• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-16 19:43:14    
சீனாவின் மாபெரும் கண்டுபிடிப்புகள் (தொடர்ச்சி)

cri
மனித குலத்தின் ஓயாத தேடலின் கனியாக பல கண்டுபிடிப்புகள் இன்று உலகில் காணப்படுகின்றன. பொதுவாக இத்தகைய கண்டுபிடிப்புகள் ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றிலும், அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்களிப்பதை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த பின்னணியில், கடந்த வாரம் சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், சீனாவின் மாபெரும் கண்டுபிடிப்புகள் பற்றி அறிமுகப்படுத்தினோம். திசைகாட்டி, காகிதம் (தாள்), அச்சு, வெடிமருந்து ஆகிய நான்கும் சீனாவின் மாபெரும் கண்டுபிடிப்புகளாக குறிப்பிடப்படுகின்றன.

இவற்றில் திசைகாட்டி மற்றும் காகிதம் பற்றிய தகவல்களை ஏற்கனவே கடந்த நிகழ்ச்சியில் அறியத்தந்ததால், எஞ்சிய இரு சீன மாபெரும் கண்டுபிடிப்புகளான அச்சு மற்றும் வெடிமருந்து பற்றிய தகவல்கள், இப்போது உங்களுக்காக.

அச்சு (அ) அச்சுக்கலை

காகிதத்தை கண்டுபிடித்த சீனர்கள், அதில் எழுதிப்பழகியதோடு, அச்சால் எழுத்துக்களை பதிப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுதமுடியும் என்பார்கள். அதைப்போல் சுவராக காகிதத்தையும் சித்திரமாக எழுத்தையும் சீனர்கள் எழுதமட்டும் செய்யவில்லை, அச்சடிக்கவும் செய்துள்ளனர். காகிதமும், மையும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முத்திரைக்கட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக பரவலாகத் தொடங்கியது. 265 முதல் 420ம் ஆண்டு வரையான ச்சின் வம்சக்காலத்தில் இந்த முத்திரைக்கட்டைகள் வெகுவாக பரவின. இந்த முத்திரைக்கட்டைகளே, செதுக்கிய எழுத்துக்கள் மூலமான அச்சின் முதல் வடிவம் எனலாம். முத்திரைக்கட்டைகளின் வழியில் கொஞ்சம் முன்னேறிய வடிவிலான அச்சுக்கலை, கட்டையச்சுக்கலை எனலாம். 618 முதல் 907ம் ஆண்டு வரையிலான தங் வம்சக்காலத்திலேயே இந்த கட்டையச்சுக்கலை தோன்றியது. இந்த கட்டையச்சுக்கலையின் வித்தை இதுதான். முதலில் எழுதவேண்டிய பகுதி அல்லது எழுத்துக்கள் முதலில் மெல்லிய காகிதத்துண்டில் எழுதப்படும். பிறகு அதன் மீது பசை தடவி, மரப்பலகை ஒன்றில் ஒட்டப்படும். எழுத்துகள் எழுதிய பக்கத்தில் பசை தடவுவார்கள், எழுதப்பட்ட பக்கத்தின் மறுபுறத்தில் அல்ல. அதன் பிறகு அந்த எழுத்து வடிவங்களை தவிர்த்த இடங்களை செதுக்கி நீக்கி விடுவார்கள். ஆக எழுத்துக்களின் வார்ப்பு போல், எழுத்துக்களின் செதுக்கல் அமையும். இந்த மரப்பலகையே கட்டையச்சாக அமையும். பிறகு இதன் மீது மை தடவி காகிதத்தின் மீது பதிய வைத்தால், அழகான எழுத்துக்கள் அச்சாகி விடும். ஆனால் இது கொஞ்சம் சிக்கலான வேலை. காரணம் ஒவ்வொரு பக்கத்துக்கும் புதுப்புது மரப்பலகையில் எழுத்துக்களை செதுக்கவேண்டியிருந்தது. ஒரு புத்தகத்தை இந்த முறையில் அச்சடிக்க அதிக நேரமும், ஆற்றலும், பொருட்களும் தேவைப்பட்டன. ஆனால் காலப்போக்கில் இந்த கட்டையச்சுக்கலை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் கட்டையச்சுக்கலை கொரியா, ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அறிமுகமானது.

கட்டையச்சுக்கலையில் பல குறைபாடுகள் இருந்தன. ஒரு முறை பயன்படுத்தினால் எழுத்துக்கள் உள்ள மரப்பலகைகள் மறுபடி பயன்படுத்த முடியாது. காரணம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பக்கமாக உள்ள ஒரு பலகையை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாதல்லவா. மேலும் இந்த பலகைகளில் எழுத்துக்களை செதுக்கும் போக்கில் ஏதேனும் ஒரு சிறு குறை இருப்பினும், அந்த பலகையே பயனற்றதாகிப்போகும். உலகின் மிகப்பழமையான புத்தகமான வைரசூத்திரம் எனும் புத்தகத்தின் முகப்பு பட்டுப்பாதையின் வழியேயுள்ள துன்ஹுவாங் குகையில் கண்டெடுக்கப்பட்டது. சுருளேடு போன்ற இந்த புத்தகம், 868ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்டது. இதுதான மிகப்பழமையான மரப்பலகை செதுக்கல் மூலமான கட்டையச்சுக்கலையால் உருவான புத்தகமாகும்.

மாற்றிப்பொருத்தும் அச்சுக்கலை

கட்டையச்சுக்கலை நீண்ட நேரம் பிடிப்பதாகவும், அதிக செலவு பிடிப்பதாகவும் அமைந்தது. முன்னர் குறிப்பிட்டது போல், ஒரு குறிப்பிட்ட மரப்பலகை, குறிப்பிட்ட ஒரு புத்தகத்தின், குறிப்பிட்ட ஒரு பக்கத்துக்கு மட்டுமே பயன்படும், அதன் பின் அது வீணே. ஆனால் கட்டையச்சுக்கலைக்கு அடுத்ததாக வந்த மாற்றிப்பொருத்தும் அச்சுக்கலை, இந்த குறைபாடுகளை நீக்கியது.

மாற்றிப்பொருத்தும் அச்சுக்கலை என்பது எழுத்துக்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்து பொருத்தக்கூடிய தன்மையை குறிக்கிறது.

960 முதல் 1279ம் ஆண்டுவரையான சுங் வம்சக்காலத்தில், பி ஷெங் என்பவர் இருந்தார். இந்த பி ஷெங் சீன மொழியில் தனித்தனி சித்திர வடிவ எழுத்துக்களை அல்லது அசைகளை களிமண்ணால் வடித்துக்கொண்டார். தனிப்பட்ட ஒரு எழுத்தின் பல களிமண் வார்ப்புகளை செய்துகொண்டார். களிமண் எழுதுக்களை தீயில் வாட்டி சுட்டு உறுதியானதாக்க, அவை எங்கு எப்படி வேண்டுமோ அதைப் போல பல வார்த்தைகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. இரும்புத்தகட்டில் பசைகொண்டு ஒட்டப்பட்ட இந்த களிமண் எழுத்துக்கள் எளிதில் நீக்கப்படக்கூடியதாக வசதியாக இருந்தன. ஆக ஒரு பக்கத்தை அச்சடிக்க, தேவையான எழுத்துக்களை கோர்த்து பக்கத்தை உருவாக்கி, அச்சடித்த பின் மறுபடி எழுத்துக்களை அகற்றி, அடுத்த பக்கத்துக்கு தேவையான வார்த்தைகளை உருவாக்கி அச்சடிக்க முடிந்தது. கிபி 1000 ஆண்டு வாக்கில், சுருள்வடிவ ஏடுகளுக்கு பதிலாக புத்தக வடிவங்கள் பரவத்தொடங்கின. 1320ம் ஆண்டு வாக்கில் இரு வண்ண அச்சுக்கலையும் அறிமுகமாகி பரவியது. கறுப்பு, சிவப்பு நிறங்களில் எழுத்துக்கள் அச்சாகின. இதன்பின் இந்தக்கலை கொரியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் ஐரோப்பாவுக்கு பரவியது. 1440ம் ஆண்டில் ஜெர்மனியின் ஜோஹானெஸ் குட்டன்பர்க் உலோக அச்சுக்கலையை கண்டுபிடித்தார். அதன்பின் அச்சுக்கலை வேகமான வளர்ச்சியை கண்டது.