வணக்கம். ஜுலைத் திங்கள் முதல் நாள் எனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளாகும். நேற்று பிற்பகல் 6 மணி முதல் ஓய்வு எடுத்ததால் காலையில் நல்ல உடல்நலன் இருந்தது. லாசாவில் தங்கியிருக்கும் விடுதியில் சுயசேவை மூலம் சாப்பிடும் வசதி, பிரதிநிதிக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளதால், எனக்கு விருப்பமான உணவு வகைகளை தேர்வு செய்து சாப்பிட்டு மகிழ்ந்தேன். குறிப்பாக, சாப்பிடுவது என்ன உணவு என்பது முக்கியமல்ல, வாழும் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக திபெத் பாணியிலான அனைத்து அசைவ உணவு வகைகளையும் சாப்பிட்டு மகிழ்ந்தேன். திட்டப்படி, திபெத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்ததால் இன்று காலையிலும் ஓய்வெடுத்தேன். மதிய உணவிற்குப் பின், பிற்பகல் 3.30 மணிக்கு நண்பர் வாணி மற்றும் குழுவினருடன் லாசா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோகாங் கோயிலுக்கு சென்றேன். இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கோயிலினுள் நுழைந்ததும், 1300 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றுவிட்ட மனஉணர்வு ஏற்பட்டது. காரணம், பழமையான சூழ்நிலை அங்கே இன்னும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எவ்விதப் புதுப்பித்தல் பணியும் மேற்கொள்ளப்படாமல், பண்டைக்கால சூழ்நிலை அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோயிலைத் தாங்கி நிற்கும் அனைத்துத் தூண்களும் மரத்தால் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு அங்குலத்திலும் வண்ணப்பூச்சுக்கள் மற்றும் அழகான ஓவியங்கள். தமிழக்க் கோயில்களில், பிரகாரத்தின் பக்கவாட்டுப் பகுதியில் நாயன்மார்களின் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது போல, இக்கோயிலில் திபெத் புத்த மதத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டோரின் மிகப் பெரிய உருவச் சிலைகள் வண்ணமயமாக வைக்கப்பட்டுள்ளன.
திபெத் புத்த மதத்தை வழிபடுவோருக்கான முக்கிய கோயிலான ஜோகாங் கோயில், துறவியர் பயிற்சிப் பள்ளியாகவும் செயல்படுகிறது. சாக்கியமுனியின் 8 வயது, 12 வயது மற்றும் 25 வயது சிலைகளில் இங்கே சாக்கிய முனியின் 12 வயது சிலை கண்கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 11 முகங்களும், 1000 கைகளும் உடைய புத்தர் சிலையும் மனதை மயக்கும் விதத்தில் இங்கே கம்பீரமாக வீற்றிருக்கிறது.
இக்கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது தளத்திற்கு சென்று அங்கிருந்தவாறு சுற்றுப்புறக் காட்சியையும், போத்தலா மாளிகையையும் நாங்கள் கண்டு ரசித்தோம்.
பின்னர், இக்கோயிலைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள பண்டைக்கால பார்கோ கடைவீதிக்கு சென்றோம். கோயிலைச் சுற்றி வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஏராளமான கடைகளில் கலைப் பொருட்கள் ஏராளமாக விற்கப்படுகின்றன. திபெத்தின் பாரம்பரியப் பொருட்கள் மட்டுமின்றி, இந்திய மற்றும் நேபாளப் பொருட்களும் இங்கே காணப்படுகின்றன. இவ்வீதி, கோயிலைச் சுற்றிவரும் சுற்றுப் பிரகார வீதி போலவும் பயன்படுத்தப்படுகிறது. திபெத் புத்த மதத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட பல பேர் வழிபாடு செய்தவாறு இந்த வீதியில் நடந்து வருவதைக் கண்டேன். இந்த வீதியின் கடைகள் உள்ள கட்டிடங்கள் யாவும் மிக மிகப் பழமையானவை. நேரம் போனதே தெரியாமல், இவ்வீதியை சுற்றிப் பார்த்துவிட்டு குழுவினருடன் 6 மணிக்கு புறப்பட்டு விடுதி திரும்பினேன். இரவு உணவுக்குப் பின், போத்தலா மாளிகையின் தோற்றத்தை இரவில் கண்டுகளிக்க 9 மணிக்கு புறப்படுவேன். மீண்டும் நாளை சந்திப்போம். வணக்கம்.
|