• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-27 10:18:05    
மண்ணுக்கு திரும்பும்வரை

cri

கிழக்கு ஷோ வம்சக்காலம் குறுநிலங்களுக்கிடையிலான இடைவிடாத சண்டைகளும், பிரச்சனைகளும் ஆக்கிரமப்பு நோக்கிலான மோதல்களும் நிறைந்த ஒரு காலக்கட்டமாக இருந்தது.
ஷோவின் மன்னன் பிங்கின் ஆட்சிக்காலத்தில் ஷெங் என்ற குறுநிலப்பகுதி நிலப்பிரபு வூவின் ஆளுகையின் கீழிருந்தது. வூவின் மனைவி வூ ஜியாங். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் வூஷெங்கை ஈன்றபோது வூவின் மனைவி வூஜியாங் ஏறக்குறைய செத்து பிழைத்தாள், கடும் வேதனையை அனுபவித்தாள். எனவே மூத்த மகன் மீது அவளுக்கு ஒரு வித விருப்பமின்மை நிலவியது. மூத்தமகன் வூஷெங் மீதான வூஜியாங்கின் வெறுப்பு, இளைய மகன் துவான் மீதான அதிக பற்றாக மாறியது.
வூ இறந்த பிறகு, வூவின் மூத்தமகன் வூஷெங், ஷெங்கின் நிலப்பிரபுவாக மாறியதோடு, அவனது தந்தையை போன்றே, ஷோ அரசன் பிங்கின் அரண்மனையில் ஒரு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டான். மூத்தவன் வூஷெங் இப்படி பதவியும், பெயரும் பெற்றவனாயிருக்க, இளையவன் ஒன்றுமில்லாமல் சாதாரண ஒருவனாக இருப்பதை கண்ட, தாய் வூஜியாங், மூத்தவனிடம் சென்று புகார் செய்து புலம்பினாள்.
தன் அமைச்சர்களை அழைத்து ஆலோசித்த வூஷெங், அவனது தாய், இளைய மகன் மீதுள்ள பாரபட்ச அன்பின் காரணமாகத்தான் ஜிங்ச்செங்கை அவனுக்கு அளிக்க கேட்கிறாள் என்று அமைச்சர்கள் கூறிய பின்னும், தாயின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட மகனாக, தன் தம்பியான துவானுக்கு, ஜிங்ச்செங்கின் ஆளுகையை அளித்தான்.
ஜிங்ச்செங்கை சென்றடைந்த பின், நேரத்தை வீணடிக்காமல், எதிர்காலத்துக்காக திட்டமிடுமாறு இளையவன் துவானை அறிவுறித்தினாள் தாய் வூஜியாங். நேரம் வரும்போது தலைநகரை தாக்கி அவனே முடிச்சுட்டிக்கொள்ள தான் உதவுவதாகவும் கூறினாள். தாயின் பேச்சைக் கேட்டு துவானும் அவ்வாறே செய்ய, வூஷெங்கின் அமைச்சர்கள் தம்பியான துவானின் நடவடிக்கைகளி பற்றி விமர்சித்தபோதும், தாயின் மனதை புண்படுத்தக்கூடாது என்று ஏதும் செய்யாதிருந்தான் வூஷெங்.
ஆனால் துவானின் நகர்வுகள் கட்டுக்கடங்காமல் போகும் நிலையில் அமைச்சர்கள் சொன்னது போல், அவன் தனக்கே உலை வைக்கும் தம்பியாகிவிட்டதை உணர்ந்து ஒரு ரகசிய திட்டம் தீட்டினான் வூஷெங்.
சில நாட்கள் கழித்து, ஷோ அரசன் பிங்கின் கடமைகளை நிறைவேற்றும் முகமாக வூஷெங் ஷோவின் தலைநகரான லுவோயாங்கிற்கு செல்வது போல் புறப்பட்டு, 200 போர் ரதங்களுடன் சுற்றுவழியில் ஜிங்ச்செங்கிற்கு சென்றான் வூஷெங். ஆனால் மூத்தமகன் வூஷெங் புறப்பட்டதும், இதுதான் நல்ல நேரம் என்றெண்ணி, இளையவன் துவானுக்கு தலைநகருக்கு படைகளை அழைத்து வந்து தாக்கும்படி சொல்லி கடிதமெழுதி தூதனுப்பினாள் தாய் வூஜியாங்.
கடிதத்தை பெற்ற துவான் உடனே தன் படைகளை அழைத்துக்கொண்டு தலைநகரை நோக்கிச் சென்றான். துவான் இப்பக்கம் சென்றதும். மறுபக்கமாக ஜிங்ச்செங்கில் நுழைந்த வூஷெங் அதை கைப்பற்றினான்.
இதை கேள்விப்பட்டபின், துவான் தன் அண்ணனும், ஷெங்கின் பிரபுவுமான வூஷெங்கை எதிர்த்துதான் செயல்படுகிறான் என்றறிந்த துவானின் படையினரில் பாதி பேர், அவனை விட்டு விலகிச்சென்றனர். சரி, இனி ஜிங்ச்செங்கிற்கு திரும்பச் செல்ல முடியாது என்ற நிலையில் இன்ன பிற இடங்களுக்கு எஞ்சிய படையோடு சென்ற துவானை, வூஷெங் துரத்திச் சென்று தோற்கடித்தான். இறுதியில், தன் அண்ணனிடம் அகப்படுவதை விட சாவதே மேல் என்றெண்ணினானோ என்னவோ, என் தாயே என் சாவுக்கு வழிவகுத்துவிட்டாள் என்று அழுதபடி தன் உயிரை மாய்த்துக்கொண்டான்.
வூஷெங் அங்கே வந்தடைந்தபோது, உயிர்நீத்த தன் தம்பியின் உடலைக் கண்டு தாளாத சோகத்தில் கண்ணீர் வழிய அழுது புலம்பினான். தம்பி ஏனடா இப்படி செய்தாய். உன்னை அண்ணன் மன்னித்திருக்க மாட்டேனா? என்று சகோதர பாசத்தில் அழும் தங்கள் தலைவனை கண்டு சூழே நின்றவர்களும் கண்கள் பனித்தனர்.
பின் துவானின் உடலை சோதனை செய்யும் போது, தாயிடமிருந்து வந்த கடிதம் கிடைத்தது. கடிதத்தை தன் தாயிடம் ஒப்படைக்குமாறு பணித்த வூஷெங், தாயை தலைநகருக்கு அருகிலான ச்செங்யிங் என்ற ஒரு சிறிய நகரத்திற்கு வெளியேற்றினான். இருவரும் மண்ணுக்கு அடியில் செல்லும் வரை சந்திக்கமாட்டேன் என்று சூளுரைத்து தாயை நாடுகடத்தினான் மகன் வூஷெங். பின்னர் தலைநகருக்கு திரும்பிய வூஷெங், நாளடைவில் தன் தாய் இல்லாத குறையை உணரத்தொடங்கினான். எப்போதும் பக்தியும், பாசமும்,மரியாதையும் கொண்ட பிள்ளையாக இருக்க நினைத்த வூஷெங், இப்போது மண்ணில் செல்லும் வரை முகத்தில் விழிக்கமாட்டேன் என்று சூளுரைத்த காரணம் மகனின் கடமை மறந்தவனானதை நினைத்து வருந்தினான். சூளுரையை, வாக்கை மீறி தன் தாயை சந்தித்து கடவுளரின் கோபத்திற்கு ஆளாகவும், வார்த்தை தவறி தலைவனாக மக்களின் நம்பிக்கையை இழக்கவும் விரும்பாமல் அமைதியாக வேறு வழியின்றி சோகத்தில் வாடினான் வூஷெங்.


ஒருமுறை ச்செங்யிங்கை சேர்ந்த யிங் கவ்ஷு என்ற அதிகாரி, வூஷெங்கை சந்திக்க வந்தார். கொஞ்சம் மான்கறியும், ஒரு பறவையையும் வூஷெங்கிற்கு அன்பளிப்பாக கொடுத்தார் யிங் கவ்ஷு. என்ன பறவையிது என்று கேட்டபோது, இது ஒரு கெட்ட பறவை பிரபுவே. பகலில் ஏதும் பார்க்கமுடியாமல் இரவில் அனைத்தையும் அறியக்கூடிய இந்த பறவையின் பெயர் ஆந்தை. சிறிதாக இருக்கும்போது தாய் ஊட்ட உணவருந்தும் இந்த ஆந்தை வளர்ந்தபின் தாயையே கொன்று தின்னும். இதை நீங்கள் தண்டிக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவந்தேன் என்றான் யிங் கவ்ஷு.
கவ்ஷு சொல்ல வந்த கருத்தை அறிந்த வூஷெங், அமைதியானான். பின் யிங் கவ்ஷூவை உணவருந்த அழைத்தான். உணவருந்தும் போது யிங் கவ்ஷு இறைச்சித்துண்டு ஒன்றை எடுத்து மடியில் கட்டிக்கொண்டான். அதை கண்ட வூஷெங், ஏன் என்று கேட்டபோது, என் குடும்பம் அவ்வளவு வசதியில்லாதது. இறைச்சி உணவு சாப்பிடுவது குறைவே. இருப்பினும் வயதான என் தாய்க்கு கொடுக்காமல் நான் சாபிட்டால் நான் முழுமையான சுவையும் மகிழ்ச்சியும் உணரமுடியாது என்றான். இதைக்கேட்ட வூஷெங், நீ உண்மையில் அன்பான, பக்தியான மகன். நான் உனக்கு பிரபுவேதான் என்றாலும், என்னால் உன்னை போல் தாய்க்கு அன்பும், மதிப்பும் செலுத்த முடியவில்லை என்றான். ஏன் என்ன ஆனது என்று யிங் கவ்ஷு கேட்க, நடந்த எல்லாவற்றையும் வூஷெங் விளக்கினான்.
யிங் கவ்ஷு, கவலை வேண்டாம் பிரபுவே. நீங்கள் உங்கள் தாயை நினைத்து வருந்துவது போலத்தான் உங்கள் தாயும் உங்கள் நினைவாக இருப்பார். மண்ணிற்கு திரும்பும்வரை முகத்தில் விழிக்கமாட்டேன் என்று நீங்கள் சொன்னதால் சாகும் வரை பார்க்கமுடியாமல் இருக்கவேண்டியதில்லை. வீட்டிற்கு கீழே நிலத்தை வெட்டி சுரங்கம் அமைத்துமே கூட மண்ணுக்கு அடியே செல்லலாம், செத்துதான் மண்ணுக்கடியில் செல்லவேண்டுமென்றில்லை என்றான் கவ்ஷூ. சொன்ன சொல் மாறாமல், சூளுரையும் பொய்க்காமல், தன் தாயை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதை உணர்த்திய கவ்ஷுவை நன்றியோடு பார்த்த வூஷெங், பின்னர் கவ்ஷுவின் யோசனையை பின்பற்றி, நிலத்திற்கு அடியே சுரங்கம் வெட்டி தன் தாயை நேரில் சென்று சந்தித்தான். தன்னுடை செயலை மன்னித்துக்கொள்ளும்படி தாயிடம் வேண்டினான். அதற்கு வூஜியாங், தவறெல்லாம் என்னுடையதுதான். நான் தான் உன் தம்பியை உனக்கெதிராக திருப்பினேன், நான் தான் உன்னை அன்பு செய்யாமல் தவிர்த்தேன், எனவே நீ எந்த தவறும் செய்யவில்லை என்றாள்.