• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-03 17:24:55    
திபெத் நண்பர்களுடன்

cri

ஜுலைத் திங்கள் 3 ஆம் நாள் எனது சீனப் பயணத்தின் 5வது நாளாகும். இன்றைய நாளின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் முன், நேற்றிரவு நடைபெற்ற விருந்து பற்றிய தகவலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். நேற்று, அதாவது ஜுலைத் திங்கள் 2 ஆம் நாள் இரவு உணவிற்குப் பின், சீன வானொலி நிலையம் மற்றும் சீன மத்திய வானொலி நிலையம் ஆகியவற்றின் லாசா செய்தி மையம் வழங்கிய விருந்தில் நண்பர்களுடன் கலந்து கொண்டேன். இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை மிகவும் இன்பமயமான முறையில் இவ்விருந்து நடைபெற்றது.

திபெத் செய்தி மையத்தின் 9 பணியாளர்களும் மற்றும் அதன் தலைவரும் எங்களை மிகவும் சிறப்பாக வரவேற்று உபசரித்தனர். பணியாளர்கள் ஒன்றிணைந்து என்னை வரவேற்கும் இந்தியப் பாணி பாடல் ஒன்றை பாடிய போதிலும், அதன் தலைவர் இமயமலையில் செல்வோம் என்ற தலைப்பிலான பாடலை என் முன் நின்று பாடிய போதும் மனம் நெகிழ்ந்து போனேன்.

நண்பர்களின் கோரிக்கையை ஏற்று நானும் கூட வல்லவனுக்கு வல்லவன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்... என்ற பாடலை பாடியதுடன், திபெத் பாடலுக்கு நண்பர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தேன். உணர்வுப்பூர்வமான முறையில் சிங்காய் திபெத் இருப்புப் பாதையை போற்றும் பாடலை அனைவரும் இணைந்து எழுச்சியுடன் பாட இரவு விருந்து இனிதே நிறைவடைந்தது.

இரவு ஓய்விற்குப் பின், 3 ஆம் நாள் காலையில் லாரு சதுப்பு நிலத்திற்கு சென்றோம். பரந்து விரிந்த இச்சதுப்பு நிலம், எங்கும் பசுமைமயமாக காட்சியளித்த்து. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தனிச்சிறப்பு மிக்க நீர்வாழ் தாவரங்கள் பல இங்கே உள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டு, தனியாருக்கு சொந்தமான மாடுகள் இங்கே மேய அனுமதிக்கப்படுகின்றன. லாசா நகரின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருக்கவும், நகரின் காற்று நிலையை மேம்படுத்தவும் இச்சதுப்பு நிலப் பிரதேசம் பெரும் உதவியாக இருக்கிறது.

பின்னர் அங்கிருந்து, திபெத் அருங்காட்சியாகம் சென்றோம். மிகப் பெரிய கட்டிடத்தில் திபெத் பிரதேசத்தின் பண்டைக் கால பொருட்கள் வரிசையாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு நிலை அதிகார முத்திரைகள், சீட்டு குலுக்கி அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் பெரிய பாத்திரம், 1954 ஆம் ஆண்டில் தலைவர் மாவ் சே துங் அவர்கள் தலாய் லாமாவுக்கு எழுதிய கடிதம், 7 ஆம் மற்றும் 8 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த தாங்கா ஓவியங்கள், பல்வேறு போர்க் கருவிகள், இசைக் கருவிகள், பல்வேறு தேசிய இனங்களின் தனிச்சிறப்பு மிக்க ஆடை அணிகலன்கள், உலோகச் சிலைகள், விலங்குகளின் தோலால் அமைக்கப்பட்ட வித்தியாசமான படகு, எருமைக் கம்பளியால் உருவாக்கப்பட்ட கூடாரம், பல்லாண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள் என பண்டைக்கால பொருட்களை இங்கே கண்டு மகிழ்ந்த பின், மதிய உணவிற்காக நண்பர்களுடன் விடுதி திரும்பினேன்.

சிறிது ஓய்வுக்குப் பின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டோம். சரியாக பிற்பகல் 3.40 மணிக்கு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மையத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழா துவங்குவதற்கு முன் அருமையான திபெத் என்னும் பொது அறிவுப் போட்டி பற்றிய செய்திப்படம் ஒளிபரப்பப்பட்டது.  அதில், சிறப்புப் பரிசு பெற்ற நேயர்களின் நிழற்படங்கள், நேயர்களின் சிறந்த கருத்துக்கள் ஆகியவை இடம்பெற்றன. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஏழு முக்கிய தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசு பெற்ற ஏழு நேயர்களுக்கும் பரிசினை வழங்கினர். திபெத் தொலைக்காட்சி நிலையத்தின் தலைவரிடமிருந்து மகிழ்ச்சியுடன் நான் பரிசினை பெற்றுக் கொண்டேன். நிகழ்ச்சியில் பேசிய திபெத் தன்னாட்சிப் பிரதேச கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர், திபெத்தின் உண்மையான வளர்ச்சி பற்றிய செய்திகளை நேயர்கள் பிறரிடம் எடுத்துக் கூற வேண்டும் என கேட்டுக் கொண்டார். சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநரும் விழாவில் உரை நிகழ்த்தினார். விழா நடைபெறும்போது இந்தியா திரும்பிய பின், திபெத்தின் உண்மையான வளர்ச்சி பற்றி பலரிடம் எடுத்துரைக்க வேண்டும் என உறுதி என் மனதுள் எழுந்தது. சீன வானொலி நிலையம் மற்றும் திபெத் தன்னாட்சிப் பிரதேச கம்யூனிஸ்ட் கட்சியின் விளம்பரத் துறை ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த வண்ணமயமான விழா 5.00 மணிக்கு நிறைவடைந்தது. இன்று இரவு திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு வழங்கும் விருந்தில் நண்பர் வாணியுடன் கலந்து கொள்வேன்.

நாளை, நான்கு மணி நேர பயண தொலைவில், குளிர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நம்சோ ஏரியை காணச் செல்வேன். நன்றி. வணக்கம். லாசாவிலிருந்து எஸ்.செல்வம்.