• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-17 22:41:53    
தொழில்நுட்ப நகரமான சாங்ச்சுன்

cri
சீனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஜீலின் மாநிலத்தின் தலைநகரான சாங்ச்சுன்னிலிருந்து உங்கள் தமிழ்ப்பிரிவின் பணியாளர்கள் சிவகாமி மற்றும் க்ளீட்டஸ்....

ஜூலை 16, நிலவில் மனிதன் முதன் முதலில் காலடி பதித்ததாக நாம் அறிந்த அமெரிக்க நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவுக்கு பயணித்த அதே நாளில் நாங்களும் வடகிழக்குச் சீனாவிலான எமது பணிப்பயணத்தை ஆரம்பித்தோம். அதே நாள் நள்ளிரவு வாக்கில் ஜீலின் மாநிலத்தின் சாங்ச்சுன் வந்தடைந்த நாங்கள் ஜூலை 17ம் நாளன்று இந்நகரில் எங்கள் கடமையை துவக்கினோம். இன்று முக்கியமாக சாங்ச்சுன்னிலுள்ள ஜிங்யுவே பொருளாதார மண்டலத்துக்கு அருகில் நடைபெற்று வரும் 6வது சாங்ச்சுன் சர்வதேச சீருந்து கண்காட்சியையும், சாங்ச்சுன் காவ்ஷிங் சிறப்பு குழாய் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையையும், ஹுங்தா உயர் தொழில்நுட்ப குழும நிறுவனத்தையும் சென்று பார்வையிட்டோம்.

இன்று காலை 6வது சாங்ச்சுன் சர்வதேச சீருந்து கண்காட்சியை பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய அனுபவம் என்றே சொல்லவேண்டும். நிதி நெருக்கடி, மந்தமான பொருளாதார வளர்ச்சி என்று உலகின் பல நாடுகள் நெற்றியை சுருக்கி, கவலையில் இருக்க சீனா தன்னுடைய இவ்வாண்டு இலக்கான 8 விழுக்காட்டு வளர்ச்சி என்பதை நிறைவேற்றும் ஆக்கப்பூர்வமான அறிகுறிகளை, புள்ளிவிபரங்களின் துணையோடு 16ம் நாள் வெளியிட்டதை, என்பிக்கும் வண்ணமாக இந்த சீருந்து கண்காட்சி அமைந்திருந்தது. சீனத் தயாரிப்பு சீருந்துகள், வெளிநாடுகளின் சீருந்துகள் என எங்கு பார்த்தாலும் விதவிதமான சீருந்துகளும், அவற்றை வாங்கத் துடிக்கும் சீன மக்களும், குழந்தைகள் சகிதம் கண்காட்சிக்கு வந்து, சீருந்துகளின் விலை உள்ளிட்ட விபரங்களை விசாரிப்பதை நேரில் கண்டபோது, வியப்பாகத்தான் இருந்தது. அதிலும் இந்தியாவிலும் தற்போது விற்பனையிலுள்ள, சாலைகளில் காணப்படுகிற ஹியுண்டாய், ஹாண்டா, மிட்சுபிஷி, நிசான், சுசூகியின் சீருந்துகள் தவிர ஃபெராரி, பியுஜியட் என்று நாம் அழைக்கும் பூட்ஷோ, மெர்சீடிஸ் முதலிய புகழ்பெற்ற வெளிநாட்டுச் சீருந்துகளை குறிப்பாக சொல்லவேண்டும். சீனா நிதி நெருக்கடியை சமாளிக்க அறிமுகப்படுத்திய கொள்கைகளின் உதவியோடு உள்நாட்டிலான நுகர்வு அதிகரிக்கிறது என்பதை மக்கள் இப்படி சீருந்தில் காட்டும் ஆர்வம் காட்டியது. மட்டுமல்ல சாங்ச்சுன் நகரில்தான் சீனாவின் முதல் சீருந்து தயாரானது என்று செய்தி சீன வானொலியிலுள்ள செய்தி வானொலியை சேர்ந்த ஒரு பெண் கூறியபோது சாங்ச்சுன் நகரில் நாங்கள் பார்த்த சீருந்து தொடர்பான அனைத்துக்கும் மூல காரணம் விளங்கியது.

தொடர்ந்து சீனாவில் மிகப்பெரிய, பல்வேறு துறைகளின் பயன்படுத்தப்படுகிற சிறப்பு குழாய்களை தயாரிக்கும், சாங்ச்சுன் காவ்ஷிங் சிறப்பு குழாய் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றோம். 102 பேர் மட்டுமே பணிபுரியும் இந்த குழாய் நிறுவனத்தில் பாலிஎத்திலீன் பொருளைக் கொண்டு அவர்கள் தயாரிக்கும் பல்வகை குழாய்களை பார்த்தபோது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. பெட்ரோலை அக்ழ்ந்தெடுக்கும்போது, கடலின் அடியிலிருந்து, அகழ்விடத்திலிருந்து பிற இடங்களுக்கு அல்லது சுத்தீர்கரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் குழாய்கள் மற்றும் இணைப்புகள், ஆழ்கடலின் அடியே தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தப்படும் வடங்கள் அல்லது கம்பிகளை தன்னுள்ள வைத்து, பாதுகாக்கும் குழாய்கள், எளிய வகை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் குழாய்கள் என பல்வகை குழாய்கள் இந்தத் தொழில்நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றன.

அடுத்து நாங்கள் பார்வையிட்ட ஹுங்தா உயர் தொழில்நுட்ப குழும நிறுவனம் வாசலிலேயே, படைப்பாற்றல், ஊக்கம், இணக்கம் என்ற வாசகத்தோடு வரவேற்றது. உள்ளே சென்று பார்த்தபோது, பூட்டுகள், பாதுகாப்பு என்ற சொற்களுக்கு நவீனமான வடிவத்தில் பொருள் தருவதாக ஹுங்தா உயர் தொழில்நுட்ப குழுமத்தின் தயாரிப்புகள் அமைந்திருந்ததை காணமுடிந்தது. கைரேகையைக் கொண்டு உரிமையாளரை இனங்கண்டு, வழிவிடும் பூட்டுகள் முதல், சுட்டுவிரல் பெருவிரல் மட்டுமல்லாது உள்ளங்கையே வைத்து நாம் யார் என்பதை உறுதி செய்தால் ஒழிய அனுமதி மறுக்கும் நவீன பாதுகாப்பு வசதிகள் வரை, பிரம்மிக்க வைக்கும் உயர் தொழில்நுட்பங்களை எமக்கு நேரில் காணும் வாய்ப்பளித்தது ஹுங்தா உயர் தொழில்நுட்ப குழுமம். இந்த நிறுவனங்களை பற்றி விரிவாக தகவல்கள் அளிக்க ஆவல் எழுந்தாலும் அதை வேறு ஏதேனும் நிகழ்ச்சியில் செய்யலாம் என்ற எண்ணத்தோடு இப்போதைக்கு முடிக்கிறோம்.

சீன வானொலியின் கிழக்காசிய நாடுகளின் மொழிகள் அடங்கிய முதல் ஆசியப் பிரிவின் தலைவர் ஹெ ஜின் சாவ் அவர்களது அன்பான் விருந்தளிப்போடு ஜூலை 17ம் நாள் பணிப்பயணக் கடமை நிறைவேறியது.