சீன வானொலியை சேர்ந்த சீனப் பணியாளர்களும், நிபுணர்களுமாக அணிதிரண்டு ஜூலை 16ம் நாள் காலை சீன வானொலியின் தெற்கு வாயிலருகே, சிறப்பாக பதாகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட மேடையினருகே குழுமினர். லியாவ்னிங் மற்றும் ஜிலின் மாநிலத்துக்கு ஒரு குழுவும், திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கு ஒரு குழுவும், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் மற்றும் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசங்களுக்கு தலா ஒரு குழுவினருமாக மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து, சீன எல்லைப்புறப் பிரதேசங்களில் பணிப் பயணம் செய்வதாக திட்டம். இதில் திபெத் மற்றும் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசங்களுக்கான குழுக்களது பயணம் நடைமுறை வசதிக்கேற்ப பின்னர் ஏற்பாடு செய்யப்பட, உள்மங்கோலிய பிரதேசத்துக்கும், வடகொரியாவை ஒட்டிய லியாவ்னிங் மற்றும் ஜிலின் மாநிலங்களுக்குமான பயணக்குழுக்கள் உடனடியாக பயணம் மேற்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும், லியாவ்னிங், ஜீலின் மாநிலங்களுக்கான பயணக்குழு, ஜூன் 16ம் நாளன்றே புறப்படத் தயாராக இருந்தது. சீன வானொலியின் இயக்குநர் வாங் கங் நியன் தலைமையில் இந்த எல்லைப்புற பிரதேசங்களுக்க பணிப்பயணத்தின் துவக்கம் அல்லது ஆரம்ப நிகழ்வு ஜூன் 16ம் நாளன்று நடைபெற்றது. இந்த 4 பயணக்குழுக்களது தலைவர்களிடம் பணிப்பயணத்தின் வாசகம் எழுதிய கொடியை சீன வானொலியின் இயக்குநர் வாங் கங் நியன் ஒப்படைக்க, வடகிழக்குச் சீனாவிலுள்ள லியாவ்னிங் மற்றும் ஜீலின் மாநிலங்களுக்கான குழு, தன் பயணத்தை சுற்றியிருந்த அனைவரது உற்சாகமான வழியனுப்பதலோடு துவங்கியது.
மொத்தம் 23 பேர் அடங்கிய இக்குழுவில், செய்திப்பிரிவு, ஜப்பானிய, கொரிய, ஜெர்மன், உருது ஆகிய மொழிப்பிரிவுகளின் பிரதிநிகளோடு தமிழ்ப்பிரிவின் 2 பிரதிநிதிகளும் இடம்பெற்றனர். ஜப்பானிய மொழிப்பிரிவு, ஜெர்மன் மொழிப்பிரிவு மற்றும் தமிழ்ப்பிரிவின் சிறப்பு நிபுணர்களாக 3 வெளிநாட்டவரும் 20 சீனர்களுமாக கலவையான இக்குழு நேற்று சாலை வழிப்பயணமாக லியாவ்னிங் மாநிலத்தின் ஷென்யாங் நகரின் வழியே ஜீலின் மாநிலத்தின் சாங்ச்சுன் நகரை 16ம் நாள் இரவு வந்தடைந்தது. வான் வழிப்பயணமாக அல்லாது சாலை வழியே பயணித்த காரணம், பெய்ஜிங் மாநகரின் நவீன கட்டிடங்களை பார்த்து பழகிய கண்களுக்கு பச்சைப் பசுமை கொஞ்சும் வயல்வெளிக்காட்சிகள் விருந்தாக அமைந்தது. இருப்பினும் நெடுஞ்சாலைகளின் சிறப்பான பராமரிப்பு, கடந்து செல்லும் நகரங்களில் தெரிந்த வளர்ச்சியின் சின்னங்களான கட்டிடங்கள் இவற்றோடு இயற்கை அன்னையே நல்வரவு சொன்னது போல் மழைத்தூறலும் சேர்ந்துகொள்ள, உடல் அசதியை மறந்து உற்சாகத்துடன் சாங்ச்சுன் வந்தடைந்தது பயணக்குழு.
இந்தப் பயணக்குழுவில் தமிழ்ப்பிரிவின் சார்பில் கலந்துகொள்ளும் சிவகாமி என்று நமக்கு அறிமுகமான ஷியாவ் யியும், உங்கள் நண்பன் க்ளீட்டசும் உங்களுக்காக நாள்தோறும் சில தகவல்களை இணையம் மூலம் வழங்குவோம். 17ம் நாள் சாங்ச்சுன்னில் சில தொழில் நிறுவனங்களையும், 6வது சாங்ச்சுன் சர்வதேச சீருந்து கண்காட்சியை பார்வையிட்டது பற்றிய தகவல்கள் அடுத்த கட்டுரையில் இடம்பெறும். வாசித்து, தங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.
|