ஹான் வம்ச பேரரசர் வென் அவர்களுக்கு இரண்டு தலைமையமைச்சர்கள் உண்டு. மூத்த தலைமையமைச்சரின் பெயர் ஷோ போ, இளைய தலைமையமைச்சரின் பெயர் சென் பிங். ஒரு நாள் அரசவையில் இருந்தபோது, பேரரசர் மூத்த தலைமையமைச்சர் ஷோ போவை பார்த்து, தலைமையமைச்சரே, கடந்த ஓராண்டாக நாட்டில் எத்தனை வழக்குகள் தீர்வுக்காக மன்றத்தில் உள்ளன என்று வினவினார். தலைமையமைச்சர் ஷோ போவுக்கு பேரரசர் வென், திடீரென இப்படி கேட்டதும், ஒன்றும் ஓடவில்லை, வருத்தத்தோடு, "தெரியாது அரசே" என்றார்.
சரி இவ்வாண்டின் தானியம் மற்றும் பண வருவாய் மற்றும் செலவினங்கள் என்ன என்று கேட்டார் பேரரசர். மூத்த தலைமையமைச்சருக்கு தலை சுற்றி, வேர்க்கத் தொடங்கியது. திடீரென பேரரசர் இப்படி கேள்வி கேட்பார் அதுவும் இது போன்ற விபரங்களையெல்லாம் கேட்பார் என்று அவர் நினைத்தாரா என்ன. எனவே வியர்வை வடிய, மன்னிக்கவும் அரசே, எனக்கு தெரியாது என்று பதிலளித்தார் ஷோ போ. பேரரசர் உடனே இளைய தலைமையமைச்சரான சென் பிங்கை பார்த்து அதே கேள்விகளை கேட்டார். உடனே சென் பிங், அரசே அவற்றை கவனிக்க பொறுப்பான தனி அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று பதிலளித்தான். என்ன அதிகாரிகள் என்று பேரரசர் வியப்போடு கேட்க. " பேரரசர் அவர்களுக்கு நாட்டில் எத்தனை வழக்குகள் கையாளப்படுகின்றன என்ற தகவல் வேண்டுமாயின், அதற்கு பதில் தரவேண்டியது நீதி அமைச்சகம். தானியம் மற்றும் பணம் பெற்றி தெரியவேண்டுமெனில் நாம் கருவூலம் மற்றும் வேளாண் துறைகளுக்கு பொறுப்பான அமைச்சுகளை கேட்டு தெரிந்துகொள்ளமுடியும்" என்று பதிலளித்தார் பேரரசர் வென், அதை கேட்டு, சரி இதையெல்லாம் கவனிக்க இந்த அமைச்சகங்கள் இருந்தால், உங்கள் கடமைதான் என்ன, உங்கள் பொறுப்புதான் என்ன? என்று கேட்டார். தலைமையமைச்சர் சென் பிங், சற்றும் அசராமல், அரசே, தங்களின் தலைமையமைச்சர் என்ற பெருமை எனக்குண்டு. ஒரு தலைமையமைச்சரின் கடமை, நாட்டை நன்றாக ஆட்சி செய்து, நிர்வகிக்க, அரசருக்கு உதவியாய் நிற்பதேயாகும். வெளியே, மற்ற நாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் இடையிலான உறவுகளை நான் கவனித்துக் கொள்கிறேன். உள்ளே, பல்வேறு அமைச்சகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தங்களது கடமைகளை ஒழுங்காக செய்வதை உறுதி செய்து மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கவனமாக முயற்சி செய்கிறேன், இதுதான் என் கடமை, பொறுப்பு" என்றார். தலைமையமைச்சர் சென் பிங் மிகவும் அழகாக அளித்த பதில், பேரரசர் வென்னுக்கு மன நிறைவை தந்தது.
அதற்கு பின், அரசவையிலிருந்து வெளியே வந்தபோது மூத்த தலைமையமைச்சரான ஷோ போ, இளைய தலைமையமைச்சரான சென் மிங்கை பார்த்து, "ஏன் நீ முதலிலேயே, பேரரசரின் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று எனக்கு சொல்லவில்லை" என்று கேட்டார். அதற்கு சென் மிங், ஒரு தலைமையமைச்சர் என்ற வகையில், உங்களுக்கு உங்களுடைய கடமைகளும், பொறுப்புகளும் என்னவென்பது தெரிந்திருக்கவேண்டும் என்று புன்சிரிப்போடு கூறியதோடு, ஒருவேளை பேரரசர் சாங் ஆன்னின் தலைநகரில் மொத்தம் எத்தனை திருடர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டால் அதற்கு விடை சொல்வீர்களா என்று கேட்டார். மூத்த தலைமையமைச்சரான ஷோ போவுக்கு உண்மையில் தனக்கு தலைமையமைச்சராக இருக்கும் தகுதி இல்லை என்று புரிந்தது. பின்னாளில் உடல் நலத்தை காரணமாகக் காட்டி தலைமையமைச்சர் பதவியிலிருந்து ஷோ போ விலகிக்கொண்டார். திறமையும் மதி நுட்பமும் கொண்ட மற்ற தலைமையமைச்சர் சென் மிங்கிற்கு இடைஞ்சலாக இல்லாது, விலகிக்கொண்டார். அதற்கு பின் பேரரசர் வென்னின் ஒரே தலையமைச்சராக சென் மிங் சிறப்புடன் பணியாற்றினார்.
|