கலை அன்பான நேயர்களே ! சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு, அவற்றை பற்றி நீங்கள் அனுப்பிய கருத்துகளை தொகுத்து வழங்கும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
தமிழன்பன் நாம் கேட்ட வானொலி நிகழ்ச்சிகளை மறுபடியும் நினைவூட்டும் கருத்துக்களின் தொடராய் அமையும் இந்த நிகழ்ச்சி உங்கள் கருத்து கடிதங்கள் எழுதி அனுப்பி, நீங்கள் பங்கேற்க்கும் நிகழ்ச்சி.
கலை ஆம் நேயர்களே ! நிகழ்ச்சிகளை பற்றி கருத்து கடிதங்களை எழுதிவரும் உங்களை மனமாற பாராட்டுகின்றேன். கடிதங்கள் மூலம் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி.
தமிழன்பன் உங்கள் சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் என சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும் அனைவரும் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களை எழுதியனுப்ப தூண்டுங்கள். அருமையான திபெத் என்ற இணையதளம் மூலம் நடத்தப்படும் சுற்றுலா பொது அறிவுப் போட்டியின் விடைகளை இணையதள பக்கத்திலேயே பதிவு செய்துவிட்டீர்களா? இதுவரை செய்யாவிட்டால் பரிசு பெறும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
கலை இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோமா?
தமிழன்பன் சரி. முதலாவதாக கடிதப்பகுதி
கலை நிகழ்ச்சியின் தொடக்கமாக, சென்னை மறைமலைநகர் சி. மல்லிகா தேவி சீன மகளிர் நிகழ்ச்சியை பற்றி தெரிவித்த கருத்துக்கள். ஆடல் பாடல் கலையில் தேர்ச்சி பெற்ற துவங்சென் அம்மையார் லோ இன மக்களுக்கு ஆற்றிய அரிய பணிகளை என்னவென்று புகழ்வது. புகைபோக்கி இல்லாத சமயலறையில் தீபிடிக்க அதிக வாய்ப்புள்ளதை தெரிந்துகொண்டு, மின்சார கம்பிகளை மாற்றும்படி கிராம மக்களுக்கு அறிவுரை கூறியது பாராட்டத்தக்கது. எரியாற்றலை சிக்கனப்படுத்தும் அடுப்பு அறிமுகம் கல்வி மேம்பாட்டுப் பணி ஆகியவற்றிற்கு அவர் பாடுபட்டதை அறிந்துகொண்டேன். இப்பணிகள் மிகவும் கடினமானவை. மக்கள் காட்டும் ஆர்வமும், ஆதரவும், துவங்சென் அம்மையாரின் துன்பங்களை மறைக்க செய்யும் ஆறுதலாக அமைகின்றன. லோ இன மக்களின் பாடல் வரிகளையும் கேட்டு மகிழ்ந்தேன்.
தமிழன்பன் அடுத்ததாக, செய்தித்தொகுப்பு பற்றி புதுகை வரதராசன் அனுப்பிய கடிதம். கிராமபுறங்களில் குறைந்து வரும் வறுமை ஒழிப்புப்பணி பற்றி கேட்டேன். சீனா மேற்கொண்ட 30 ஆண்டுகால சீர்திருத்தப்பணிகளில் இன்று சீன கிராமங்களில் வறுமை குறைந்து காணப்படுகிறது. வறுமை ஒழிப்பு கருத்தரங்கில் திரு. வாங் சோ யான் முன்வைத்த கருத்துக்கள் மூலம் சீனாவில் வறுமை ஒன்பது விழுக்காடு குறைந்ததையும், ஐநா ஆய்வின்படி வறுமை ஒழிப்பு சாதனைகளில் 67 விழுக்காடு சீன கிராமபுறங்களில் நிகழ்ந்துள்ளதையும் அறிந்தேன். கிராமப்புறங்களில் வறுமையை குறைக்க விவசாயிகளின் தொழில் பயிற்சியை வலுப்படுத்துவது முக்கியமானது என்ற நோக்கம் மிகவும் அற்புதமானது.
கலை ஊட்டி எஸ்.கே. சுரேந்திரன் உணவரங்கம் பற்றி அனுப்பிய கடிதம். சீன வானொலியில் ஒலிப்பரப்பாகிய உணவரங்கம் நிகழ்ச்சி மூலம் ப்பாகாவ் என்னும் சீன உணவு முறையை கற்றுக்கொண்டேன். ப்பாகாவ் என்றால் தமிழில் உயர்வு என்று பொருள்படுவதையும், வாழ்வு உயரும் என்பதற்கு அடையாளமான உணவு வகை அது என்பதையும் அறிய தந்தீர்கள். எனது குடும்பத்தில் எந்த நல்ல காரியம் நடத்தாலும் ப்பாகாவ் உணவை தயாரித்து சுவைக்க வேண்டும் என்று எனது மனைவியிடம் தெரிவித்துள்ளளேன்
தமிழன்பன் இலங்கை மட்டக்களப்பிலிருந்து எ.கே. ஜெம்சிதா அனுப்பிய கடிதம். ஓர் அலைவரிசையில் உலகையே ஆட்கொண்டு வரும் சீன வானொலி, உலக மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்டது. குறிப்பிட்ட வயதினர் தான் கேட்கலாம் என்பதாக நிகழ்ச்சிகள் அமையாமல் எல்லா வயதினரும் கேட்டு இரசிக்கும் விதமாக அமைவது தான் இதன் சிறப்பு. ஆயிரக்கணக்கான மையில்களை தாண்டிய செஞ்சீன மண்ணிலிருந்து எமது வீட்டில் ஒலிக்கும் சீன வானொலியே நீ எங்களையும் சீன வானொலி குடும்பத்தில் இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கலை குருணிகுளத்துப்பட்டி கே.சி.முருகள் மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். செய்தி சோலையில் புகுந்து தேர்ந்தெடுத்து வழங்கப்படும் செய்திகளின் மூலம் குரங்கு அரசர் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. சிவப்பு நிறம் சீனாவில் அனைவரும் ஏற்கும் வண்ணம் என்பதையும் நிகழ்ச்சி தெரிவித்தது. சீனாவில் 12 ஆண்டுகள் பன்றி, எலி, மாடு என விலங்குகளின் பெயர்களால் அழைக்கப்படுவது வியப்பு அளித்தது.
தமிழன்பன் மதுரை அண்ணாநகர் ஆர். அமுதாராணி அனுப்பிய கடிதம். 2008 ஆம் ஆண்டின் சீனாவின் தூதாண்மை சாதனைகள் பட்டியலிடப்பட்டதை நிகழ்ச்சியில் கேட்டேன். அவ்வாண்டில் சீனா பல கடினமான சோதனைகளை சந்தித்தது. ஆனாலும் உலக அரங்கில் அதன் துதாண்மை கொள்கைகள் மற்றும் நம்பிக்கையை நிலைநாட்டி உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து சாதனை பெற்றுள்ளது. இக்கட்டுகளின் நடுவிலும், உலகில் முக்கிய செல்வாக்குடைய வல்லரசாக சீனா மாறி வருகிறது. 2008 ஆம் ஆண்டு அதிக பனி பொழிவு மற்றும் இயற்கை சீற்றம் ஆகியவை சீனாவை தாக்கின. வென்சுவானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத் சுதந்திர சக்திகள் ஒலிம்பிக் தீப தொடரோட்டத்தை சீர்குலைத்தன. இத்தகைய நெருக்கடிகளின் நடுவிலும், சீனா தூதாண்மை உறவில் செவ்வனே செயல்பட்டு வலிமையான நாடாக மாறிவருவது பாராட்டுதற்குரியது.
கலை ஜெயா வழங்கிய சீன தேசிய இனக்குடும்பம் பற்றி மெட்டாலா எஸ்.பாஸ்கர் அனுப்பிய கடிதம். வடகிழக்கு சீனாவின் ஷீலிப் பகுதியின் மக்கள் 1980 ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிந்தனர். கொரிய இனத்தவர் பல தொழில்களை சார்ந்து வாழ்கிறார்கள். தற்போது சாவி செய்தல், தையல், சிகை அலங்காரம், போன்ற தொழில்களை செய்துவருவதாக அறியவந்தேன். சிலர் உணவகங்கள் நடத்தியும் வருகின்றனர். இவ்வாறு அனைவரும் வாழ்க்கையில் மேம்பட்டு வளர்ந்துள்ளதை அறிய முடிந்தது.
மின்னஞ்சல் பகுதி
ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன்
சீனக் கடற்படையின் வைரவிழா அணிவகுப்பு நடவடிக்கை என்ற செய்தித்தொகுப்பு மூலம் 23ம் நாள் பிற்பகல் சீனாவின் கடலோர நகரான சிங் தாவுற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நடைபெற்ற சீன மக்கள் விடுதலைப் படையின் கடற்படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டுப் பன்னாட்டு போர் கப்பல்களின் அணிவகுப்பு பற்றியும் அதில் சீன அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹுச்சிந்தாவ் சீன கடற்படையின் போர் கப்பல் அணிவகுப்பையும், பன்னாட்டு போர் கப்பல் அணிவகுப்பையும் பார்வையிட்டதை அறிந்தேன். பன்னாட்டுப் போர் கப்பல்களின் அணிவகுப்பை சீனா நடத்துவது இது முதன்முறை எனவும், இதுவரை சீனாவின் கடலில் நடத்தப்பட்ட மிகப் பெரிய அணிவகுப்பு நடவடிக்கையும் இதுதான் எனவும், அறிந்தேன். அதேவேளையில் சீனக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல், நாசகாரி கப்பல், விரைவுப் போர் கப்பல், நடுத்தர போர்கப்பல், நிலம் மற்றும் நீர் பரப்புகளில் போரிடும் கப்பல், என பல்வேறு கடற்படை கப்பல்கள் அதில் இடம் பெற்றமை கேட்டு வியந்தேன். இவை அனைத்தும் உலகில் அமைதியை நிலைநாட்டவும், போர் அச்சத்தை போக்கிடவும் பயன்படட்டும்.
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
சீன மக்கள் விடுதலைப் படையின் கடற்படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு வைரவிழாவினை சிறப்பாக கொண்டாடியதை கலைமகள் வாசித்து வழங்கிய செய்தித் தொகுப்பில் கேட்டு ரசித்தேன். பல நாடுகள் பங்குகொண்ட கடல் படைபிரிவுகளின் பயிற்சி பல்வேறு நாடுகளின் கடல் படைப்பிரிவுகளுடன் தொடர்பை வலுப்படுத்தி, புரிந்துணர்வு மற்றும் நட்புறவை அதிகரித்து, சீனா மற்றும் சீன கடல் படையை உலகம் மேலும் அறிந்து கொள்ள மிகவும் துணைபுரியும். வைரவிழா கொண்டாட்ட நடவடிக்கைகளினால், கடலின் பாதுகாப்பைப் பேணிக்காப்பது, அமைதியான, இணக்கமான கடல் சூழ்நிலையை உருவாக்குவது என்பது பல்வேறு நாடுகளின் கடல் படைப் பிரிவுகளின் பொறுப்பு. இதை சீனாவும் நன்கு உணர்ந்துள்ளதை அறிவேன். கடல் படைப்ரிவுகளின் கடல் பாதுகாப்புக்கும், சீன கடல் படை பிரிவுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.
வளவனூர் புதுபாளையம் எஸ் செல்வம்
சீனக் கடற்படையின் வைரவிழா அணிவகுப்பு மரியாதை என்ற கட்டுரையைக் கேட்டேன். சீனக் கடற்படையின் வரலாற்றில் அதன் அறுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முதன்முறையாக 21 நாடுகள் ஒருங்கிணைந்து சின்தாவ் கடற்பரப்பில் நடத்திய பன்னாட்டு அணிவகுப்பு பெரிதும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் புரிந்துணர்வும் நட்புணர்வும் மேலும் அதிகரிக்கும். மக்களுக்கிடையே புரிந்துணர்வு அதிகரிப்பதற்கு முன், போர்ப்படையினருக்கான நல்லுறவை வளர்க்க இத்தகைய நடவடிக்கைகள் பெரும் உறுதுணையாக அமையும். இப்பயிற்சியை சீன அரசுத்தலைவரே நேரில் பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது.
முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர்
சீனாவின் கப்பற்படை நிறுவப்பட்ட அறுபதாவது ஆண்டின் நிறைவு வைரவிழா கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்று வருவதற்கு எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள். இந்த வைரவிழாவிற்கு உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் சீனாவிற்கு வருகைதந்து வாழ்த்துவதும், கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்துகொள்வதும் சிறப்புக்குரியது. அமெரிக்காவின் கடற்படை தளபதி, சீனாவின் கடற்படையின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்துகொள்வது இருநாட்டின் உறவிற்கு நல்ல அடையாளமாக திகழ்கிறது. ஒன்றின் மீது ஒன்று அக்கரை காட்டி ஆழமான நட்புறவை பேணுவது பாராட்டுக்குரியது. வைரவிழா கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய சீனாவின் அரசுத் தலைவரும், சீன மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹூசிந்தாவ் "சீனாவின் கடற்படை யாருக்கும் அச்சுறுத்தலாக அமையாது எனவும், ஏதென் வளைகுடா பகுதியில் சீன கப்பல் அணியின் பாதுகாப்பு பணி உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்று பேசியது உலக நாடுகள், சீனா மீதான தங்களின் நட்புறவை ஆழமாக்கவும், நம்பிக்கையை வலுபடுத்தவும் உதவும்.
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங்
கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீன மக்களின் சராசரி வருமானம் சுமார் 11 விழுக்காடு அதிகமாகியுள்ளது. அதேபோல் சீன விவசாயிகளின் வருமானம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது, சீன ஆட்சியாளர்களின் சரியான திட்டமிட்ட வழிகாட்டல் மூலமாக சீன மக்களின் வருமானம் ஆண்டுதோறும் அதிகரிப்பதில் ஐயமில்லை.
செந்தலை N.S. பாலமுரளி
சீன மனித உரிமை சட்டத்தை வெளியிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். தேசிய மனித உரிமையை சீனா இதன் மூலம் பாதுகாக்கும் என நம்புகின்றேன். இச்சட்டம் முதன்முறை இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் போர் 2 நாள் நிறுத்தம் செய்திருப்பது பாராட்டுதற்குரியதாகும். இலங்கையில் முழுமையாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அப்பாவி தமிழ்மக்கள் இறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இதனை வலியுறுத்த வேண்டும்.
திருச்சி அண்ணாநகர், வி. டி. இரவிச்சந்திரன்
ஆப்கான் எல்லையையொட்டிய பழங்குடி கிராமத்தினர் வசிப்பிடங்களில் அமெரிக்க உளவு விமானம் தாக்குதல் நடத்தியது குறித்து செய்திகளில் செவிமடுத்தேன். பேரச்சமூட்டுபவர்களை துடைத்தொழிப்பதில் தவறில்லை. ஆனால், அப்பாவி மக்களும் இத்தாக்குதல்களில் உயிரிழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
|