1997ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், மேற்குச் சீனாவின் ஷான்சி மாநிலத்தின் நிலத்தடி இயற்கை எரிவாயு, குழாயின் மூலம், சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து பெய்ஜிங் மக்களின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதுவே, ஷான்சி-பெய்ஜிங் இயற்கை எரிவாயுக் குழாயாகும். இது பசுமையான இயற்கை எரிவாயுவை, சீனாவின் பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் மாநகரங்களுக்குக் கொண்டு வருகிறது.
ஷான்சி-பெய்ஜிங் இயற்கை எரிவாயுக் குழாய் என்ற திட்டப்பணி, 1996ம் ஆண்டு மே திங்கள் கட்டியமைக்கப்படத் துவங்கியது. இக்குழாயின் முழு நீளம், 910 கிலோமீட்டராகும். இது, ஷான்சி, ஷான்சி, ஹேபெய், பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் பிரதேசத்தைக் குறுக்கே கடந்து செல்கிறது. இது, ஷான்சி-பெய்ஜிங் இயற்கை எரிவாயுக் குழாய் ஒன்று என்று அழைக்கப்படுகிறது. பெய்ஜிங் மாநகரின் பொருளாதார வளர்ச்சியுடன், 2005ம் ஆண்டு, 935 கிலோமீட்டர் நீளமான ஷான்சி-பெய்ஜிங் இயற்கை எரிவாயு குழாய்களின் இரண்டாம் நாடியான குழாய் இரண்டு, அதிகாரப்பூர்வமாக உற்பத்தியில் இறங்கியது. கடந்த 10 ஆண்டுகளில், இரு இயற்கை எரிவாயுக் குழாய்கள், பெய்ஜிங் மாநகருக்கு ஆயிரத்து 750 கோடி கன மீட்டர் தூய்மையான இயற்கை எரிவாயுவைக் கொண்டு வந்துள்ளன. இது பெய்ஜிங்கில் பயன்படுத்தப்படும் எரிவாயுவின் மொத்தம் அளவில் 95 விழுக்காட்டுக்கு மேலாகும்.
ஷான்சி மாநிலத்தின் ஷுவொச்சோ நகரிலுள்ள சீன எண்ணெய் நிறுவனத்தின் ஷான்சி எரிவாயு கிளையின் அவசர பழுதுபார்ப்பு மையம், இக்குழாயின் பாதுகாப்பு உத்தரவாதப் பணிக்குப் பொறுப்பேற்றுள்ளது. தமது குழு, Shanxi-Beijing இயற்கை எரிவாயுக் குழாயின் அவசர மீட்புதவிக் குழுவாகும் என்று இம்மையத்தின் பொறுப்பாளர் Wu Zhonglin பெருமிதத்துடன் கூறினார்.
எமது குழாய், பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் மாநகரங்களின் மக்களின் வயிற்றுப்பாடு, வாழ்க்கைப் பொருளாதாரம் ஆகியவற்றின் உயிர் நாடியுடன் தொடர்புடையது. எனவே, எமக்கு பெரிய நிர்ப்பந்தம் உள்ளது. நாம், ஒரு தீ அணைக்கும் குழுவைப் போல், பிரச்சினை தோன்றும் போது, அவ்விடத்திற்கு விரைந்து சென்று, அவசர பழுதுபார்ப்புப் பணிகளை செய்ய வேண்டும். அனைத்து பிரச்சினைகளையும், விரைவாகத் தீர்க்க வேண்டும். சமவெளிப்பகுதியில் பிரச்சினை தோன்றினால், 20 மணிகளுக்குள் எரிவாயு வழங்கலை மீட்க உத்தரவாதம் அளிப்பதற்கு எமக்கு துணிவு உண்டு என்று அவர் கூறினார்.
சீன எண்ணெய் குழுமத்தின் பெய்ஜிங் Huayou இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் Dong Shaohua அறிமுகப்படுத்தியதாவது:
இயக்கத்தின் காலத்தில், நாம், விசைமாற்றியை, அழுத்தப் பொறியில் பொருத்தியுள்ளோம். இதில், சுய சோதனை என்ற தொழில் நுட்ப முறைமையின் மூலம், ஐயம் இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்கிறோம். பிறகு, பெய்ஜிங்கில், எங்கள் தலைமையில் பழுதுபார்க்கப்படுகிறது அல்லது இயந்திரச் சுழற்சியை நிறுத்திய பின் பழுதுபார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
அதே போல், தியான்ஜின் மாநகரின் தாக்காங்கிலுள்ள ஷாஞ்சி-பெய்ஜிங் இயற்கை எரிவாயுக் குழாயின் சேமிப்புத் தொட்டியில், முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டு முறைமை ஒன்று உள்ளது. இக்குழாய் கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தாலும், தொட்டியிலுள்ள 300 கோடி கன மீட்டருக்கு மேற்பட்ட இயற்கை எரிவாயு, பெய்ஜிங்கின் குளிர்காலத்தில் 15க்கு மேற்பட்ட நாட்களுக்கான எரிவாயுவின் வினியோகத்தை உத்தரவாதம் செய்ய முடியும். தாக்காங் எரிவாயு சேமிப்புத் தொட்டி கிளை நிறுவனத்தின் மேலாளர் Wang Fengtian அறிமுகப்படுத்தியதாவது:
எப்படி மதிப்பிடுக்கிறோம்? நம் நாட்டில், இதற்கு முழுமையான வழிமுறையும் வரையறையும் இல்லை. எனவே, நாமும், ரஷிய தேசிய இயற்கை எரிவாயு அறிவியல் ஆய்வகமும், இது பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளோம். சிக்கலான மாற்றத்தில், எரிவாயு சேமிப்புத் தொட்டியின் கிணறு, தொட்டியின் பாதுகாப்பை எப்படி மதிப்பீடு செய்கிறது என்பதை இவ்வாய்வு மதிப்பீடு செய்யும். இந்தக் கிணறு, சீரழிக்கப்பட்டதா இல்லையா? இதன் தரம், சிறந்ததா இல்லையா என்ற ஐயங்களும், இந்தச் சோதனைகளின் மூலம், உறுதி செய்யப்படுகின்றன. எமது கிணற்றில் ஐயம் இருந்தால், காலதாமதமின்றி உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
பாதுகாப்பான, போதுமான இயற்கை எரிவாயுவின் வினியோகம், பெய்ஜிங் மாநகரின் எரியாற்றலின் கட்டமைப்பை மாற்றியுள்ளது. தற்போது, பெய்ஜிங் மக்கள் பாதுகாப்பான, பசுமையான இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர் என்பதோடு, பெய்ஜிங் மாநகரின் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பல்வகை பேருந்துகளும், இதை இயக்கு ஆற்றலாக கொண்டுள்ளன. தவிர, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கிராமத்தின் உணவு மண்டபங்களும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழுவுடன் கையொப்பமிட்ட பல நூறு குறிப்பிட்ட விருந்தகங்களும் உணவகங்களும் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு முழுதும், ஷான்சி-பெய்ஜிங் இயற்கை எரிவாயுக் குழாய் மூலம் வினியோகிக்கப்படவுள்ளது. இக்குழாய், பெய்ஜிங் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆற்றும் பங்கு பற்றி பேசிய போது, சீன எண்ணெய் குழுமத்தின் பெய்ஜிங் Huayou இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பொது மேலாளர் Liu Lei, உணர்ச்சி வயப்பட்டு கூறியதாவது:
ஷான்சி-பெய்ஜிங் இயற்கை எரிவாயுக் குழாய் ஒன்று மற்றும் இரண்டு, இயற்கை எரிவாயுவை வழங்கும் ஆற்றலை எட்டியுள்ளன. ஆயிரம் கோடி கன மீட்டருக்கு மேற்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கும் ஆற்றல், தலைநகரின் வசதிகள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான வசதிகளை உத்தரவாதம் செய்யும் என்பதில், ஐயமில்லை. குழாய் ஒன்று, குழாய் இரண்டு, எரிவாயு சேமிப்பு தொட்டி ஆகிய மூன்று உத்தரவாதங்களை பயன்படுத்தி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை உத்தரவாதம் செய்கிறோம் என்று அவர் கூறினார்.
|