கோமகன் அழைத்ததால் வந்த யான் யிங், அன்பளிப்பு அளிக்கப்படப் போவதை அறிந்து வேண்டாமென மறுத்தார். மேன்மை தங்கிய கோமகனே, நான் முதல் மூன்றாண்டுகாலம் துங்கேவின் ஆளுனராக ஆட்சி செய்தபோது, சாலைகள் போட்டேன், பொதுமக்களின் வசதிகளை அதிகரிக்க வழி செய்தேன், அரசிலிருந்த ஊழலை ஒழித்தேன். இதனால் ஒரு சில வட்டத்தினரின் பகைக்கு ஆளேனேன். சிக்கனமாக செல்வழித்து வாழவும், பெற்றோரை மதித்து நடத்தவும் மக்களை ஊக்கப்படுத்தினேன். குற்றவாளிகளுக்கு தண்டனையளித்தேன். சட்டமீறல் செய்வோர் என்னை வெறுத்தனர். செல்வாக்கும், செழிப்பும் கொண்டோருக்கு ஒரு முகம், வசதியற்றவர்களுக்கு ஒரு முகம் என்றல்லாமல் அனைவரையும் சமமாகவே நடத்தினேன் எனவே செல்வச் செருக்குற்றோருக்கு நான் தடைக்கல்லானேன். என்னை சுற்றியிருந்தோர் ஏதாவது என்னிடம் கேட்டால், அவசியம் இருந்தால் மட்டுமே அதை அனுமதித்தேன் இல்லையெனில் கேட்டதை மறுத்தேன். எனவே சுற்றியிருந்தோரும் கோபமுற்றனர். சில வேளைகளில் என்னை விட அதிகாரத்தில் உயர்ந்தோர் வரும்போது அவர்களை உபசரிக்கும் நேரத்தில், பொதுவாக எவ்வளவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்ததோ அவ்வளவே செய்தேன், ஆடம்பரமான விருந்தும், ஆட்டம் பாட்டமுமாக கேளிக்கையில் அவர்களை மூழ்கச் செய்யவில்லை. எனவே அவர்களுக்கும் பிடிக்காதவனானேன். இதனால்தான் என்னை விரும்பாத, வெறுத்த, என் மீது ஆத்திரம் கொண்டவர்கள் அவதூறு பரப்பி குரல் எழுப்பினர். அந்த ஆர்பாட்டக்குரல் உங்கள் செவிகளுக்கும் எட்டின. அதற்கு பின்பான இந்த மூன்றாண்டுகாலத்தில் என் ஆட்சி வழிமுறையை மாற்றிக்கொண்டேன். மூன்றாண்டுகள் ஊழலுக்கு தடையில்லை, பொதுச்சேவைகளுக்கு இடமில்லை, சிக்கனச் செலவு பற்றிய அறிவுறுத்தலுமில்லை, சட்டத்தை மீறியோருக்கு தண்டனையுமில்லை. என்னை சுற்றி இருந்தோர் கேட்டதை எல்லாம் புன்சிரிப்போடு செய்தேன், செய்ய அனுமதித்தேன். செல்வந்தர்களும், வசதி படைத்தோரும் தனி மரியாதை அளிக்கப்பட்டனர். உயரதிகாரிகள் வந்தபோது உல்லாசமாக இருக்க பேரளவு செலவழித்தேன். இதனால்தான் என்னை பற்றி அவர்கள் அனைவரும் பெருமையாகவும், உயர்வாகவும் பேசத் தொடங்கினர். அந்த புகழொலிதான் உங்கள் காதுகளை வந்தடைந்தது, நீங்களும் என்னை அழைத்தீர்கள். உண்மையை சொன்னால், என்னுடைய முதல் மூன்றாண்டுகால சேவைக்குத்தான் நீங்கள் பரிசளித்து, மதிப்பு பாராட்டியிருக்க வேண்டும். அடுத்த மூன்றாண்டுகள் செய்த செயல்களுக்காக தண்டிக்க வேண்டும். எனவே நீங்கள் எனக்கு தற்போது அளிக்கும் வெகுமதியும், பரிசும் எனக்கு உரியது அல்ல என்று கூறினார். இதையெல்லாம் செவிமடுத்த கோமகன் ஜிங், யான் யிங் மீது மதிப்பும், பெருமையும் கொண்டதோடு நாட்டின் தலைமையமைச்சராக பதவியளித்து மகிழவும் செய்தார். யான் யிங் தலைமையமைச்சரான மூன்றே ஆண்டுகளில் ச்சி நாடு செழிப்புள்ள நாடாக மாறியது.
|