

இதனை சோதனை எலிகள் மூலம் அறிவியலாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். நிக்கோட்டின் வாழங்கப்பட்ட சிறிய எலிகள், வளர்ந்த பின்னர் மகிழ்ச்சி குறைவான, அழுத்த உணர்வுகளுக்கு ஆளான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக புளோரிடா மாநில பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் Carlos Bolanos தெரிவித்தார். விலங்குகளை தாக்குவது போன்று, நிக்கோட்டின் மனிதர்களையும் தாக்கும் என்று இந்த ஆய்வு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நச்சுப்பொருளான நிக்கோட்டினை 15 நாட்களாக, நாளுக்கு இரண்டு முறை, சிறிய எலிகளுக்கு வழங்கினர். அத்தகைய சிகிச்சை நாட்கள் முடித்த பின்னர், அழுத்தமிக்க அவசர சூழ்நிலைகளில் அவற்றின் செயல்பாடு மற்றும் கைமாறு கிடைக்கும் செயல்களுக்கு அவற்றின் மறுமொழி ஆகியவற்றை ஆராய்ந்தனர். இவற்றை கண்டறியும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு சோதனைகளை அவர்கள் நடத்தினர். நிக்கோட்டின் வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் அழுத்த உணர்வுகளின் அறிகுறிகள் அவற்றின் பண்புகளில் மாற்றங்களாக வெளிப்பட்டதை கண்டறிந்தனர். தங்களை அடிக்கடி சுத்தப்படுத்தி கொண்டன. வழக்கத்திற்கு மாறாக, சுவையான பானங்கள் வடிவில் வழங்கப்பட்ட கைமாறுகளை குறைவாகவே உண்டன. அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளில் தப்பி செல்ல முயற்சிக்காமல், அசையாமல் அமைதியாக இருந்தன. நிக்கோட்டின் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்ட எலிகளில் கூட நீண்டகால பாதிப்புகள் தொடர்ந்தது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

இந்த எலிகளுக்கு மருந்துகள் வழங்கி தற்காலிக நிவாரணம் வழங்க ஆய்வாளர்களால் முடிந்தது. இந்த மருந்துகள் சற்று அதிக அளவிலான நிக்கோட்டினை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய எலிகளை போலவே வளர்ந்த எலிகளுக்கும் நிக்கோட்டின் வழங்கப்பட்டு ஆராயப்பட்டது. ஆனால் அழுத்த உணர்வுகளின் அறிகுறிகள் அவற்றில் அதிகமாக வெளிப்படவில்லை. அப்படியானால் வளருகின்ற எலிகள் நிக்கோட்டின் நச்சுப்பொருளால் அதிகமாக பாதிக்கப்படுவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அதுபோல மனித மூளையிலுள்ள பல நரம்புகளின் தகவலனுப்பும் அமைப்புகள் ஒருவரின் பதின்ம வயதில் தொடர்ந்து வளர்ச்சியடைவதால், அந்த பதின்ம பருவத்தில் உட்கொள்ளப்படும் நிக்கோட்டின் அதிகமான எதிர்மறை பாதிப்புகளை இந்த தகவலனுப்பும் அமைப்புகளில் ஏற்படுத்துகின்றன. எனவே தான் பதின்ம வயதிற்கு பிந்திய வாழ்க்கை செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்பு ஏற்படும் முறை பற்றிய மேலதிக ஆய்வுகள் தேவை எனவும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்தலுக்கும் பண்புகளின் சீர்குலைவிக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியலாளர்கள் முன்பே அறிந்திருந்தனர். ஆனால், மனித பண்புகளை பாதிக்கின்ற காரணிகள் பல இருப்பதால், புகைபிடித்தல் பண்புகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு கூறமுடியவில்லை. புகைபிடித்தல் மன அழுத்த அறிகுறிகளை உருவாக்கலாம் என்றும், அந்த அறிகுறிகளை போக்கும் விதமாக புகைபிடித்தலை தொடர்ந்து, அப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து அதிகரிக்கும் என்ற கருத்திற்கு ஆதரவாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன. அதாவது புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் தனது உடலளவில் ஏற்படும் மாற்றங்களை போக்க அனைவரும் எண்ணுவர். இருமல், கைநடுக்கம் உள்ளிட்ட அழுத்த உணர்வுகளின் பல அறிகுறிகளிலிருந்து உடனடியாக விடுபட மீண்டும் புகைபிடித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இவ்வாறு தொடர்வதால் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி அதிலிருந்து மீள்வது கடினமாகிறது.

பதின்ம வயது இளைஞர்களுக்கு புகைபிடிக்காதீர்கள், புகைபிடிக்க ஒரு முறை கூட முயற்சிக்க வேண்டாம் என்பதே இந்த ஆய்வின் செய்தியாக உள்ளது. எப்போதாவது புகைபிடித்தால் கூட, அது நீண்டகால பாதிப்புகளை கொண்டு வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். பெரியோர் புகைப்பிடித்து விட்டு தூக்கிஎறியும் துண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து புகைக்க நினைக்கும் பதின்ம வயதினருக்கு இந்த ஆய்வு ஓர் எச்சரிக்கை. வாழ்வை புகையாக்கும் புகை பழக்கம் நமக்கு வேண்டாமே. புகை நமக்கு பகை.