வணக்கம் நேயர்களே, இன்று ஜூலை 21, செவ்வாய்க்கிழமை. வடகிழக்குச் சீனாவிலான "எல்லைப் பிரதேசப் பயணத்தின்" 6வது நாள் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வது உங்கள் தமிழ்ப்பிரிவின் சிவகாமி மற்றும் க்ளீட்டஸ்...
ஜூலை 20ம் நாள், கொரிய தேசிய இன விருந்தோடு நிறைவடைந்த எமது கடமை இன்று காலை ஹுன்ச்சுன் நகரிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள தூமன் நுழைவாயிலோடு துவங்கியது. தூமன் நுழைவாயிலை பற்றிச் சொல்வதற்கு முன் பொதுவில் யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்டத்தை குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும், விருந்தோம்பல், அன்பு, மதிப்பு இந்தச் சொற்களுக்கு அடையாளமாக, எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் இந்த மக்கள். நேற்று கீழே அமர்ந்து உணவருந்தும் வகையில், ஒரு கொரிய இன குடும்ப விடுதியில் சாப்பிட்ட அனுபவம் மறக்கவியலாதது. இன்றும் எல்லை வரை வந்து வழியனுப்பிய ஹுன்ச்சுன் நகர அரசுப் பணியாளர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்.
ஆக, காலை, யேன்பியன் செய்தியாளர்களும் உடன் சேர்ந்துகொள்ள மழைத்தூறலோடு தூமன் நுழைவாயிலுக்குச் சென்றோம், கண்ணுக்கெட்டிய தூரத்தில், வடகொரிய எல்லை. சீனாவையும் வடகொரியாவையும் இணைக்கும் ஒரு பாலம், கீழே தூமன் ஆறு அவ்வளவு ஒன்றும் அகலமில்லாது ஓடிக்கொண்டிருந்தது. வடகொரியாவை, அதிலும் வடகொரிய எல்லையிலான கட்டிடங்களைக் கூட மிக அருகே பார்க்க முடிந்ததில் மகிழ்ந்தபடி, மழையில் சிறிதும் நேரம் நனைந்தபின் புறப்பட்டோம்.
அடுத்ததாக ஏதோ ஒரு பள்ளிக்குச் செல்வதாக பேசிக்கொண்டார்கள். கோடை விடுமுறை காலத்தில் பள்ளியா? எதற்கு? என்று நானும் ஜெர்மன் மொழி நிபுணரும் பேசிக்கொண்டே சென்றடைந்த இடம், இந்த எல்லைப் பிரதேசப் பயணத்துக்கே ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது எனலாம்.
லி வென் ஷே
நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு சிறிய நகரத்தின் ஒதுக்குப்புறமான ஓரிடம். அங்கே சீனாவின் பல தேசிய இனங்களைச் சேர்ந்த குழந்தைகளை தத்தாக எடுத்து வளர்க்கும் ஓர் அன்பான தந்தையை, தாத்தாவை சந்தித்தோம் எனலாம். பெரியவர் லி வென் ஷேவுக்கு அவ்வளவு ஒன்றும் முதிய வயதல்ல. பெரியவர் என்று இங்கே குறிப்பிட காரணம் அவரது அன்பான மனதுக்கும், அரவணைக்கும் மனதுக்குமான எம்முடைய மதிப்பு என்றே சொல்லவேண்டும். இவர் தன்னந்ததனி நபராக, தாய் தந்தையை இழந்த பிள்ளைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், ஏதோ காரணங்களுக்காய் மற்ற பிள்ளைகளைப் போல் அல்லாது கொஞ்சம் வால்தனம் செய்து, பின்னர் வில்லங்கமான வேலைகளை லீலைகளாகச் செய்தவர்கள், பெற்றோருக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் அடங்காது திரிந்தவர்கள் அனைவருக்கும் தன்னுடைய அன்பால், அன்னையை ஒத்த அரவணைப்பால், பாசத்தால் மனமாற்றம் செய்து மகிழ்ச்சிக்கு வழிகாட்டுகிறார்.
இந்த எளிய மனிதர் லி வென் ஷே. இங்குள்ள பிள்ளைகளின் கதைகளை அவர் சொல்லக்கேட்டு பயணக்குழுவினரில் பலரது கண்கள் பனித்தன. மொழி தெரியாத போது அவரது பேச்சுத் தொனியில் ஒலித்த விரக்தியும், கோபமும், சோகமும் கலந்த உணர்ச்சியும், அருகே இருந்த பிள்ளைகளின் முகத்தில் நிழலாடிய சோகம் கலந்து புன்னகையும். எந்த மொழி பேசுபவருக்கும் புரிந்துவிடும். உயரத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், பண்பான அவரது செய்கையால் இமயத்து இணையாய் உயர்ந்து நிற்கிறார் பெரியவர் லி வென் ஷே. எம்மால் இயன்ற உதவியை செய்யவேண்டுமென்ற எண்ணம், அனைவருக்குமே எழுந்து அதன்படியே இயன்றதை செய்துவிட்டு புறப்பட்டோம். 12 வயதும், 8 வயதுமே நிரம்பிய இரு சிறுவர்கள் என்னோடு கொஞ்சம் இயல்பாக பேசியதை கண்டு எனக்கு மட்டுமல்ல உடன் வந்த அனைவருக்குமே கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. இருவரது பெயரையும் குழப்பி அவர்களை சிரிக்க வைத்ததில் வலியோடு சேர்ந்த மகிழ்ச்சி மனதுக்குள் நிறைந்தது. கனத்த இதயத்தோடு கைகுலுக்கியும், கைகளை அசைத்தும் விடைபெற்றுக்கொண்டோம். எல்லைப்பிரதேசப் பயணத்தில் இது ஓரு புதிய பரிணாமம், புதிய கண்ணோட்டம். பொருளாதாரம், சமூக வாழ்கை என அரசியலும், குடிமையிலும் கலந்து செய்தியாளர்களாக நடமாடிய எங்களுக்கு, மனிதர்களாக இருக்க அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் கழித்த சில மணி நேரங்கள் உதவின எனலாம்.
கனத்த இதயத்தோடு சீருந்துகளில் ஏறி அமர்ந்தபின் ஒருவித அமைதி நிலவ, வண்டி புறப்பட்டது. வெளியே திடீரென தூறம் நின்று சூரியன் தலைகாட்ட அதை பற்றிய பேச்சோடு பயணம் தொடர, மீண்டும் மேகம் சூழ்ந்து இருள் கவ்வி, மழை பிடிக்க, இயற்கை எழில் கொஞ்சும் இந்த யேன்பியன் மாவட்டத்தில் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் நின்ற ஷியன் ஜிங் தாய் எனும் இயற்கைக் காட்சியிடத்துக்கு சென்றோம். அருவிகளும், மலை உச்சிகளுமாக இருந்த இந்த இயற்கைக் காட்சியிடம், கனத்த இதயத்தோடு இருந்த எங்களுக்கு இதமளித்து, இயல்பு நிலைக்கு திரும்பச் செய்வதாக அமைந்தது. சின்ன அருவிதான் என்றாலும், குற்றாலத்திலும், சுருளி நீர்விழ்ச்சியிலும் குளித்த நினைவுகள் மனதில் எழ, அருகே நின்று நிழற்படமெடுத்து விட்டு, மேலே மலை உச்சிகள் என அழைக்கப்படும் பல்வேறு காடடந்த மலைகளின் உச்சிப்பகுதிக்கு சென்றோம். சின்னச் சின்ன குகைகள், அதிலும் ஒன்றில் நின்று மனதார வேண்டிக்கொண்டால் அதிகம் செல்வம் சேரும், மற்றதில் நின்று நிழற்படமெடுத்துக் கொண்டால் அழகான துணை கிடைக்கும் என்ற சில நம்பிக்கைகளை பற்றி வழிகாட்டிப் பெண் கூறியபோது, வேடிக்கையாகத்தான் இருந்தது, அட நம்மூரில் கேட்டதுதானே இதெல்லாம் என்பதுபோல. சிறிய கயிற்று தொங்குப்பாலம் ஒன்றை கடந்து சென்றபோது ஒரு விதத்தில், மகிழ்ச்சி. இரண்டு மலைகளுக்கு இடையே, ஆழ்ந்த பள்ளத்தாக்கின் மேல் இந்த தொங்குப்பாலம் இல்லாதபோதும், அசைந்தாடும் பாலத்தில் ஆடியபடி நடந்து கடப்பது ஒருவித சிலிர்ப்பான அனுபவமே.
நாள்தோறும் சொல்வதுபோல, பல சின்னச்சின்ன தகவல்கள், அனுபவங்கள் அவ்வப்போது இந்தப் பயணத்துக்கு சுவை கூட்டுகின்றன, அவற்றையெல்லாம் தொகுத்து, நிச்சயமாக உங்களுக்கு வழங்குவேன். இரவு நேர விருந்தை யேன்பியன் கொரிய தன்னாட்சி மாவட்ட வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாரியத்தினர் வழங்க, சுவையான் விருந்துண்ட மனநிறைவோடு இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறோம். மீண்டும் நாளை, ஜூலை 22ம் நாளின்
அனுபவத்தோடு சந்திப்போம்... யேன்ச்சி நகரிலிருந்து... தமிழ்ப்பிரிவுக்காக... சிவகாமி மற்றும் உங்கள் நண்பன் க்ளீட்டஸ்...
|