• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-19 22:21:02    
யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டம்

cri

வணக்கம் அன்பு நேயர்களே. வடகிழக்குச் சீனாவிலான சீன வானொலியின் செய்தியாளர்களுடைய பணிப்பயணத்தின் அடுத்த நிலை யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டம். இம்மாவட்டத்தின் தலைநகரான யேன்ச்சியிலிருந்து தமிழ்ப்பிரிவின் சிவகாமி மற்றும் க்ளீட்டஸ்...

ஜூலை 18ம் நாள் சுவையான விருந்தோடு நிறைவடைந்த எமது கடமை இன்று ஜூலை 19ம் நாள் காலை, யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்திற்கான பயணத்தில் துவங்கியது. பச்சைப்பசேல் என வயல்கள் இருமருங்கிலும் கண்களுக்கு இதமாக இருக்க, சீருந்துலிருந்தபடி இயற்கையின் வனப்பை கண்டுகளிக்க முடிந்தது. நெடுஞ்சாலையில் யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்தை விரைவில சென்றடையவேண்டும் என்ற இலக்கோடு சீருந்துகள் சீரான வேகத்தோடு சென்றன, பசுமையான இந்த வயல்வெளிகளும், அதற்கு வேலிபோல் தூரத்தே அணைகட்டி நின்ற மலைகளும், குன்றுகளுமாக பார்த்த எமது ஆவல், சில நிழற்படங்களையாவது எடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்ற பேராவலாக எழுந்து நிற்க, ஓட்டுனர் பெருமக்கள் தோதான இடத்தில் சீருந்துகளை நிறுத்தியபோது, தூய்மையான காற்றை உள்வாங்கியபடி சிறிது நேரம் நடக்க முடிந்தது. மாலைக்குள் யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்தின் தலைநகரான் யேன்ச்சிக்கு சென்று, அங்கே யேன்பியன் கலைக்குழுவினரது அரங்கேற்றத்தை காணவேண்டும் என்பதே ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 19ம் நாளின் முக்கிய திட்டம்.

ஆக, மீண்டும் சீருந்துகள் சீறிப் புறப்பட்டன. கான்கிரீட் காடுகள் என்று வர்ணிக்கப்படும் கட்டிடங்கள் நிறைந்து காணப்படும் நகரங்களில் வசித்து பழகியவர்களுக்கு இத்தகைய தொலைதூர பயணங்கள், அதிலும் சாலை வழிப்பயணங்கள் ஒரு பெரிய கொடை என்றே சொல்லவேண்டும். சீனப் பண்பாடு நிகழ்ச்சிக்காக, கண்டும், கேட்டும், படித்தும் திரட்டிய சீனக் கட்டிடவியல் பற்றிய தகவல்களை உள்வாங்கிய எனக்கு, இந்தப் பயணம் இயற்கை எழிலை மகிழ்ந்து பாராட்டவும் வாய்ப்பேற்படுத்தித் தந்தது என்றே சொல்லவேண்டும். அதிலும் வழியே கடந்து வந்த சிறிய நகரங்கள், கிராமப்புறங்கள் என்னை பொறுத்தவரை எழிலான சீனாவை, எளிமையான சீனாவை அறிய உதவின.

மலைமுகடுகளில், பசும்புற்களை மேயும் மாடுகள், நெடுஞ்சாலைக்கு அதிக தொலைவில் அல்லாது அமைந்திருந்த சில குடிசைகளை கண்டபோது, அட குடிசைகளா என்ற வியப்பும், நம்மூரில் பார்த்த வயல்வெளிகளும், கிராமங்களும், குடிசைகளும் நினைவில் நிழலாடின. ஆக, கலவையான உணர்வுகள் அலைகழிக்க, யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்தின் தலைநகரான யேன்ச்சி நகருக்குள் நுழைந்தோம். யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள், குறிப்பாக ஜூலை 18ம் நாள் சீன வானொலியோடு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட யேன்பியன் கொரிய தன்னாட்சிப் பிரதேசத்தின் வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாரியத்தின் பணியாளர்கள், யேன்ச்சி நகரின் நுழைவாயிலுக்கே வந்து காத்திருந்து எங்களை வரவேற்றது, மனதுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. விடுதிக்குச் சென்று, பயணப்பொதிகளை வைத்த உடனே இரவு உணவுக்காக யேன்பியன் கொரிய தன்னாட்சிப் பிரதேசத்தின் வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாரியத்தினர் எங்களுக்காக உணவகமொன்றில் காத்திருந்தனர். யேன்பியன் கொரிய தன்னாட்சிப் பிரதேசத்தின் வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாரியத்தின் அதிகாரிகளின் அன்பான் விருந்தோம்பலை உளமார ரசித்து, புசித்து யேன்பியன் கலைக்குழுவினரது அரங்கேற்றத்தை காணச் சென்றோம்.

இளைய தலைமுறையும், கொஞ்சம் வயது கூடியவருமாக அமைந்த இந்த யேன்பியன் கலைக்குழுவினர் பல்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். ஆடல், பாடல், மேளம், முரசு என நிகழ்ச்சி கலை கட்டியது. பாரம்பரிய முறைப்படியான திருமணம், வயலில் உழைத்து களைத்த ஆண்களுக்கு கலையத்தில் உணவை கொண்டு வந்து பரிமாறும் பெண்கள், வண்ணத்துப்பூச்சிகளின் விளையாட்டு, குடம் சுமந்து நீர் மொள்ளச் செல்லும் பெண்கள், பாரம்பரிய இசைக்கருவிகளின் விருந்து என, கைதட்டி கரவொலி எழுப்புவதற்குள் அடுத்து அடுத்து நிகழ்ச்சிகளை துடிப்போடு வழங்கிய யேன்பியன் கலைக்குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும். ஒருவரே பல பாடல் மற்றும் நடனங்களில் வெவ்வேறு பரிணாமங்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதை கண்டபோது வியப்பாகத்தான் இருந்தது. வயிற்றுக்கு சுவையான விருந்து, செவிக்கும் கண்களுக்கு அதை விடச் சுவையான விருந்து என மனநிறைவோடு விடுதிக்கு திரும்பினோம். நாளை ஜூலை 20ம் நாள் அதிக நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதிகமான தகவல்களோடு நாளை சந்திப்போம்...

யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்ட தலைநகரான யேன்ச்சியிலிருந்து,
தமிப்பிர்வுக்காக, சிவகாமி மற்றும் உங்கள் நண்பன் க்ளீட்டஸ்...