வணக்கம். ஜுலைத் திங்கள் 11 ஆம் நாள், எனது சீனப் பயணத்தின் 13 ஆம் நாளாகும். நேற்று பிற்பகல், தமிழ்ப்பிரிவுத் தலைவர் தி.கலையரசி அவர்களுடன் நேயர் தொடர்பு பணியகத்தின் தலைவரைச் சந்தித்தேன். அவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பயணம் செய்தவராவார். அவருடன் சுமார் 20 நிமிடங்கள் பேசி மகிழ்ந்தேன். பின்னர், வாணியுடன் ஐந்தாவது தளத்தில் இருக்கும் சீன வானொலி ஆங்கிலப் பிரிவுக்குச் சென்று Yingliyang குழுவில் இடம்பெற்றிருக்கும் நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தேன். தமிழ்ப்பிரிவிலிருந்து விடைபெறும்போது அங்கே பணியாற்றும் நண்பர்கள் அனைவரும் வாசல் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தபோது உண்மையில் என் மனம் நெகிழ்ந்தது. சீன வானொலி தமிழ்ப்பிரிவின் உயர்வுக்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்னும் மனஉறுதியும் வலுப்பட்டது. தொடர்ந்து, என்னையும் கிளிட்டசையும் கலையரசி அவர்கள், தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்களுடன் அங்கே அவரது கணவரும் சேர்ந்து கொள்ள நால்வரும் ஒரு உணவு விடுதிக்குச் சென்றோம். அங்கே, கலையரசியும் அவரது கணவரும் எங்களுக்கு சிறப்பான இரவு விருந்து அளித்தனர். அப்போது, பீகிங் வாத்து உணவு தயார் செய்யப்படும் முறையை அங்கே நேரில் கண்டேன். இன்றைய விருந்தில் இடம்பெற்ற பீகிங் வாத்து மற்றும் மான் குதிகாலின் பின்புறப் பகுதியில் உள்ள ஒரு வகைக் கறி ஆகியவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வயிறார சாப்பிட்டு மகிழ்ந்தேன். இரவு ஓய்வுக்குப் பின், இன்று காலை, கலைமகளுடன் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பறவைக்கூடு மற்றும் நீர்க் கன சதுர மையம் ஆகியவற்றை பார்வையிட்டேன். தொலைக்காட்சியில் பார்த்ததைவிட, நேரில் பார்க்கும்போது பறவைக்கூட்டின் பிரமாண்டம், பெரும் வியப்பைத் தந்தது. அங்கிருந்து நேரடியாக பிற்பகல் ஒரு மணிக்கு மைக்கேல் வீட்டிற்கு சென்றோம். மைக்கேல் தம்பதியர் வழங்கிய சிறப்பான விருந்தில் தி.கலையரசி, கலைமகள், வாணி மற்றும் கிளிட்டஸ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அங்கே மனம்விட்டு பேசி மகிழ்ந்தபின், மீண்டும் ஒருமுறை சீன வானொலி நிலையத்திற்கு வந்தேன். இன்று இரவு பெய்ஜிங் நேரப்படி 11.30 மணிக்கு நான் சீனாவை விட்டு புறப்படுவேன். இத்தனை நாட்களாக என் பயண அனுபவத்தை நாள்தோறும் கேட்ட நேயர்களுக்கும், தொலைபேசி மூலம் என் நலன் விசாரித்த பலப்பல நேயர் நண்பர்களுக்கும் திபெத்தில் பயணம் செய்யும் மிக அரிய வாய்ப்பை வழங்கிய சீன வானொலி தமிழ்ப்பிரிவினருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். சீன வானொலி நிலையத்திலிருந்து எஸ்.செல்வம்.
|