• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-21 14:55:58    
வடகிழக்காசியாவின் தங்க நகரம்

cri

வடக்கிழக்காசியாவின் தங்கத்துறைமுக நகரான ஹுன்ச்சுன் நகரிலிருந்து உங்கள் தமிழ்ப்பிரிவின் சிவகாமி மற்றும் க்ளீட்டஸ்...

ஜீலின் மாநிலத்திலான எமது பயணம் நேற்று யேன்ச்சி நகரில் கலைநிகழ்ச்சி அரங்கேற்றத்தை கண்டுகளித்ததோடு முடிய, ஜூலை 20ம் நாளான இன்று காலை ஜீலின் மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியிலான ஹுன்ச்சுன் நகருக்கு புறப்பட்டோம். முன்பே குறிப்பிட்டது போல் இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளும், கிராமங்களும் நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் விரைந்தோட, சிறிது நேரத்தில் இந்த பயணத்தின் தலைப்பில் இடம்பெறும், மையக்கருத்தான "எல்லைப்பிரதேசத்திலான பயணம்" என்பதன் பொருள் விளங்கப் போகிறது என்பதை அறியாமல் சீருந்து சீறிப்பாய, மழையும் கொட்ட, கண்கள் விரிய பயணித்தோம். எம்மோடு யேன்பியன் கொரியத் தன்னாட்சி மாவட்ட தொலைக்காட்சிக் குழுவினரும், செய்தியாளர்களும், வானொலி நிலைய பணியாளர்களும் இணைந்து கொண்டது இன்னுமொரு சிறப்பு.

எல்லைப்பிரதேசத்தோடு நெருங்கிய ஹுன்ச்சுன் நகரை வந்தடைந்து அங்கே நகரின் அரசு அதிகாரிகளை சந்தித்து, அவர்கள் அறிமுகப்படுத்த ஹுன்ச்சுன் நகரின் சிறப்பையும், ஃபாங்ச்சுவான் மற்றும் இன்ன பிற முக்கிய இடங்களையும் பற்றி அறிந்துகொண்டோம்.

ஹுன்ச்சுன் நகரம் மலைகளாலும், ஆறுகளாலும் ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகளுடனும், கடல்வழியே ஜப்பானுடனும் நெருங்கி அமைந்துள்ளதை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நாட்டில் இருந்தபடி வேறு இருநாடுகளின் எல்லையில் நிற்கமுடியும் என்பதை நினைத்துப் பார்த்தபோதே சிலிர்க்கத்தான் செய்தது. ஹுன்ச்சுன் நகர அரசு அதிகாரிகளை சந்தித்தபின், அருகே இருந்த ஒரு எல்லை நுழைவாயிலுக்குச் சென்றோம். நிலவழியில் ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துகொண்ட அந்த நுழைவாயிலை சென்றடைந்தபோது மழை நிற்காமல் தூறிக்கொண்டிருந்தது. பல ஆங்கில மற்றும் தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் பார்த்திருப்போம், ஏதோ மர்மமான, வியப்பான ஒன்று நிகழப்போகும் போது, திடீரென மழை பெய்யும், இடி இடிக்கும், மின்னல் மின்னும். மின்னலும் இடியும் இல்லாதபோதும் மழை மட்டும் நிற்காது தூறிக்கொண்டிருக்க, இன்னும் சிறிது நேரத்தில் மூன்று நாடுகளின் எல்லையை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஒருவித மர்மமான, விந்தையான, வினோதமான ஒரு எண்ணத்தை, உணர்வைத் தூண்டிவிட்டன. இடையில் மதிய உணவு உட்கொள்ளும் நேரம் வந்துவிட இந்த எதிர்பார்ப்புகளுக்கு இடைவேளை விட்டு, சாப்பிடச் சென்றோம். கடந்த சில நாட்களாக என் உணவு வழக்கத்தை கவனித்த சீன வானொலியின் தெற்காசிய மொழிகளுக்கான, முதல் ஆசியப்பிரிவுத் தலைவர் ஹெ ச்சின் சாவ் அவர்களும், மற்ற சீன நண்பர்களும் ஷியாவ்கெ பன்றியிறைச்சி சாப்பிடமாட்டார், காய்கறிகளையே அதிகம் சாப்பிடுவார், காரமாக சாப்பிடுவார் என பார்த்து பார்த்து உணவு வகைகளை வரவைத்து பரிமாறியது என்னை நெகிழச் செய்தது. எனக்கு செல்லமாக, குட்டியாக சீன நண்பர்கள் வைத்த பெயர் ஷியாவ்கெ என்று அறிந்துகொண்டேன்.

சிவகாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணம் ஜெர்மன் மொழிப்பிரிவு, ஜப்பானிய மொழிப்பிரிவுப் பணியாளர்கள் நான் குச்சியில் சாப்பிட போராடுவேன் என்பதறிந்து, உணவை பரிமாறி உதவினர். பயணத்தில் எனக்கு பல உதவிகளை செய்த சிவகாமிக்கு உடல்நிலை கொஞ்சம் பாதிக்கப்பட, ஜப்பானிய ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனமொன்றை பார்வையிட்டபின் அவரை பயணக்குழுவினர் பாதுகாப்பாக விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜப்பானிய ஆடைத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்று முடித்தபின்னர், ஃபாங்ச்சுவான் எனும் இடத்துக்குச் சென்றோம். ஓரிடத்தில் சீருந்துகள் நிற்க, ஏன் நிற்கிறது என்று கேட்டபோது, அதோ தெரிகிறதே இரும்புப்பாலம் அந்த பாலம் வடகொரியவையும் சீனாவையும் இணைக்கும் எல்லை ஊடுவழி என்றார்கள். பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஆரவாரமில்லாது ஓடிக்கொண்டிருந்தது.

அதையடுத்து ஓரிடத்தில் சீருந்துகள் நிற்க இடதுபக்கம் வேலியும், வலது பக்கம் ஆறும் நடுவே 8 மீட்டர் அகலச் சாலையும் தெரிய, சாலை சீனா, இடது பக்க வேலிக்கு அந்தப்பகுதியில் ரஷ்யா, வலதுபக்க ஆற்றுக்கு அப்பால் வடகொரியா என்றார்கள் எம்மோடு வந்த ஹுன்ச்சுன் நகர அரசுப் பணியாளர்கள். வேலியில் ஒரிடத்தில் கொஞ்சம் அகலமான இடைவெளி தெரிய ஒரு காலை உள்ளே வைத்து, ஒரே நேரத்தில் ரஷ்யாவிலும், சீனாவிலும் நிற்கலாமே என்று எண்ணி அங்கே செல்ல முனைந்தபோது, வேண்டாம் வேலியில் மின்சாரம் இருக்கக்கூடும் என்று எச்சரித்தனர் பயணக்குழுவினர் சிலர். அதற்கு பின் சென்ற இடம் மற்றுமொரு . எல்லைப்பகுதி, இந்த முறை ரஷ்யாவுக்கும், வடகொரியாவுக்குமிடையிலான பாலமொன்று ஆற்றைக்கடந்து செல்வதை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கமுடிந்தது, மேகமும், பனியும் மூடிக்கொண்டதால், 15 கிலோமிட்டர் தொலைவில் தெரியக்கூடிய ஜப்பானியக் கடல் கண்களுக்கு புலப்படாமல் போயிற்று. இந்த இடத்தையும் பார்வையிட்டபின் நேரமானதால் ஹுன்ச்சுன் நகர சகோதரர்கள் அளித்த, அன்பான் விருந்தை உண்டு விடுதிக்கு திரும்பினோம். இடையில் பல சின்னச் சின்ன சுவையான சம்பவங்கள் நிகழ்ந்தன அவற்றை வேறு ஒரு நிகழ்ச்சியில் தொகுத்து கூறுவேன். இன்று எனக்கு பேருதவியாய் அமைந்த குறிப்பாக ஆங்கிலத்தில் முக்கிய தகவல்களை மொழிபெயர்த்து உதவிய, சீன வானொலியின் செய்திப்பிரிவைச் சேர்ந்த லின் லு, ஆன் ரன், தாங் மெய், ஜெர்மன் மொழியின் நிபுணர் சிமோன் மற்றும் உடன் வந்த சகபணியாளர் ஷின் யுவே, கணக்கு மற்றும் வணிகத்துறையின் வாங் துங் ஜியே, உருது மொழியின் ஃபர்ஹாஸ் எனும் யின் பெங்சுவான், கொரிய மொழி நிபுணர் அண்டோ நவ்கோ மற்றும் அவரது சகபணியாளர் ஹு தெ ஷெங் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கே பதிவு செய்கிறேன்.