முதியோர் இல்லத்தில் பணியாற்றும் Wang Gui Fang அம்மையார் 2
cri
லோயிஸ் பீடபூமியில் அமைந்துள்ள Yi Jun மாவட்டத்தில் மலைகள் மிக அதிகம். விளைநிலங்கள் மிக குறைவு. சீனாவின் வறிய மாவட்டங்களில் இது ஒன்றாகும். இம்மாவட்டத்தின் விவசாயிகள் செல்வந்தவரல்ல. Tai An வட்டத்தில் நிதி குறைவு. இருந்த போதிலும், கடந்த பல ஆண்டுகளாக, அந்த வட்ட அரசு இம்முதியோர் இல்லத்துக்கு மாபெரும் ஆதரவளித்து வருகிறது. Tai An வட்டத் தலைவர் Li Yan Sheng கூறியதாவது: "முதியோர் இல்லம் நிறுவப்பட்டது முதல் இது வரை, வட்ட அரசு இதை முழுமூச்சுடன் ஆதரிக்கிறது. முதலில், சில பத்து Mu நிலப்பரப்புடைய விளைநிலங்களை ஒதுக்கி வைத்து, முதியோர் இல்லத்துக்கு வழங்கியது. அவர்கள் விளைநிலங்களில் உழைத்தால், அறைக்கான வாடகைத் தொகையைச் செலுத்த தேவையில்லை. பின்னர் சமூகத்தின் பல்வேறு துறையினர் வழங்கும் உதவித் தொகை அதிகரிப்பதுடன், ஆண்டுதோறும் வட்ட அரசு சுமார் பத்து ஆயிரம் யுவான் உதவித்தொகையை முதியோர் இல்லத்துக்கு வழங்குகிறது" என்றார், அவர். நாட்கள் உருண்டோட பல ஆண்டுகள் கடந்து, Wang Gui Fang அம்மையார் இம்முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து, 24 ஆண்டுகள் ஆகி விட்டன. இங்குள்ள முதியவர்கள் அதிகமில்லை. ஆனால் அவர்களைப் பராமரிக்கும் பணிகள் அதிகம். தமது மூன்று குழந்தைகளைப் பராமரிக்கக்கூட Wang Gui Fang அம்மையாருக்கு நேரம் இல்லை. சில சமயங்களில், குழந்தைகள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. தங்களை கவனிக்கவில்லை என்று அவரிடம் வாதாடினர். Wang Gui Fang அம்மையார் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டார். அவர் தமது குடும்பத்தினரை நினைவு கூர்ந்தாலும்,
முதியவர்களிடமிருந்து பிரிந்திருக்க அவர் விரும்பவில்லை. தமது குடும்பம் பற்றி குறிப்பிடுகையில் அவரது கண்களில் கண்ணீர் நிறைந்தது. "அப்போது, எனது மூன்று குழந்தைகளும் சிறுவர்களாக இருந்தனர். அவர்கள் பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். நான் அவர்களை நன்றாக பராமரிக்க முடியவில்லை. எனது கணவருக்கு உடல் நலமில்லாமல் போனது. அவர் உடல் நலமாக இருந்தபோது, எனது பணியை மிகவும் ஆதரித்தார். கடந்த ஆண்டு மே திங்கள், அவர் மரணமடைந்தார். அவருடைய இறப்பு என்னில் பெருமளவு பாதித்தது" என்றார், அவர். தற்போது, Wang Gui Fang அம்மையாரின் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டனர். படிப்படியாக தங்கள் தாயைப் புரிந்து கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல, அவர்கள் தாய்க்கு உதவியும் செய்கின்றனர். விவசாய வேலைகள் அதிகமாக இருக்கும் வேளையில், Wang Gui Fang அம்மையாரின் மகன், மருமகள், மகள், மருமகன், தம்பி, தங்கை ஆகியோர் முதியோர் இல்லத்துக்கு வந்து அவருக்கு உதவி செய்வதுண்டு. தமது அக்காவுக்கு உதவி செய்யும் பொருட்டு, Wang Gui Fang அம்மையாரின் தம்பி Wang Shou Yuan மூன்று ஆண்டுகளுக்கு முன் முதியோர் இல்லத்தில் குடிபுகுந்தார்.
Wang Gui Fang அம்மையார் முதியவர்களை அன்போடு பராமரிப்பது பற்றிய அருஞ்செய்தி, உள்ளூர் பிரதேசத்தில் பரவி விட்டது. கடந்த ஆண்டு, Shan Xi மாநிலத்தின் "மக்களை மனமுருகச்செய்த முதல் பத்து பேரில்" ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ் பெற தாம் ஒருபோதும் எண்ணவில்லை என்று அவர் கூறினார். அனைவருக்கும் வயதாகும் என்றும், முதியோருக்கு மதிப்பும் அன்பும் சேவையும் புரிவது, சீனத் தேசத்தின் பாரம்பரியமாகும் என்றும் அவர் கருதுகின்றார். Zhang Ting அம்மையார், இக்கிராமப் பள்ளியின் ஆங்கில மொழி ஆசிரியர் ஆவார். Wang Gui Fang அம்மையார் பற்றி குறிப்பிடுகையில் அவர் வியப்பு தெரிவித்தார். "இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் தமது சொந்த செலவில், குழந்தைகள் இல்லாத முதியோருக்கு பொருட்களை வாங்குவதுண்டு. சில சமயங்களில் முதியவர்கள் கோபமாக பேசிவிடுவதுண்டு. ஆனாலும் பல்லாண்டு இப்பணியில் ஈடுபடுவதில் அவர் உறுதியாக இருக்கிறார். மக்கள் அவரைப் மதித்து பாராட்டுகின்றனர். இது எனக்கு வியப்பு தருகிறது" என்றார், அவர். நேயர்கள் இது வரை "முதியோர் இல்லத்தில் பணியாற்றும் Wang Gui Fang அம்மையார்" பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீன மகளிர்" நிகழ்ச்சி நிறைவுற்றது.
|
|