• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-02 23:24:30    
மனதை மயக்கும் போதல மாளிகை

cri

 ஜுலைத் திங்கள் 2 ஆம் நாள் எனது சீனப் பயணத்தின் நான்காவது நாளாகும். இன்றைய காலை உணவுக்குப் பின்னர், போதலமாளிகையைக் கண்டுகளிக்க நண்பர் வாணியுடன் காலை 9.00 மணிக்கு புறப்பட்டேன். வாழ்நாளில் ஒருமுறையேனும் காண வேண்டும் என இளம்வயது முதலே நான் விரும்பிய இடங்களுள் போதல மாளிகையும் ஒன்றாகும். தனது வடிவத்திலும், அளவிலும், தோற்றத்திலும் எழுச்சிமிக்கதாய் தோற்றமளிக்கும் போதலமாளிகை உச்சியை படிக்கட்டுகள் வழியாக சென்றடைந்தோம். அருகே செல்ல செல்ல, இக்கட்டிடம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்து இயற்கையாகவே அமைந்த்தா என்ற பிரமிப்பு மனதுள் ஏற்பட்டது. 13 மாடிகளைக் கொண்ட போதல மாளிகையின் உயரம் 115.703 மீட்டராகும். 13 மாடிகளில் கடைசி ஐந்து மாடிகள் மரத்தால் உருவாக்கப்பட்டவை. இக்கட்டிடம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகை, தலாய் லாமாவின் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இடமாகவும், சிவப்பு மாளிகை தலாய்லாமா மத நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இடமாகவும் செயல்பட்டிருக்கிறது. போதல மாளிகை ஏழாவது நுற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும், தற்போதைய வடிவில் 5வது தலாய்லாமாவால் கி.பி.17வது நுற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது. தலாய் லாமா கல்வி கற்றுக் கொள்ளும் அறை, படுக்கை அறை போன்ற இடங்களுடன் மாநில நிலைக்கு மேற்பட்ட அதிகாரிகளை சந்திக்கும் மண்டபத்தையும் பழைய வடிவிலேயே காண முடிந்த்து. போதல மாளிகை 5வது தலாய் லாமாவால் கட்டப்பட்டதால் இங்கே 4 தலாய் லாமாக்களின் உடல் அடக்கம் செய்யப்படவில்லை. எஞ்சிய தலாய் லாமாக்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, அவ்விடத்தின் மேலே தங்கத்தாலும், விலை உயர்ந்த கற்களாலும் பெரிய நினைவு கோபுரங்கள் எழுப்ப்ப்பட்டுள்ளன. இத்தகைய 5 கோபுரங்களை இங்கே நாங்கள் கண்டோம். 5வது தலாய் லாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோபுரம் 12.6 மீட்டர் உயரமும், 7.65 மீட்டர் அகலமும் உடையது. இக்கோபுரத்தை உருவாக்க 3721 கிலே தங்கமும், 10000த்திற்கும் அதிகமான விலை மதிப்பற்ற கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதிலிருந்து இதன் அழகை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் பிறிதொரு இடத்தில் 3700க்கும் அதிகமான புத்தர் சிலைகள் உள்ளன. தங்கம் போன்ற விலை மதிப்பு மிக்க உலோகங்களால் அவை உருவாக்கப்பட்டுள்ளன. அன்றி, இப்பிரமாண்டமான மாளிகையின் ஒவ்வொரு அங்குலப் பகுதியும் பல்வேறு வண்ணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

அக்காலத்திலேயே துல்லியமான முறையில் வானிலையை அறிவிக்கும் மிகப் பெரிய உலோக்க் கருவி ஒன்றையும் இங்கே நான் கண்டேன். அக்கருவியை இப்போது கூட பயன்படுத்தலாம் என வழிகாட்டி கூறியபோது பெரும் வியப்படைந்தேன். மேலும் துறவியர் கல்வி பயிலும் மண்டபம், தானியங்கள் சேமித்து வைக்கும் இடம், அக்கால சிறைச்சாலை மற்றும் மாநில நிலை அதிகாரி வசித்த வீடு போன்றவற்றையும் நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம்.
திபெத்தில் பயணம் மேற்கொள்வதே ஒரு சாகசப் பயணம்தான். போதல மாளிகை பார்வையிட்டதோ அச்சாகசப் பயணத்தின் உச்சகட்டமாக அமைந்த்து. ஒப்பீட்டு அளவில், மனித ஆற்றலால் உருவாக்கப்பட்ட இடங்களில் போதல மாளிகைக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் அமைப்பு, கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. மலையின் மேலே அமைக்கப்பட்டுள்ள போதல மாளிகையின் உள்ளே எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண ஓவியங்கள், புத்தர் சிலைகள் மற்றும் அழகான பட்டுத் துணிகள். மனித குலத்தின் உழைப்பு மற்றும் கற்பனை ஆகியவற்றின் உச்சகட்ட அடையாளமாக போதல மாளிகை அமைந்துள்ளது. போதல மாளிகையின் கம்பீரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அகலாத நிலையிலேயே விடுதி திரும்பினேன். மதிய உணவிற்கு பின் குழுவினருடன், லாசா நகரின் சாங்குவான் பிரதேசத்தின் இரண்டாவது தேசிய இன துவக்கப்பள்ளிக்கு சென்றேன். 27 ஆசிரிய பெருமக்கள் பணிபுரியும் இப்பள்ளியில் சுமார் 1400 இளம்சிறார்கள் துவக்க நிலைக் கல்வியை பெறுகின்றனர். சீன மொழி, திபெத் மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் இங்கே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. திபெத் மக்களின் கல்வி அறிவை உயர்த்த திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசும், சீன நடுவண் அரசும் மேற்கொள்ளும் முயற்சிகளின் சீரிய வடிவங்களை இங்கே கண்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன்.

பின்னர், திபெத் பாரம்பரிய மருந்து தயாரிக்கப்படும் ஆலை ஒன்றிற்கு சென்றோம். திபெத் பீடபூமியில் விளையும் பல்வகை தாவரங்களைக் கொண்டு பாரம்பரிய மருந்து தயார் செய்யும் முறையை நேரில் பார்வையிட்டோம். அன்றி, 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சிகிச்சை முறைகளின் வரைபடங்கள் அதிசயிக்க வைத்தன. திபெத் பாரம்பரிய மருந்துகளின் மணத்தை சுவாசித்தவாறே பண்டைய மருந்து தயாரிக்கப்படும் வழிமுறைகள், பழங்கால சிகிச்சைக் கருவிகள், ஏராளமான நிழற்படங்கள் மற்றும் மருந்து விற்பனை நிலையம் ஆகியவற்றை கண்டபின் விடுதி திரும்பினோம்.

மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி. வணக்கம்.
லாசாவிலிருந்து விடைபெறுவது எஸ்.செல்வம்.