• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-24 16:23:30    
ச்சாங்பாய்ஷான் மலை

cri

எமது பணிப்பயணத்தின் 8வது நாள், ஜூலை 2ம் நாளன்று ச்சாங்பாய்ஷான் மலையின் கீழே இருந்த ச்சாங்பாய்ஷான் நகரிலிருந்து மலையேற புறப்பட்டோம். அரசு அதிகாரிகள், தலைவர்கள், செய்தியாளர் சந்திப்பு, தொழிற்சாலைகளை பார்வையிடல் என்ற பணி தொடர்பான நிகழ்ச்சி நிரலில் இந்த எமது ச்சாங்பாய்ஷான் மலை பயணம் கொஞ்சம் ஓய்வான பயணம் எனலாம்.

சீருந்துகள் சீறிப்பாய ச்சாங்பாய்ஷான் மலைக்கு அருகே சென்றோம். இன்றும் மழைத்தூறல் விட்டதாயில்லை. கீழே மக்கள் குழுக்கள் குழுக்களாக குளிராடை உடுத்தியபடி சென்றுகொண்டிருந்ததை சீருந்திலிருந்து பார்த்தபோதே கொஞ்சம் சிலிப்பாகத்தான் இருந்தது. ச்சாங்பாய்ஷான் என்றால் எப்போதுமே வெண்ணிறமாய் இருக்கும் மலை என்று சீன மொழியில் பொருள். ஆம், எப்போது அங்கே பனி இருக்குமாம், பனிக்கட்டிகள் படர்ந்திருக்க, எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறி உருவான பள்ளத்தில் தெளிந்த நீர் நிறைந்து காணப்படும் இந்த ச்சாங்பாய்ஷான் மலையை நிழற்படங்களை பார்த்தபோதே வியந்த எங்களுக்கு அங்கே குளிர் பூஜ்ஜியத்துக்கு கீழ் 2 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் என்றதும், பெய்ஜிங்கில் கோடைக்காலம் வெயில் என்று அலுத்தது நினைவுக்கு வந்தது. ஆனால் செய்தியில் பெய்ஜிங்கிலும் மழை என்று அறிந்தோம். ஆக, குளிரோடு மல்லுக்கட்டாமல் வாடகைக்கு கிடைத்த மேலாடையை வாங்கி அணிந்தபடி ச்சாங்பாய்ஷான் மலையின் நுழைவாயிலுக்குள் சென்றோம். ஜீலின் மாநிலத்தின் இயற்க்கை அழகுக்கு இந்த ச்சாங்பாய்ஷான் மலை கூடுதல் அழகு சேர்க்கும் காட்சித்தலம் எனலாம். சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது, மேலே செல்லும் பேருந்தில் செல்ல. நாங்களும் வரிசைப்படி நின்று பேருந்தில் ஏறிச் சென்றதும் ஓரிடத்தில் நிறுத்தினார்கள். அங்கே இறங்கி குழுக்களாக பிரிந்து எந்திர ஆற்றல் அதிகம் கொண்ட சீருந்துகளின் செல்லவேண்டுமாம். மழைத்தூறலில் நனைந்தபடி நாங்களும் 6 பேர் கொண்ட நான்கு குழுக்களாக பிரிந்து சீருந்துகளில் புறப்பட்டோம். 2700 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த அழகிய ஏரியை காணவேண்டும், இன்னபிற காட்சிகளை கண்டு பூரிக்கவேண்டும் என்ற எண்ணங்கள் குளிர் தந்த சின்ன நடுக்கத்துடன் சிலிர்ப்பை அதிகரித்தன. வளைந்து நெளிந்து சென்ற பாதையினூடே சீருந்துகள் கவனமாக மலையில் ஏறின. மழை பெய்ததாலும், வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததாலும் மலை ஏறுகையில் கீழே அடர்ந்த பள்ளத்தாக்குகளை காணமுடியாமல் போனது. சிறிது நேர பயணத்துக்கு பின் செல்ல வேண்டிய மலையின் உச்சியை சென்றடைந்தபோது, மேலும் வருத்தமே மிஞ்சியது, மேகக்க்கூட்டங்கள் ஒருபுறம் கண்களை இருட்டாக்கிய பனிமூட்டம் மறுபுறம் என காட்சியிடங்கள் எதையும் பார்க்கமுடியாமல் போனது. உலகில் மிக அதிகமான் உயரத்தில் அமைந்த்த எரிமலை பள்ளத்திலான ஏரியை பார்க்கமுடியவில்லையே என்பது பெரிய வருத்தம். சீன மொழியில் இந்த ஏரியை சொர்க்க ஏரி என்று அழைக்கிறார்கள். ச்சாங்பாய்ஷான் மலைத்தொடர் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் எல்லையில் அமைந்துள்ளது மற்றுமொரு சிறப்பு. ஆக மலையில் உச்சியில் நின்று எதையெல்லாம் பார்த்து சிலிர்த்து வியந்து நிற்கவேண்டுமென நினைத்தோமோ, அவை எதுவுமே எங்கள் கண்களில் படவில்லை. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போவது என்பார்கள் ச்சாங்பாய்ஷான் மலையை பொறுத்தவரை கைகளுக்கும், கால்களுக்கு எட்டிய இந்த காட்சியிடம் கண்களுக்கு எட்டாமல் போய்விட்டதே என்பது பெரிய குறை. ஆனால் என்ன, ஏற்கனவே மேலும் ஒருமுறை ஜீலினுக்கு வரவேண்டும், யேன்பியனின் சுற்றுலா மேற்கொள்ள வேண்டும் என்ற எங்கள் பயணக்குழுவினரின் பலரது ஆவலை, இந்த ச்சாங்பாய்ஷான் மலையில் நாங்கள் காணமுடியாமல் போன காட்சிகள் இன்னும் அதிகரித்தன. கொஞ்சம் ஏமாற்றத்தோடு மலையிறங்கி ஜீலின் நகருக்கு புறப்பட்டோம். மழைச்சாறல், தூறலாகி, திடீரென சூரியன் கண்களுக்கு தெரிந்து மீண்டும் தூறலும், சாரலுமாக மழை பெய்தது. சீருந்திருந்தபடி இருமருங்கிலும் கடந்து சென்ற அழகான, பசுமையான நிலங்கள் இந்த மழையிலும், வெயிலிலும் பளபளத்து மின்னியது கண்களை கொள்ளைக்கொண்ட காட்சி.

நாளை ஜீலின் நகரிலிருந்து ஷென்யாங் செல்வதாக திட்டம். ஷென்யாங் புறப்பட்டால் ஜீலின் மாநிலத்துக்கு விடை சொல்கிறோம் என்று பொருள். அழகான் ஜீலின் மாநிலத்தை எங்கள் நினைவில் சுமந்தபடி நாளை லியாவ்நிங் மாநிலத்தின் ஷென்யாங் சென்றடைவோம். மற்ற தகவல்களை ஜூலை 24ம் நாளன்றை கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜீலின் நகரிலிருந்து தமிழ்ப்பிரிவுக்காக